ச. தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள். வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை.
கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை அவர்களுக்குத் தரும் வல்லமை எது? அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது?
மிக மிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களின் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அது தான் இப்படைப்புகளின் ஆதாரம்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமப்புற அடித்தட்டு மக்களின் வறுமை மிகு வாழ்வை பேசு கதைகள். முதல் கதையே வறுமையின் கொடுராத்தை நமக்கு முதல் இரண்டு வரியிலேயே சொல்லிவிடுகிறார். "எப்படி உட்கார்ந்தாலும் - பசித்தது" எண்பதுகளின் காலகட்டத்தில் இருந்த வாழ்க்கை நிலையை நினைத்து பார்ப்பது கூட இன்று கேலியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படியான ஒரு வாழ்வை கடந்து தான் இன்று சற்று பசியற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் இன்றும் கூட கிராமங்களின் குழந்தைகள் வயிற்றுக்கு அற்றவர்களாக தான் இருக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்த போது புளியங்கொட்டையை அவித்து தின்பதும் அரிசியை வறுத்து தின்பதும் தான் நொறுக்கு தீனி. இப்படி வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்வை பாவனைகள் வழியாக தான் கடக்க வேண்டி உள்ளது. இன்றைய குழந்தைகள் இடம் கூட இந்த பாவனைகள் உண்டு அவ்வளவு வறுமை சந்தித்த மக்கள் நாம். நம் மரபிலே அது உண்டு
இரண்டு இந்த கதைகளில் வரும் தீ பெட்டி தொழிற்சாலை வேலை. இந்த தொழிற்சாலைகள் அந்த மக்களின் வரமா சாபமா தெரியவில்லை. அவர்கள் வாழ்வு முழுவதும் அந்த ஆலையில் தன் கழிகிறது. ஒரு நாள் முழுவதும் தீ பெட்டி ஒட்டினால் நான்கு ரூபாய் கிடைக்கும். ஒருபக்கம் சுரண்டல் தான் என்றாலும் அவர்களின் வயிற்று பாட்டை போக்க பெட்டி ஒட்டுவதே வழி.. படாத பாடு பட்டு படித்த அடுத்த தலைமுறை ஒன்றிரண்டு பேரும் வேலையில்லாமல் அதே தீ பெட்டி தொழிற்சாலையின் வட்ட ஓட்டத்தில் வந்து சேருகின்றனர். " அப்பாவின் பிள்ளைகள்" கதையில் முதல் நாள் வேலைக்கு போய்விட்டு வந்து கதவை தட்டும் போது அதிர்ச்சி அடைந்து உறைந்து போகிறான் ஏன் என்றால் அவன் அப்பாவை போலவே பொறுமையின்றி கதவை உடைப்பது போல வேகமா தட்டுகிறான். ஒரேநாளில் வழக்கை குறித்த அவனது பார்வை தலைகீழாக மாறிவிடுகிறது.
மூன்று என்ன தான் வறுமையும் சுரண்டலும் இருந்தாலும் அந்த மக்கள் உறவுகளை நேசிப்பதையும் மனிதர்களின் இணக்கமான போக்கையும் கைவிடவில்லை. அவர்கள் தங்கள் நேர் வழியை மாற்றவில்லை. அரசும் அதிகாரமும் கிராமங்களை கைவிடப்பட வேண்டிய பாலையாக கருதும் போதும் கூட அந்த வரண்ட நிலத்தின் மக்கள் நம்பிக்கையின் நீராக இருக்கிறார்கள்.