'றாம் சந்தோஷ்' - புனைந்து கொண்ட பெயரிலேயே தன் பின் நவீனத்துவச் செயல்பாட்டைத் தொடங்கிவிட்டுருக்கிறார். பின் நவீனத்துவக் கோட்பாட்டிற்கு அணுக்கமாகவும், கவிதைகளில் கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்த கவலையேதுமின்றியும் வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத்தொகுப்புக் கவிதைகளின் சுவாரஸ்யம்.
- ஸ்ரீநேசன்
இக்கவிதைகள் தமிழ்க் கவிதை என்கிற மொழி விளையாட்டுக்குள் அதன் விதிமுறைகளைக் கொண்டு ஆட்டத்தை நிகழ்த்தியுள்ளன.
றாம் சந்தோஷ் (சண்முக. விமல் குமார்) (பிறப்பு: நவம்பர் 2, 1993) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சண்முக. விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார். இவரின் முதல் படைப்பு ’கழிவறைக் கோடுகள்’ என்ற கவிதை சிற்றேடு இதழில் 2014-ல் வெளியானது. சிற்றேடு, மணல்வீடு, தடம், நடு, மலைகள்.காம், பரிசோதனை, சிறுபத்திரிக்கை, ஓலைச்சுவடி, கனலி, வாசகசாலை, காலச்சுவடு, கணையாழி, நீலம் இதழ்களில் எழுதியுள்ளார். சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். இடைவெளி கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.