மிகத்தாமதமாகத்தான் காபியின் சுவை என் நாவுக்குப் பரிச்சயமானது. என் முப்பதுகளின் இறுதியில்தான் காபி ஒரு அத்தியாவசிய திரவமாக என் வாழ்வில் நுழைய ஆரம்பித்தது. ஜெர்மனியின் ஆட்டோபானில், என் தனிமையான நெடும் பயணங்களில், தூக்கத்தை தவிர்க்க எடுக்க ஆரம்பித்த எஸ்பிரசோ கோப்பையின் வழியே ஆரம்பித்த பயணம், உலகின் பல இடங்களுக்கு விரிந்தது. பிறகுதான் நம்மூர் பில்டர் காபி வந்து என் மனதோடு ஒட்டிக்கொண்டது.
காபியின் சிறப்பான சுவையைத் தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். கூர்க், சிக்மகளூர் என்று காபியின் தோற்றுவாய் வரை சென்று தேடியிருக்கிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் அடைந்திருந்த நேரத்தில்கூட, ஒரு கோப்பை காபிக்காக பெங்களூரில் இருந்து குணிகல் வரை எழுபது மைல் காரோட்டி சென்று வந்திருக்கிறேன். அப்படித் தேடித் தேடி அலைந்தது பருகிய கோப்பைகளில் பல, காபிக்கு பதில் ஏமாற்றத்தைத் தான் தந்தன. இருந்தபோதும் என் தேடல் மட்டும் தளரவேயில்லை.
இடையிலோரு முறை புதிதாக ஒரு பார்சி உணவகத்திற்கு நண்பர்களோடான சந்திப்பிற்காக சென்றிருந்தேன். பொதுவாக பார்சி உணவுவகைகள் சுவையாக இருந்தாலும், அதீத காரம் இன்றி மிதமான சுவையுடன் இருக்கும். அன்றும் அப்படித்தான். உணவு முடித்தபின், ஒரு கோப்பையில் காபியை கொண்டுவந்து வைத்தனர். அவர்களின் உணவை வைத்து, இவர்களின் காபிக்கோப்பையை சற்று அலட்சியத்துடனே எடைபோட்டு வாயில் வைத்தேன்.
அது நாவில் படர்ந்தபின்தான் சுருக்கென்று உறைத்தது அதன் சூடு மட்டுமல்ல, அத்தோடு, இதுவரை கண்டறியாத வேறு ஒரு தரத்திலான அதன் சுவை... இதுவரை சுவை என்று வரித்திருந்தவற்றை மறுவரைவு செய்யும் ஒன்று அது என்றும் தோன்றியது. அந்த கோப்பையை குடித்து முடித்ததும் இன்னும் ஒரு கோப்பையை மனம் கெஞ்சியது. தயக்கத்துடன் இன்றைக்கு இது போதும், வேண்டுமானால் இன்னொரு முறை திரும்ப வரலாம் என்று தேற்றிக்கொண்டு விலகி வரவேண்டியதாயிற்று.
பிறகு சிலமாதங்கள் கழித்து அந்த உணவகத்தைத் தேடி சென்றபோது அது மூடப்பட்டுவிட்டது என்றறிந்தபோது அது ஏற்படுத்திய ஏமாற்றமும், ஏக்கமும் அளவில்லாதது. அதற்கப்புறம் பலமுறை பெங்களூரிலும், புனே நகரிலும் வெவ்வேறு பார்சி உணவகங்களைத்தேடிச் சென்று, காபி அருந்தியபோதும், அந்த சுவை கிடைக்காமல் இன்று வரை அந்த ஏக்கமும் ஏமாற்றமும் நீங்காமலே மனதோடு தங்கி இருப்பது உண்மை.
அப்படி ஒரு ரசனையைப் புரட்டிப்போடும் ஒரு புத்தகம் தான் “ரமாவும் உமாவும்” என்ற தொகுப்பு. இதை எழுதிய திலீப் குமார் குஜராத்தி மொழியை தாய்மொழியாய்க் கொண்டவர். தமிழகத்தில் சிறுபான்மையாக வாழும் குஜராத்தி சமூக பின்னணியில் தன் படைப்புகளை உலாவவிடுபவர். சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் சமீபத்தில் இவர் எழுத்தைப்பற்றி எழுதிய பதிவில் இருந்து தேடி இவரின் இந்தத் தொகுப்பை கண்டடைந்தேன். தமிழில் மிகக்குறைவாகவே எழுதியுள்ள இவருடைய மீந்திருக்கும் தொகுப்புகளும் கிடைப்பது அறுதியாகவே உள்ளது. இன்று ஆர்ப்பாட்ட்ங்களுடன் இருக்கும் தமிழ் இலக்கிய சந்நிதானங்களின் இருப்பை எந்த அலட்டலும் இல்லாமல் அசைத்துப்பார்க்கும் எழுத்து இவருடையது. அவர், தமிழில் இனி எழுதுவதில்லை என்பது ரசனையோடு சிறப்பான வாசிப்பனுபவம் தேடும் என் போன்றவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தரும் செய்தி.
நான் இந்தத்தொகுதியில் வாசித்த ஒவ்வொரு படைப்பும், அவ்வளவு கச்சிதமாக, மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது.
இந்தத்தொகுப்பில் உள்ள முதல் குறுங்கதையான, “ரமாவும் உமாவும்” பாலியல் அடிநாதத்ததோடு ஆரம்பித்தபோதும், அங்கிருந்து மிக கச்சிதமாக தடமாற்றி மெல்லிய மனித உறவின் இழைகளை தொட்டுச்செல்கிறது.
அடுத்த படைப்பான “ஒரு எலிய வாழ்க்கை” ஆங்கிலத்தில் Black Comedy வகையில் அமைந்துள்ள கதை. நகைச்சுவையுடன் ஓடி திடும் என அதிரவைத்த முடியும் படைப்பு. அடுத்து வரும், “நா காக்க அல்லது ஆசையும் தோசையும்” குஜராத்தி சமூக பின்னணியில் அதன் வழக்கமான பிம்பங்களை ( stereotyped image) உடைத்து, உணர்வின் பின்னணியில் நம்மைக் கரைய வைக்கும் படைப்பு.
பிறகு வரும் “ஒரு குமாஸ்தாவின் கதை” மற்றும் “ அவர்கள் வீட்டுக் கதவு” ஆகியவை பெரும்பான்மை மதத்தினரின் வெறுப்பும் மதவெறியும் எப்படி மாற்று மதத்தினரை கொடிய மரணத்தில் தள்ளுகிறது என்று கூறி வாசிப்பவரை கலங்கவைத்து அவர்களின் மனசாட்சியோடு உரையாட வைக்கிறது.
நறுக்குத்தெரித்தால் போல் குறைவான பக்கங்களுடன் ,
மொத்தம் ஐந்து படைப்புகளை மட்டும் கொண்டு, வாசித்து முடிந்தவுடன் இன்னும் வாசிக்கவேண்டும் என்ற ஏக்கத்தையும் தவிப்பையும் நம்மிடம் கடத்திவிடும் தொகுப்பு இது..
மிகசிறப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கும், தவறவிடவேகூடாத தொகுப்பு இது.
"ஏனோ தெரியவில்லை
வலுவான கதவுடையவர்கள் வலுவற்ற கதவுகளைத்
தேடித் தேடி உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வீட்டுக் கதவுகளை யாருக்கும் பிடிக்கவில்லை.
அவர்களையும்கூட யாருக்கும் பிடிக்கவில்லை.
உலகம் இப்போது மிகவும் மாறிவிட்டது.
வலுவற்றது இருக்க நியாயமற்றது என்றாகிவிட்டது.
முன்பெல்லாம்
பனி பெய்யும் நள்ளிரவில்
ஏழையின் வீட்டுக் கதவைத் தட்டிக்
கடவுள் வந்து காட்சியளிப்பார் .
ஆனால்,
இப்போது கடவுள்கூட
காப்பாற்ற என்றில்லாமல்
காட்டிக்கொடுக்கவே
ஏழையின் வீட்டுக் கதவைத்
தட்டுகிறார் போலும்.
யாருக்கும் தெரியவில்லை.
யாருக்கும் தோன்றவில்லை
என்ன செய்வதென்று.
மௌனமாய் இருப்பதைத் தவிர.
சிறுமைகளின் தொடுவானம்
முற்றாகக் கவிழ்ந்துவிட்டது
நம்மீது.
நிறமிழந்த வனத்தைப் போல்
குரல் இழந்த பறவையைப் போல்
வரலாறும் நிற்கிறது அறமிழந்து.
முன்புபோல் வரலாறு
யாரையும் காப்பாற்றுவதில்லை.
யாரையும் குற்றம் சாட்டுவதில்லை.
யாரையும் தண்டிப்பதுமில்லை.
ஆனால் ஒன்று!
இன்று கதவுக்கு இப்பால் இருப்பவர்கள் நாளை கதவுக்கு
அப்பாலும்
அப்பால் இருப்பவர்கள் இப்பாலும் வந்துவிட நேரும்.
அப்போதும்
நிறங்கள் இழந்த கானகத்தைப் போல்
குரல் இழந்த பறவைகளைப் போல்
அறம் துறந்த வரலாறும்
நம் கயமையைப் பரிகசித்தபடி
சிலையாகச் சமைந்துவிடும்
இப்போதே போல்.
எனவே, நண்பர்களே,
மூடியிருக்கும் கதவுகளை
நீங்கள் பார்க்க நேர்ந்தால்,
தயவுசெய்து விலகிச்சென்றுவிடுங்கள்.
ஏனெனில்,
மாசற்ற உலகம் ஒன்று
குழந்தையின் இதயத்தைப் போல்
துடித்துக்கொண்டிருக்கக் கூடும்
அவற்றுக்குப் பின்னால்."