அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வுகள், சாதிக்கு எதிரான போர்கள், அவரின் அரசியல் சாதுரியம் மிக்க முன்னெடுப்புகள், மதமாற்றம் நோக்கிய பயணம், கட்சி அடிப்படையிலான தேர்தல் அரசியலில் அவருக்கு இருந்த ஊசலாட்டங்கள், இந்து சட்ட மசோதா சார்ந்த போராட்டம், அவரின் தற்காலத்தாக்கம் எனப்பல தளங்களைத் தொட்டுச் செல்லும் சிறிய, செறிவான நூல்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பொது வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஒரு விமர்சனம் கலந்த வரலாற்று பார்வையில் எழுதியுள்ளார் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா.
தனிப்பட்ட முறையில் எனக்கு பாபாசாஹேப் பற்றிய பல அறியப்படாத செய்திகளை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
பல்வேறு நெருடலான சந்தர்ப்பங்களிலும் மக்கள் நலன் என்ற ஒற்றை குறிக்கோளுக்காக பல சூழ்நிலையை சகித்துக்கொண்டும் சமர்த்தியமாகவும் கையாண்டுள்ளார் என்பது இந்நூலின் மூலம் தெரிகிறது. இந்திய அரசியிலமைப்பு சட்டம் பற்றிய செய்திகளும் மதமாற்றம் பற்றிய செய்திகளும் அம்பேத்கரின் ஆளுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
அவர் தேர்தல் அரசியலில் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனதற்கு ‘வர்க்க பார்வையா’ அல்லது ‘தலித் அரசியலா’ என்ற ஊசலாட்டமும் இயக்கத்தை கட்டமைக்க போதிய ஆர்வம் செலுத்தாமல் போனது தான் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
அவரின் மதமாற்றத்திற்கு காரணங்களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனிதொகுதிகள் பெறமுடியாமையும் இந்து சட்ட மசோதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கபடுகிறது .
நவீன இந்தியாவை “தனிமனித ஜனநாயகம்” சார்ந்து கட்டமைத்ததிற்கு புரட்சியாளரின் பங்களிப்பு அளப்பரியது. நேருவும்-அம்பேத்கரும் அரசியலமைப்பில் காந்திய பார்வை கலக்காமல் பார்த்து கொண்டனர் என்பது அப்போது நடந்து விவாதங்கள் மூலம் தெளிவுபடுகிறது.
இதை தண்டி இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளும் சுவாரசியமான தகவல்களும் விமர்சனத்துடன் விளக்கப்பட்டுள்ளது. புரட்சியாளர் எழுதியதை மட்டும் வாசித்து வந்த எனக்கு இந்நூல் ஒரு புது அனுபவம் தான், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட ஏற்றுக்கொள்ள கடினமாக தான் இருந்தது. அம்பேத்கரின் பொது வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் தோழர்கள் அவசியம் வாசிக்கலாம்.
எனக்கு இந்த புத்தகம் அம்பேத்கார் மீது புதிய பார்வை கொடுத்தது... அம்பேத்கார் கூட சாதி கட்சி நடத்துகிறார் என்று விமர்சிக்கக் பட்டார்.. இதை படித்தவுடன் வி. பி. சிங் மேல் உங்களுக்கு காதல் வரலாம்.. இதை எழுதிய பிரெஞ்ச் கரார் மீது மரியாதை வரலாம்.. தமிழில் படிக்க வேண்டிய மிக முக்கிய புத்தகம்.. முடிந்தால் original version ஆங்கிலத்தில் இருக்கிறது வாங்கி படிக்கவும்.
இந்தப் புத்தகம் தமிழில் வெளிவந்ததுமே படிக்க வேண்டுமென விரும்பினேன். கிண்டில் பதிப்பு தற்போது தான் வெளியாகி உள்ளது. அது வரைக்கும் பொறுக்க முடியாமல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து படித்து முடித்து விட்டேன். அம்பேத்கரைப் பற்றி பள்ளிப் பருவத்தில் மிக மேலோட்டமாகப் படித்தது. அதன் பிறகு இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர் பற்றிய செய்திகள் அல்லது அவர் எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். இதில் மிக முக்கியமான கட்டுரை “இந்தியாவில் சாதிகள்”. இது கிண்டில் அன்லிமிடெட் திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. மிக அருமையானப் புத்தகம். தொழில் பாகுபாடு உலகில் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் தொழிலாளர்கள் பாகுபாடு இந்தியாவில் மட்டும் தான் உள்ளது என சாதி பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து எழுதி இருப்பார். அப்போதே அம்பேதகர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு வாகாக இந்தப் புத்தகம் அமைந்தது.
இந்தப் புத்தகம் நிச்சயமாக அம்பேத்கரின் வரலாறு அல்ல. அம்பேத்கரை முழுதுமாக ஆய்வு நோக்கில், ஒரு வரலாற்றுப் பார்வையில் அணுகும் நூல். சாதிக் கொடுமைகளைக் கண்டு, அனுபவித்து வந்த அம்பேதகர், சாதியை ஒரு ஆய்வு நோக்கில் அணுக ஆரம்பிக்கிறார். சாதி எப்படி தோன்றியது, இது எப்படி இயங்குகிறது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எப்படி இது அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என ஆய்ந்து பல்வேறு கட்டுரைகளையும் எழுதுகிறார் அம்பேதகர்.
முதலில் காந்தியின் செயல் திட்டங்களில் பெரிதும் கவரப்பட்ட அம்பேத்கர், அதன் பிறகு சில காலத்தில் அவரோடு முரண்படுகிறார். சாதி பற்றி காந்தியின் பார்வை பல்வேறு காலகட்டத்தில் மாறியிருந்தாலும், காந்தி சாதியை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டிய ஒன்று என எண்ணியதில்லை. அதனால் அம்பேத்கர் அவரோடு முரண்பட்ட இடங்கள், அவருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் போன்றவை பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
அதிகாரம் கையில் இருந்தால் சமூகத்தில் நாம் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என அறிந்து கொள்ள அம்பேதகருக்கு வெகு காலம் பிடிக்கவில்லை. அவருடைய அரசியல் பாதை பற்றி விலாவாரியாகவே விளக்குகிறது இந்தப் புத்தகம். வெள்ளையர் அரசை முற்றிலுமாக எதிர்த்தது காங்கிரசு அரசு. ஆனால் அம்பேத்கருக்கு அரசியல் விடுதலையை விட, சமூக விடுதலையே பிராதனமாக இருந்தது. அதனால் வெள்ளையர் அரசாங்கத்தோடு அவர் செய்து கொண்ட சமரசங்கள், அதற்கான காரணம் பற்றி இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார் ஆசிரியர்.
நேருவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விடுதலைக்குப் பின் அவரது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிமைகளை எவ்வாறு பெற்றுத் தந்தார், அங்கு அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர். அவர் கொண்டிருந்த அரசியல் சமூக பார்வைகள், அவை அடைந்த மாற்றங்கள் என பலவற்றையும் இந்த நூலில் பார்க்க முடிகிறது.
மதம் பற்றிய அம்பேத்கரின் பார்வையும் காலப்போக்கில் மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. இந்து மதமும் சாதியும் பிரிக்க முடியாதது என அறிந்த அம்பேத்கர், அதனை விடுத்து வேறு எந்த மதத்திற்கு செல்லலாம் என ஆய்வு செய்கிறார். பல்வேறு மதத் தலைவர்களுடன் பேசியபின், இறுதியாக புத்த மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அதற்கான காரணமும் இந்தப் புத்தகத்தில் தெளிவாக சொல்லப்படுகிறது.
இறுதியாக தற்காலத்தில் அம்பேத்கரின் தேவையும் தாக்கமும் என்கிற பகுதியில், அம்பேத்கருக்கு எவ்வாறு வலதுசாரி இயக்கங்கள் காவி சாயம் பூச முற்படுகின்றன, மற்ற அரசியல் இயக்கங்கள் அவரது பிம்பத்தை தங்களது ஆதாயத்திற்காகப் பயன்படுத்திகின்றன, பிம்பத்தைத் தாண்டி அம்பேத்கரது கொள்கைகளுக்கான தேவை என்ன என்பதையும் குறிப்பிடுகிறது இந்தப் புத்தகம். மொத்தத்தில், அம்பேத்கரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி வரலாற்றுப் பார்வையின் அணுக வேண்டும் என நினைப்பவர்களுக்கான சரியான புத்தகம். புத்தகத்தைக் கச்சிதமாக தமிழில் மொழி பெயர்த்துள்ள பூ.கொ. சரவணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
This book helps us to get know Amebhkar more through someone else's word. It introspect the various works of Ambedkar that enables us to understand Ambedkar closely.