அறம் என்னும் ஒற்றை தன்மையை அச்சாணியாக வைத்து புனையப் பட்ட வரலாற்றுப் புதினம் வேள்பாரி! கடையேழு வள்ளல்களில் முதன்மையானவரான பாரியின் பறம்பு மலையையும் அங்கு வாழும் மனிதர்களையும் பெரும் சங்கப் புலவர் கபிலரின் வழியே காட்டுகிறது இந்தப் புதினம்…
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை உணர்த்தும் கதைக்களம்… அப்போதைய பேரரசுகளைப் போலவே இன்றைய மக்களாட்சி அரசுகளும் மலை மக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதை கதை ஓட்டதின் ஊடாக உணரலாம்…
எவ்வியூரின் தன்மை அங்கு செல்லும் பயணத்தின் பொழுதில் கபிலருக்கும் நீலனுக்கும் நடக்கும் உரையாடல் என ஆரம்பமே நாமும் கதையுடனே பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம்…
ஒவ்வொரு அத்தியாயத்திலும் எண்ணற்ற தகவல்கள் ஊடாக கதையின் பிரவாகம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது! பறம்பின் காடுகளும் அதன் உச்சியில் அமைந்திருக்கும் எவ்வியூரும் அதற்கான மணியம் செல்வம் அவர்களின் ஓவியங்களுமாக நாம் எவ்வியூரின் சிகரத்திற்கே சென்று வந்த உணர்வு!
காலம் காலமாக நாம் பார்ப்பன மயமாக்கப்பட்ட முருகனின் கதைகளையே கேட்டு வந்து இருக்கிறோம் ஆனால் இந்த புத்தகதில் தான் முருகனும் வள்ளியும் அவர்களின் சுயத்தோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் வரும் இடங்களில் காதலும், காமமும் சரியாக அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறது! தேவையான இடங்களில் கிளைக் கதைகள் மூலம் காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி கதை சொல்லியிருக்கிறார்.
மதுரை நகரின் கோட்டையை பற்றியும், அதன் துறைமுகங்கள் பற்றியும் அங்கு நடந்த வணிகத்தைப் பற்றியும் வர்ணிப்புகள் அதிகம் துருத்திக் கொண்டு இருக்காமல் அதே நேரம் வாசகர்கள் அதன் காட்சிகளை எளிதாக உருவகப் படுத்திக் கொள்ள முடிகிறது!
கதையில் பாரி-ஆதினி, எவ்வி-சோமா, அங்கவை சங்கவை, நீலன் – மயிலா, தேக்கன், முடியன், வெட்டூர்ப் பழையன், கூழையன், இரவாதன், கருங்கைவானன், மையூர்க் கிழார், பொற்சுவை, பொதியவெற்ப்பன், குலசேகரப் பாண்டியன், கபிலர், திசைவேழர், இகுனிக் கிழவன் என நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் வாசகனுக்கு குழப்பம் வராமல் கதை சொல்லிய பாங்கினை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை!
வேந்தர்களின் போர் யுக்திகள் பறம்புப் படையினரால் எப்படி எல்லாம் முறியடிக்கப்படுகிறது என்பதையும், போர்க்காட்சிகளும் நம்மை இருக்கை நுனியில் அமர்த்தி நகம் கடித்து வாசிக்க வைக்கிறது! ஒவ்வொரு நாள் போரும், அதில் பறம்புப் படை அடைகிற வெற்றியும் வாசகர்களே வெற்றி பெற்றதைப் போல உணர வைத்தது தான் இந்த புதினத்தின் வெற்றிக்குக் காரணம் என எண்ணுகிறேன்!
கதையின் வழியே பிரதானமாக சொல்லப் பட்ட அறம் பிறழாமை திகழ்தாலும், சமவெளி மக்களுக்கு இருக்கும் ”நமக்கு எல்லாம் தெரியும், மலை மக்கள் காட்டுமிராண்டிகள் அவர்களுக்கு அறிவை நாம் தான் கற்பிக்க வேண்டும்” என்கிற இறுமாப்பை உடைத்து ”அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே” என்னும் பாடத்தை பாரியின் மூலம் உணர்த்தி இருக்கிறார் சு.வெ!
இவ்வளவு பெரிய கதைக் களத்தை இத்தனைக் கதை மாந்தர்களையும் வைத்து தவம் போல் கதையை உருவாக்கி அதை வாசகர்களுக்கு கொடுத்து இருக்கிறார் சு.வெ. அனைவரும் நிச்சயம் வாசித்து அனுபவிக்க வேண்டிய ஒப்பில்லா புதினம் வேள்பாரி!
புத்தகம் – வீரயுக நாயகன் வேள்பாரி
ஆசிரியர் – சு.வெங்கடேசன்
பதிப்பகம் – விகடன் பிரசுரம்
பக்கங்கள் – 608+800 மொத்தம் 1408
விலை – ₹1350