சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்
இடப்பெயர் ஆய்வுத் துறையில் கணினி மூலம் ஆய்வுகளை நடத்தி
உலகப் புகழ் பெற்றவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் இந்த நூல் சிந்து வெளிப் பண்பாடில் வேரூன்றிள்ள திராவிடக் கூறுகளை இடப்பெயர்கள், சொற்க்கள், மேல் – மேற்கு, கீழ் – கிழக்கு ஆகிய கருதுகோள்களின் அடிப்படையில் நிறுவி உள்ளார்.
மண்ணை விட மனிதர்கள் முக்கியம். ஏனெனில், மனிதர்களை ஊடகமாகக் கொண்டே மொழியும் பண்பாடும் உயிர்ப்புடன் வளர்கின்றன. மனிதர்கள் அன்றாடம் பேசாத மொழி வாழும் மொழியல்ல. அது கும்பிடப்படாத தெய்வம் போல 'காலமானது'.
அதைப்போலவே, பாதையை விட, பயணத்தின் திசையைவிட முக்கியமானது பயணம். அதைவிட முக்கியமானவன் பயணப்பட்டவன். வரலாறு என்பது வரல் ஆறு. அதாவது வந்த வழி. ஏனெனில் ஆறு என்பது வழி.
மக்களை மையத்தில் வைக்காத வரலாறு மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும்; அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும் மட்டுமே துருவி துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும். நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதையை அல்ல. இன்னும் சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையை கூட அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை மூச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியை காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை...
இந்தத் தெளிவே தமிழ் மொழியை ஒரு மாவட்ட மொழியாய் ஒரு மாநில மொழியாய் சுருங்கிவிடாமல் ஓர் உயர் நாகரிகத்தின் மொழியாய் உயர்த்திப் பிடிக்கும் பக்குவத்தை அளிக்கும் எனக் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்களும், சிந்து சமவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றும் நிலைத்துள்ளன என்பது ஆச்சரியமான தகவல்!
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சிந்துவெளி மக்களின் மொழிக்கும், திராவிட மொழிக்கும் இருக்கும் ஒற்றுமையை விளக்கியுள்ளார்.
சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலில் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு.சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.
புத்தகம் – சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
ஆசிரியர் – ஆர்.பாலகிருஷ்ணன்
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் - 206
விலை - ₹200