எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும். ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பிறக்கிறது. நட்பு, அரசியல், சினிமா, காதல், இலக்கியம், நையாண்டி என்று பக்கத்துக்குப் பக்கம் ஒரு புது விஷயம் முளைக்கிறது. பெரும்பாலும் புன்னகைத்துக்கொண்டேதான் முழு புத்தகத்தையும் வாசிப்பீர்கள் அல்லது, அவ்வப்போது புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வாய்விட்டுச் சில நிமிடங்களாவது சிரிக்கவேண்டியிருக்கும். அல்லது ஆழ்ந்து சிந்திக்கவேண்டியிருக்கும். நல்ல எழுத்து உணர்ச்சிகளைத் தூண்டிவிடவேண்டும். ரசனை திறனைக் கூர்மைப்படுத்தவேண்டும். இதுவல்லவா வாழ்க்கை, இப்படியல்லவா அதனை ரசிக்கவேண்டும் என்று கிளர்ச்சிகொள்ளச் செய்யவேண்டும். போகனின் எழுத்து அப்படிப்பட்டது.
போகன் சங்கர் (பிறப்பு: மே 19, 1972) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். இயற்பெயர் கோமதி சங்கர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.
விருதுகள்
கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது
சுஜாதா விருது
ஆத்மா நாம் விருது (2018)
நெய்வேலி இலக்கியச் சிந்தனை விருது
கனடா இலக்கியத் தோட்ட விருது
கண்ணதாசன் விருது
இலக்கியம் என்பது வலதுசாரி, இடதுசாரி, மரபு, நவீனம், பின்நவீனத்துவம் என்பது போன்ற பல கூறுகளைக்கடந்து, உணர்வு மற்றும் அழகியலை மட்டும் முன்னெடுக்கும் ஒரு வஸ்து.... அதனால்தான், கி.ரா.வை ரசிக்கும் வாசகன், ஜெயமோகனின் சிறுகதைகளையும் ரசிக்கிறான். தி.ஜானகிராமனின் தஞ்சை மண்வாசனையில் அமிழும் ஒருத்தனால், முத்துலிங்கத்தின் கொக்குவில்லிலும் அமிழமுடிகிறது... அப்படி, புதினமா, அனுபவக் கட்டுரையா என இனம் பிரிக்க இயலாமல், இங்கே உணர்வுகளை மட்டும் சிறு சாளரத்தின் வழியே குறுகிய நேர காட்சிகளால் அழகாக காட்டுபவர், போகன். அவரின் அரசியல் மற்றும் சமூகப் பார்வைகள் இதில் கேள்வி கேட்கப்படுவதில்லை. மனித உணர்வுகளும் அது ஏற்படுத்தும் அனுபவங்களும் மட்டும் தொக்கி நிற்கிறது. அவ்வுணர்வுகள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் அதன் படிமங்களும் வாசித்து முடித்த பின்பும் வெகு நேரத்திற்கு எதிரோலிப்பது தவிர்க்கவியலாது.
இந்தப் புத்தகம் புனைவா அல்லது அபுனைவா என்பது அவரவரின் வாசிப்பு எல்லைக்கு உட்பட்டது.
ஒருபக்கம் வெடித்து சிரிக்க வைக்கும் சுயபகடி, இன்னொரு பக்கம் வேகமாக ஓடும் பொழுது சரக்கென்று முள் குத்தி ஏற்படும் வலி என்று வாழ்வு போலவே இன்பத்தையும், சோகத்தையும் சேர்த்து தருகிறது இந்நூலின் வாசிப்பனுபவம்.
நடுநிசியில் சுற்றும் பேய்களும், பல விதமான பெண்களும், சைவ சித்தாந்தம் பேசி மதம் மாறிய அண்ணாச்சியும், நாளைக்கு சாகும் என்று சொல்லி மேலும் பதினைந்து வருடம் வாழ்ந்த ஆச்சியும், புண்ணாக்கு வாங்கி வர சொன்ன மருத்துவரும், நான் ஈ படத்திற்கு மகள் சொல்லிய விளக்கமும், சாதகம் அமைய பெறாமல் மனமுடைந்த ஆசானும் , இறந்த மகனிற்கு போன் போகவில்லை என்று வருந்தும் அப்பா, இலக்கிய கூட்டங்கள் , இலக்கிய இதழுக்கு கட்டுரை எழுத வரும் அழைப்பு, காமிக்ஸ் புத்தகங்கள், கேரள பேருந்து பயண அனுபவம் என்று பலவகையான வாழ்வுகள் பெருகி வருகிறது .
இவையனைத்துக்கும் நடுவில் தான் நாமும் இருக்கிறோம்.வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் தள்ளி நின்று பார்க்கும் உள்ளுணர்வு பெற்றவனே எழுத்தாளன். அது அவன் சம்மந்தமுடைய விஷயம் என்றாலும் அவனுள் எதோ ஓன்று நடப்பது அனைத்தையும் தள்ளி நின்று பார்க்கிறது. கால கடந்த பின்பு மனம் அந்த நிகழ்வை புனைவாக நிகழ்த்துகிறது.
இத்தனை அனுபவமும் ஒருவருக்கு வாய்க்கும் என்றால் அவர் மீது மிகுந்த பொறாமை வருகிறது. ஆனால் அத்தனை அனுபவத்தையும் இது போன்று எழுத முடியுமென்றால் வாழ்வு இது போன்று பல மடங்கு அனுபவத்தை அவருக்கு அளிக்கட்டும்.
எனது தாத்தா வழி உறவுகள் வீட்டிற்கு வருவது எனக்கு பால்ய காலத்தில் மிகவும் புடிக்கும். அவர்களிடம் வற்றாத கதை எப்பொழுதும் இருக்கும். சுதந்திரம் வாங்கியது, முதல் தபால் எழுதியது, காபியை முதலில் பருகியது, முதல் பேருந்து, முதல் ரயில் என்று அணைத்து அனுபவத்திலும் ஒரு முதல் வார்த்தையை சேர்த்து கொள்வார்கள்.. அனைத்தும் அவர்களுக்கு கன்னி அனுபவம் அதனாலயே பெரு வியப்பாக சொல்லுவார்கள். அந்த கதைகள் இன்று நினைக்கும் போது பொக்கிஷங்கள்.
இந்தப் புத்தகத்தில் போகன் காட்டிய பல விஷயங்கள் எனக்கு முதல் அனுபவங்கள். அதனாலயே அவை பொக்கிஷங்கள்!
இவரின் சிறுகதை ஒன்றைக் கல்லூரி காலத்தில் படித்து, அனைவருக்கும் பகிர்ந்த ஞாபகம். நவீன குறுங்கதை வடிவத்தை முயன்று பார்த்திருக்கிறார். பத்து அத்தியாயத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. அவ்வளவு Gringeஆக இருந்தது. முகநூலில் எழுதிய பதிவுகளைத் தொகுத்திருக்கிறார். சவுக்கு சங்கர் இவர்களை விட பிரபலமாக இருப்பதில் ஆச்சரியமொன்றும் இல்லை!
Really amazing. மிகச் சிறப்பான எழுத்து நடையாலும், சொல்கிற உணர்ச்சிப் பாங்காலும் கவர்கிறார் போகன் சங்கர். வாசிப்போரை அழச் செய்வதையும், அதிர்வுறச் செய்வதையும் நிச்சயம் தடுக்க ஏலாது.