இத்தொகுப்பில் உள்ள சிறுவர் கதைகள் மூடநம்பிக்கையை வளர்ப்பவை அல்ல. மாறாக, கற்பனை விரிவைக் கோருபவை. எவ்வித அறிவுரையையும் சொல்ல முனைபவை அல்ல. சிறுவர் கதைகள் என்றால் அவை நிச்சயம் அறிவுரைக் கதைகளாக இருக்கவேண்டும் என்பதை இக்கதைகள் மறுக்கின்றன. சிறுவர் கதைகள் எதையாவது போதித்தே ஆகவேண்டும் என்பதல்ல, கற்பனை விரிவையும், நாட்டுப்பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் வேண்டுமென்றே மறுக்காத இயல்பான கதைகளே நம் மரபுக்கான கதைகள் என்பதை இக்கதைகள் மீள் நிறுவுகின்றன. நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்குமான இடைவெளியைத் தெளிவாக உணர்த்தும் தொகுப்பு இது.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் பாட்டியும், எதிர் வீட்டு ராதா பாட்டியும், என் அப்பாவும் சொன்ன கதைகள் என் கற்பனையின் ஊற்றுக்கண்களாக விளங்கின. தற்போது குழந்தைகளுக்கு எழுதப்படும் கதைகளில் மேற்கத்திய கலாச்சாரத்தை வம்படியாய் குழந்தைகளுக்கு ஊட்டும்படியும், கற்பனைக்கு இடம் கொடுக்காதபடியும் இருக்கின்றன. அந்தக்குறையை தீர்க்கிறது இந்தப்புத்தகம். ஹரன் பிரசன்னாவின் அசரடிக்கும் மொழியாளுமை எல்லா வயதினரையும் வாசிக்க வைத்துவிடுகிறது. குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.