ஏன் இந்த ஆய்வு? பிரபஞ்சம் புதிர்கள் நிறைந்தது. ஏன், எப்படி, எப்போது போன்ற விடை காண இயலாத சில கேள்விகளைத் தன்னுள் அடைகாத்துக்கொண்டிருப்பது. அவதாரங்கள், ஞானிகள், மதவாதிகள் போன்றோரெல்லாம் இக்கேள்விகளுக்கான பதில்களாகத் தத்தம் அனுமானங்களை மட்டுமே பதிவு செய்தார்கள். அனுமானங்கள் உண்மை ஆகிவிடா. அனைத்திற்கும் மூலகாரணமானவர் கடவுளே என்பதும், விதியால் கட்டுப்படுத்தப்படுவது உயிர்களின் வாழ்க்கை என்பதும், கர்மவினைக்கேற்ப மறுபிறப்பும் சொர்க்கநரகங்களும் வாய்க்கின்றன என்பதும் வெறும் அனுமானங்களே. ஆன்மிகவாதிகளின் இடையறாத பரப்புரை காரணமாக, மக்களில் பெரும்பான்மையானவர்கள் கடவுளையும் அவரோடு தொடர்புடைய பல கற்பனைக் கதைகளையும் நம்புகிறார்கள்.