கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ. ராஜேந்திரன் (அக்டோபர் 10, 1938 - செப்டம்பர் 1, 2002) தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம் - அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது.
எனது கல்லூரி நாளில் என் தமிழ் ஆசிரியை எனக்கு அறிமுகப் படுத்திய எழுத்தாளர், மீரா.
கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள் என்னும் காதல் கவிதைத் தொகுப்பு வழியே அவரின் ஹைக்குவை விடச் சற்று நீண்டும் உரைநடை கவிதை அளவுக்கு நீளாமலும் இருக்கும் கணத்த வரிகளில் எத்தனை முறைப் பயணித்தாலும், அத்தனை முறையும் நம் உதட்டின் ஓரம் சிறு புன்னகையை பூக்கச் செய்யும் படைப்பாளிக்கு என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன்..,
நெடும் நாட்களுக்குப் பிறகு இந்த "குக்கூ" கவிதைத் தொகுப்பு எதேச்சையாக கண்ணில் பட வேகமாக படித்து முடிக்க முற்பட்டு தோற்கடிக்கப்பட்டேன். அளவில் மிகச் சிறியப் புத்தகம். மற்ற படைப்புகள் போல இந்த புத்தகத்தை வகைப் படுத்திவிட முடியாத அளவுக்கு தினசரி வாழ்க்கையின் சிறு நிகழ்வுகளையும், நம் ஊரையும், மக்களையும், அரசியலையும், இயற்க்கையையும் நகைசுவையோடு அவரின் கண்களுக்கு தெரிவதை எழுதியிருக்கிறார்.