எம்.கோபாலகிருஷ்ணன் (டிசம்பர் 2, 1966) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் மொழியாக்கங்களும் செய்கிறார். திருப்பூர் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் படைப்புக்களால் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.
மனைமாட்சி வாசித்தேன். என்ன ஒரு அனுபவம்!!. கனகச்சிதமான வடிவ அமைதி, காமத்தின் நுண்ணிய அக உணர்வுகளை, மனித மனச் செயல்பாட்டின் புரிந்து கொள்ள முடியாத ஆழங்களை அசாதாரணமான நுட்பத்துடன் சொன்ன ஒரு படைப்பை சமீபத்தில் வாசித்ததாக நினைவில்லை.அபாரம் !! சாந்தி போன்ற volatile நபர்களை என் நெருங்கிய வட்டாரத்திலே கண்கூடாக பார்த்திருக்கிறேன் . ஒருவித psychotic ஆக நடந்து கொள்ளும் பெண்கள். அப்போதெல்லாம் யோசிப்பேன். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் ? இவர்களுக்கு ஏதாவது பின் கதை இருக்குமா என்று. ஆசிரியர் அதை மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். பால்ய வயதில் பாசத்துக்கும் , கவனத்திற்கும் ஏங்கும் ஒருத்தியாக இருந்திருக்கிறாள் சாந்தி . இறுதியாக குழந்தைகளுடன் தியாகு எடுக்கும் அந்த முடிவு , சாந்திக்கு ஒரு perfect coup de grace .
இந்த மூன்று கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது,வைத்தி ராஜத்தின் கதை தான். அவர்களின் ஊடலும் கூடலும் “மோகமுள்”யமுனாவையும் பாபுவையும் நினைவுபடுத்தின. அதனாலோ என்னவோ , ஒரு செவ்வியல் அந்தஸ்தை தந்து விடுகிறது.
மகாதேவன் போன்ற ஒருவனை எப்படி ஒருவள் காதலிக்க முடியும் என்று வியப்பாக இருந்தது. நாவலின் ஒரு பகுதியில் மங்கை அதற்கான பதிலை சொல்கிறாள்
''ஒரு ஆம்பளை கோயில் மண்டபத்துல ஒக்காந்து அத்தன பேர் முன்னாடி கண்ணால ஜலம் விட்டு தன்னையே மறந்து அழறான்னா, அவன் கிட்ட என்னமோ சொல்ல முடியாத ஒரு துக்கம் இருக்குன்னு தான அர்த்தம். என்னால அப்பிடி அழ முடியாது. இருக்குற எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே அடக்கி வெச்சுண்டு . ஆம்பளைங்க எல்லாருமே ஒரே ஜாதிதாங்கறது என்னோட தீர்மானம். ஆனா சாரங்கபாணி சந்நிதில கண்ணீர் வழிய உக்காந்திருந்த நீங்க வேற மனுஷன்னு எனக்குத் தோணித்து. அதான் நானே வந்து பேசினேன்..’
காமமும் அது சார்ந்த குற்றவுணர்வும் மூன்று கதைகளிலும் மையச் சரடாய் விரிகிறது, எது பாவம் ? என்னும் கேள்வியை கதை மாந்தர்கள் ஏதோ ஒரு புள்ளியில் தங்களை கேட்டவாறே உள்ளனர். காமம் ஒரு இளைப்பாறலாகவும் அதே சமயம் ஒவ்வொரு கூடலுக்கு பின்னரும் அவர்கள் மனம் தாள முடியாத குற்றவுணர்வில் கவிகிறது
வினோதினி ஓரிடத்தில் இப்படி சொல்கிறாள்
இந்த இளமையும் அழகும்தான் எல்லோரையும் பயன்படுத்துகிறதா? பதற்றம் கொள்ளச் செய்கிறதா? மனத்திடத்தையும் துக்கத்தையும் உடல் எந்த நொடியிலும் கடந்துவிடக்கூடும் என்று அஞ்சுகிறார்களா? சாதுவாக சலசலத்தோடும் ஆற்றுவெள்ளம் எந்த நேரத்திலும் கட்டற்றுப் பெருக்கெடுத்து விடக்கூடும் என்று பயந்து அணை போடத் துடிக்கிறார்களா? மற்றவர்களை ஏன் சொல்ல வேண்டும். நானே எத்தனை நாள் இந்தத் துக்கத்தைப் பேணிக்கொண்டு இருக்க முடியும். முதல் இரண்டு நாட்கள் எதையும் குடிக்காமல், உண்ணாமல் கிடந்தவள் ஐந்தாம் நாள் மதியம் பசி பொறுக்காமல் தட்டில் வைத்த உப்புமாவை எடுத்து வாயில் வைத்து மெல்லும் போதே அம்மாவிடம் கொஞ்சம் சர்க்கரை போடும்மா என்று கேட்டு வாங்கித் ட்டல்லவா சாப்பிட்டேன். பசி எல்லாவற்றையும்விட வலியது. எதற்காகவும் காத்திருக்காதது. உடம்பும் அப்படித்தானா? எல்லாவற்றையும் விழுங்கி எதற்காகவும் நிதானித்திருக்காது எதையும் பொருட்படுத்தாது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு மாதிரியா?
“நதி, பெண் போல் அசைந்து நகர்கிறது” என்று முடியும் மனைமாட்சி நாவலின் கதைமாந்தர்களுக்கு இக்குறுந்தொகை பாடலின் படிமம் சரியாக பொருந்தும் தானே?
காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்றாள் மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.