திருமண வாழ்வு ஆணுக்கு பொறுப்புகளையும் பெண்ணுக்கு அன்பை வெளிப்படுத்தும் பல வகைகளையும் கொடுக்கிறது அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதைக் கொண்டே எஞ்சிய வாழ்வின் தொடக்கம் அமையும்.
தன் தங்கை ஸ்ரீதேவியை நண்பன் சிவா மணக்க கேட்ட பொழுது ரவி மறுத்ததால் இருவருக்குள் மனகசப்பு எழுந்து நட்புக்குள் இடைவெளி விழுகிறது.
ஸ்ரீதேவியின் திருமணத்திற்குப் பார்த்த மாப்பிள்ளை அம்மாவின் பின்னே இருந்து வரதட்சணையை எதிர்பார்க்கும் செயலில் ஈடுபடுவதைப் பார்த்து வெறுத்து போனவள் அண்ணனின் தோழனான சிவாவையே திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்ததை ஏற்பதை தவிர வேறுவழி இல்லை ரவிக்கு.
திருமண வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீதேவி தன்னிடம் நோயாளியாக வந்த ஸ்ரேயாவை ரவி மணக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறாள். தந்தையின் தொழில் போட்டியால் ஸ்ரேயா பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வாழ்க்கையை வெறுத்து இருப்பவளுக்குத் தன் அண்ணன் ரவி நிச்சயம் சரியான துணையாக இருப்பான் என்ற ஸ்ரீதேவியின் முடிவு ஏற்புடையதாக இருக்கிறது.
ரவியுடனான ஸ்ரேயாவின் திருமணம் அவளின் மனகதவுகளைத் திறந்துவிடுகிறது.சராசரி வாழ்விற்குத் தன் மகள் வந்ததும் ஸ்ரேயாவின் பணக்கார தந்தை அவளை அழைத்துச் சென்றுவிடுகிறார்.
ஸ்ரேயாவின் தந்தை அளவிற்குப் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்ட பிறகு தான் மனைவியை அழைத்துப் போவேன் என்று சபதம் போட்ட ரவி அரசியலில் ஈடுபட்டு இளம் வயதிலே ஒரு மாநிலத்தின் “முதலமைச்சர்” ஆகிறான்.
தன் கடந்த காலத்தால் ரவிக்குத் தான் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே அவனுடன் வாழ்ந்த சில நாட்களின் வாழ்வை பற்றாகக் கொண்டு கனவிலே சஞ்சரிக்கும் ஸ்ரேயா தந்தையின் தொழிலில் ஈடுபட்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்கிறாள்.
தம்பதிகளின் பிரிவு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து விடுகிறது.
புதுமணத் தம்பதிகளான இரண்டு ஜோடிகளின் கட்டில் யுத்தமே முதன்மையாக இருக்கிறது.