ஆசிரியர்: சு.வெங்கடேசன்.
#கதாபாத்திரங்கள்:
#பறம்பின் வீரர்கள்:
வேள்பாரி ((பரம்பின் தலைவன்)), நீலன், தேக்கன், முடியன், வேட்டூர் பழையன், உதிரன், இரவாதன், வாரிக்கையன், காலம்பன், இகுளி கிழவன், ((பரம்பின் தளபதிகள்))
இவர்களுடன் பெரும்புலவர் கபிலர்.
ஆதினி (பாரியின் மனைவி) அங்கவை மற்றும் சங்கவை (மக்கள்) மயிலா,
#வேந்தர் படை:
குலசேகர பாண்டியன், பொதிய வெற்பன் ((பாண்டிய பேரரசன் மற்றும் இளவரசன்))
சோழ வேழன் மற்றும் செங்கன சோழன் ((சோழ அரசன் மற்றும் இளவரசன்)
உதியஞ்சேரல் ((சேரன்))
மையூர் கிழார்,கருங்கைவாணன், திசைவேழார், மற்றும் அந்துவன்
பொற்சுவை ((பாண்டிய இளவரசி) சுகமதி ((அவள் தோழி))
#கதைக்களம்: பறம்பு மலை பகுதிகளான எவ்வியூர், ஆதிமலை, காரமலை, நாககரட்டு,இரலிமேடு. மற்றும் குளவன்திட்டு
பாண்டியரின் மதுரை,வைப்பூர் துறைமுகம்.மற்றும் வெங்கல் நாடு
போர்க்களம் :தட்டியங்காடு,மூஞ்சல்
#வகைப்பாடு :வரலாற்று புதினம்
#பக்கங்கள்: முதல் தொகுதி 608 பக்கங்கள்
இரண்டாந்தொகுதி:800 பக்கங்கள்.
++++++++
பறம்பு மலையையும் அதன் பதினான்கு குடிகளையும், அதிலுள்ள இயற்கை வளங்களையும் நேசித்தும், சுவாசித்தும் பாதுகாத்துக்கொண்டிருந்தவன் குறுநிலமான்னன் பாரி. அவன் வேளிர் குலத்தலைவனாகையால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டான்.அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவன். சங்ககால வள்ளல்கள் மற்றெவரையும் விட சிறந்த வள்ளல் தன்மை கொண்டவன் பாரி என சங்ககால புலவர்களால் பாடி போற்றப்பட்டவன் அவன்.
************
மூவேந்தர்களான குலசேகர பாண்டியன், உதியஞ்சேரல் மற்றும் செங்கன சோழன் ஆகியோர் பாரியின் புகழ் கண்டு பொறாமை அடைந்தவர்களாக இருப்பதுமன்றி பறம்பின் இயற்கை வளங்களை எப்படியேனும் கவர்ந்து கொள்ளவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
பறம்பின் தேவவாக்கு சொல்லும் விலங்கு, ஒரு வகை பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் சோமபானம், மீனை மயக்கமடையச்செய்து மீன் பிடிக்க ஏதுவாக்கும் ஒரு வித விதை, ஆட்கொல்லி மரங்கள், பசியையே தூண்டாமல்ஆற்றலைத்தரும் கிழங்கு வகைகள், இத்தனைக்கும் மேலாக பறம்பு மலையில் "பாழி" என்ற இடத்தில் தரையில் புதைத்து வைக்கப்பட்டு காலங்காலமாக வேளிர்குல தலைவர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் வைடூர்ய மணிகள் ஆகியன மூவேந்தர்களுக்கு வாணிபத்திற்காகவும், தங்கள் அரசின் கருவூலத்தை பெருக்கிக்கொள்ளவும் ஏதாவது ஒரு வகையில் தேவைப்படுகிறது.
வேள்பாரி இத்தகைய இயற்கை வளங்களை நேசிப்பவன், உயிர் மூச்சாய் சுவாசிப்பவன். "இயற்கை அள்ளி கொடுக்கிறது, நாங்கள் அதை ரசித்தும் உணர்ந்தும் வாழ்கிறோம். அந்த இயற்கையை விற்கவும், வாங்கவும் நீங்கள் யார்?" என மூவேந்தர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது மட்டுமல்லாமல், தன்னிடம் வணிகம் பேச வந்த சேர நாட்டு அமைச்சன் கோளூர் சாத்தனின் கைகளை தன் தளபதியை கொண்டே வெட்டி அனுப்புகிறான்.
பறம்பின் குழந்தைகளைப்போலவும், தெய்வங்களை போலனவும் குறவை கூத்தில் தெய்வ வாக்கு சொல்லும், தெய்வ வாக்கு விலங்குகளை ((தேவாங்கு)) பாண்டியன் வேளிர் குடிகளில் ஒன்றான திரையர்களை வைத்து கடத்தி மதுரைக்கு கொண்டு செல்லும���போதும், வேளிர் குடி மக்களை அடிமைகளாய் யவனர்களுக்கு பாண்டியன் விற்க முயன்ற போதும்,பறம்பின் வீரர்களை கொண்டே, பாண்டியர்களின் முக்கியத்துறைமுகமான வைப்பூர் துறைமுகத்தையும்,,அதில் நின்று கொண்டிருந்த யவன, பாண்டிய நாவாய்களை கொளுத்தி, நகரையே எரிக்கிறான்.
இதனால் கடும் கோபங்கொண்ட சேர, சோழர்கள் பறம்பு மலையின் வட, தென் திசையிலும், பாண்டியன் பறம்பின் கீழ் திசையிலும் தனித்தனியாக படையெடுக்கிறார்கள். சோழனின் யானைப்படை பறம்பின் வீரர்களால் வட்டாற்றில் முழுவதுமாக அழிக்கப்படுகிறது. செங்கனச்சோழன் உயிர் தப்பி ஓடும் நிலை ஏற்படுகிறது.
பறம்பின் இன்னொரு பக்கம் தோகை நாய்கள் என்னும் வெறி பிடித்த காட்டு நாய்களோடு களமிறங்கிய சேரனின் தோகைநாய்கள் மட்டுமல்ல,படைகளும் பெரும் அழிவை சந்திக்கின்றன. சேரர் படைத்தளபதி எஃகலாடன் பறம்பின் வீரர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறான்.
மூவேந்தர்களான சேர,சோழ, பாண்டியர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். வேள்பாரி மீது தனித்தனியே படை நடத்தி தோல்வியடைவதைவிட, மூவேந்தர்கள் மூவரும் ஒன்றாக களமிறங்கி பாரியை எதிர்கொள்வது என முடிவெடுக்கிறார்கள். மேலும் பாரியை பறம்பு மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு வரச்செய்து, அவனது படைகளை முறியடித்து பறம்பு மலையை வெற்றி கொள்வது எனவும் முடிவெடுக்கிறார்கள்.
இதற்காக மூவேந்தர்கள் படைகள் தரைப்படை, தேர்ப்படை,குதிரைப்படை, வாள்படை அனைத்தும் ஒன்றிணைகிறது. அனைவரும் இணைந்த சுமார் நான்கரை இலட்சம் போர்வீர்களுக்கு பாண்டிய தளபதி கருங்கைவாணன் சேனாதிபதியாகிறான். போர் நடக்கும் இடமாக பாண்டிய நாட்டுக்கு கட்டுப்பட்ட சிற்றசை ஆளும் மையூர் கிழார் என்பவரின் பகுதியான வெங்கல்நாட்டை சேர்ந்ததும் காரமலையை ஒட்டியுள்ள, செம்மண்ணும், ஈக்கி மண்ணும் நிறைந்ததும், காவி நிற ஓணான் ஒன்று மட்டும் உயிர்வாழும் கொடும் கட்டாந்தரை பகுதியான தட்டியங்காடு எனும் பகுதி தேரிவு செய்யப்படுகிறது.
மூவேந்தர்கள் தட்டியங்காட்டிலிருந்து பல காத தூரத்தில் தனித்தனியாக தங்கள் கூடாரங்களையும், பாசறைகளையும் அமைத்துக்கொள்கிறார்கள். மன்னர்கள் கூடாரம் நிறைந்த பகுதி அரண்போல் காக்கப்படுகிறது. இதற்கு மூஞ்சல் என்று பெயரிடப்படுகிறது.
பாரிவேளையும் அவன் சிறுபடைகளையும் பறம்பு மலையிலிருந்து, சமதளத்தில் போர்புரிய வைப்பதற்காக, இரவோடு இரவாக பாரியின் தளபதிகளில் ஒருவனும், மாவீரனுமான "நீலன்" என்பவனை பறம்புமலை பகுதியான நாககரட்டு என்ற இடத்திலிருந்து, படுகாயப்படுத்தி, மூவேந்தர்களின் பாதுகாப்பு அரணான மூஞ்சலில், ஒரு கூடாரத்தில் சிறை வைக்கிறான் கருங்கைவாணன்.
கடல் போல் விரிந்த,,அனுபவமும, போர்த்தந்திரங்களும் நிறைந்த மூவேந்தர் படை ஒரு புறம்; மிகவும் சிறிய, முறையான போர் விதிகளின்படி போர் செய்யத்தெரியாத, பாரிவேளின் பறம்பு வீரர்கள் ஒரு பக்கம்; மூவேந்தர்களின் மூஞ்சலில் சிறைப்பட்டு கிடக்கும் தன் மாவீரன் நீலனை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயம் ஒரு பக்கம். "இரண்டிலொன்று பார்த்துவிடுவது" என களமிறங்குகிறார்கள் இரு பக்க வீரர்களும்.
நடந்தது ஆறே நாள் போர்தான். பாரிவேள் கடைசியில்தான் களமிறங்குகிறான். மற்ற நாட்களில் குளவன்திட்டு என்ற இடத்திலிருந்து படையெடுப்பை பார்வையிட்டு, கூவல்குடி என்ற என்ற ஆதிக்குடியினர் உதவியோடு பறம்பின் வீரர்களுக்கு கூவல்ஓசை மூலம் அறிவிப்புக்களை மட்டுமே செய்கிறான் பாரிவேள். மூவேந்தர் படை சின்னாபின்னமாகிறது. தட்டியங்காடு எங்கும் குருதி ஆறாய் ஓடுகிறது.
போரில் மூவேந்தர்கள் தரப்பில் சேனாதிபதி கருங்கைவாணன், வெங்கல்நாட்டு சிற்றரசர் மையூர்கிழார், பாண்டிய இளவரசன் பொதியவெற்பன், செங்கனசோழன் ஆகியோர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இலட்சக்கணக்கில் இருந்த வீரர்கள் எண்ணிக்கை வெறும் ஆயிரத்திற்குள்ளாக குறைந்து தேய்கிறது.குலசேகரபாண்டியனும், உதியஞ்சேரலும் உயிர் பிழைத்தால் போதும் என களத்தைவிட்டு தப்பியோடுகின்றனர்.
பறம்பு வீரர்கள் தரப்பில் ஆசான் தேக்கன், இரவாதன், வேட்டூர் பழையன், ஆகிய சில உயிரிழப்புக்கள் இருப்பினும், பறம்பு வீரர்கள் அடித்த அடியில் நீலன் வெற்றிகரமாக மீட்கப்பட்டதுடன்,,பறம்பு மலையின் இயற்கை வளங்களும், செல்வங்களும் காக்கப்படுகின்றன. மூவேந்தர்கள் சந்தித்த பெரும் தோல்வியால், இன்னும் பல ஆண்டுகள்-நூற்றாண்டுகள் பறம்பு மலை வேளிர் பற்றி கனவில் கூட எண்ணமுடியாத நிலை ஏற்படுகிறது. பாரிவேள் வெற்றிவீரனாக தன் மக்களோடு குறவை கூத்தாடுகிறான்.
பாரியின் புகழைப்பற்றி கேள்விப்பட்டு அவனைக்காணவும்,,சிலநாட்கள் அவனோடு தங்கி இருக்கவும் வேண்டி பறம்புமலைக்கு வருகிறார் பெரும்புலவரான கபிலர். வந்தது முதல் பறம்பு மலையின் இயற்கை அழகில் உள்ளம் கொள்ளையிடப்பட்டவராகவும், பாரியின் மகள்களான அங்கவை,,சங்கவை ஆகியோருக்கு எழுத்தறிவிக்கும் ஆசானாகவும், கொற்றவை கூத்தின் பெருமைகளை பார்த்தறிபவராகவும், நடைபெற்ற தட்டியங்காட்டு போரில் பறம்பின் பக்கம் நின்ற ஒரு பார்வையாளராகவும் இருக்கிறார் பெரும்புலவர் கபிலர்.
##இப்புதினத்தை படிக்கும்போதே பிரமித்து போன புதினத்தின் சில பகுதிகள்.
*எத்துணை வகை மரங்கள், செடி கொடிகள்:
பனம் பூ, நாக்கறுத்தான் புல், ஏழிலைப் பாலை,வேங்கை மரம், தனைமயக்கி மூலிகை,அத்தாபொறுத்தி மூலிகை ,கடம்ப மரம்,கொல்லிக்காட்டு விதை,நாகப்பச்சை வேலி, தீக்களி, நெருஞ்சிப்பூ (எ)ஞாயிறுதிரும்பி,பால் கொறண்டி செடி, சென்றிக்கொடி,வண்டுக்கடி மரம்,வெற்றி இலை (வெற்றிலை),கரந்தைச்செடி, மலைப்பருத்தி,இராவெரி மரம்.
*எத்துணை உயிரினங்கள் :
தேவவாக்கு விலங்கு ((தேவாங்கு) ), சக்கரவாகப்பறவை,
காக்காவிரிச்சி ((ஒரு வகை வெளவால்)) அறுபதாங்கோழி,செம்மண்ணுளி , எரிவிரியன், ஊதுசுருட்டை,நண்டுதின்னி,கொடிமூக்கன்(( பாம்பு வகைகள்)) பேரெலி,சுண்டாப்பூனை,ஈயல் எறும்பு,அழுகுரற் பறவை.
பிரமிக்க வைக்கிறது ஆசிரியரின் தேடல். இந்த பெயர் அறியா செடிகொடிகள், விலங்குகள் ஆகியவற்றை நமக்கு கடத்தியதோடு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பறம்புமலை காடுகளுக்குள்ளே நம்மை பயணப்பட வைத்திருக்கிறார் ஆசிரியர்.
** தெய்வ வாக்கு விலங்குகள் வேளிர் குலத்தின் குல அடையாளம். ஆனால் அவை பாண்டியனுக்கோ வணிக நாவாய்கள் திசைமாறாமல் பயணப்பட உதவும் திசைகாட்டிகள். இந்த விலங்குகள் இருந்தால் இவற்றின் உதவியோடு சரியான திசை அறிந்து பாண்டிய நாவாய்கள் கடலாடி, வணிகத்தை பெருக்க முடியும். அதன் மூலம் யவனருக்கே சவால் விடும் வகையில் பாண்டியத்தின் கடல் வணிகம் அமையும்.
எனவே இவ்விலங்குகளை பாரிவேள் அறியாமல். , அங்குள்ள "திரையர்கள்" என்னும் இன்னோர் குடிமக்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, பாண்டிய நாட்டுக்கு கொண்டுவர முயல்கிறார் குலசேகரபாண்டியன். அப்படி திரையர்கள் சுமார் இருபது விலங்குகளை தூக்கி ஓடும்போது, பறம்பின் ஆசான் தேக்கன், 'காடு அறியும்" பயிற்சி பெற தன்னுடன் வந்த மாணாக்கர்களோடு பார்த்துவிடுகிறான். அதன் பின்னர் விலங்குகளை தூக்கி செல்பவர்களை துறத்தி ஓடுகிறார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். அந்த ஓட்டத்தை படித்துக்கொண்டிருக்கும் நமக்கு வியர்க்கிறது, மூச்சுவாங்குகிறது. புதினத்தின் மிகச்சிறந்த பகுதி இதுதான்.
***"முருகன்-முருகப்பெருமான்" என்றாலே, நாம் அறிந்தது, அவர் சிவ-பார்வதியின் இளைய மகன், விநாயகர் அவர் அண்ண��். மயில் அவரது வாகனம். வேலாயுதன் என்று பக்தர்களால் கொண்டாடப்படுபவர் என்பதுதான்.
இந்த புதினத்தில் முருகனின் இந்த தெய்வீக தோற்றங்களை முற்றிலுமாக உடைத்து, அவரை வேளிர் குலத் தோன்றலாக, வீரன் "முருகு"வாக நமக்கெல்லாம் அறிமுகம் செய்துள்ளது முற்றிலும் புதிய ஒன்றாகும். பாரிவேள், பெரும்புலவர் கபிலருக்கு சொல்லிக்கொண்டு வரும் "முருகன்-வள்ளி" காதல் கதைகள் ஒன்றொன்றும், அற்புதம். ��தே போல் "வள்ளி"என்ற பெயர் ஏன் வந்தது? அவளது தாயார் சக்கரைவள்ளிக்கிழங்கு பயிரிடும்போது வலியெடுத்து பிறந்ததால் "வள்ளி" என்று பெயரிடப்பட்டாள், என்று ஆசிரியர் தெரிவிக்கும் தகவல் மிகவும் ருசிகரமானதும், புதியதும் ஆகும்.
**** பறம்பு நாட்டின் புகழ் பெற்ற "குறவை கூத்தை" கபிலர் பார்க்கும்போதே, புதினத்தை படிக்கும் நமக்கு பறமபில் உள்ள அத்தனை ஆதிகுடிகளும், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஏதோ ஒரு வகையில். பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை அக்குடிகள் பாடலாக பாடும் கதைகள் வாயிலாக நமக்கு தெரிவித்துவிடுகிறார் ஆசிரியர். அதற்கேற்றார்போல் கூடல் நகரின் அகுதையின் கதை, செம்பா தேவி கதை,நாகர் குடிகள் கதை ஆகியவை சோகம் பொதிந்த கதைகளாய் நமக்கு சொல்லப்படுகின்றன.
*****புதினத்தின் இரண்டாம் தொகுதி முழுவதும் மூவேந்தர்கள் -பாரிவேளின் பறம்பநாட்டு வீரர்களுக்கிடையேயான போர் பற்றியதாகும். போரில் பறம்பு வீரர்களின் இயற்கையை முன்னிருத்தி செய்யும் போர் உத்திகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பறம்பின் ஒரு விளிம்பில் வரும் சோழனின் யானைப்படையை, யானைகள் தாகத்தினால் நீர் பருக வரும் வட்டாற்று ஓடையில் குருதி குடிக்கும் அட்டைகளை பறம்பு வீரர்கள் போட்டு, அதை யானைகள் பருக, யானைகளின் துதிக்கைகளுக்குள் அட்டைகள் சென்று குருதியை உறிஞ்ச, யானைகளுக்கு மதம்பிடித்து அவைகளே சோழர்படையை அதகளம் செய்வது இதற்கு எடுத்துக்காட்டு.
****** "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" என்று நாம் இன்று வரை அறிந்த ஒரு புகழ்பெற்ற நிகழ்வுதனை, இயற்கையோடு காதலும் சேரும் வகையில் படைத்துள்ளார் ஆசிரியர்.
திருமணமான புதிதில் தன் மனைவி ஆதினியை, பகலிலே கதிரவன் ஒளியை வாங்கி இரவிலே அதை உமிழ்ந்து, எண்ணிலடங்கா விளக்குப்போல் தோற்றமளிக்கும் "இராவெரி மரத்தை" காண அழைத்துச்செல்கிறான் பாரி. மலையில் சரிவுப்பாறைகள் கொண்ட இடத்திற்கு அழைத்துச்செல்லும்போது தேரை சமவெளியில் நிறுத்தி செல்கிறான் பாரி. மேகக்கூட்டங்கள் இரு மலைகளுக்கிடையில் இறங்கி விட்டதாலும், பெரும் மழை ஆரம்பித்துவிட்டதாலும் அந்த மரத்தை காணமுடியாமல், சரிவில் உள்ள மலைக்குகையில் அன்றைய இரவை கழிக்கின்றனர். காலையில் வந்து தேரை காணும்போது, தேரின் சக்கரத்தில் முல்லைக்கொடி பற்றியிருப்பதை காண்கிறாள் ஆதினி.வேள்பாரிதான் இயற்கையயை வணங்கி நேசிப்பவனாயிற்றே. முல்லைக்கொடி தொடர்ந்து படர ஏதுவாக தேரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தன் மனைவியோடு நடந்து தன் இருப்பிடத்தை அடைகிறான் வேள்பாரி.
***இந்த புதினத்தின் மற்றுமோர் கூடுதல் சிறப்பு, மணியம் செல்வம் அவர்களின் வண்ணமயமான மணி மணியான ஓவியங்கள்.நாம் படித்து ரசிப்பதோடு, அழகான ஓவியங்களின் மூலமாகவும் புதினத்திற்கு கூடுதல் சுவை கூட்டுகிறார் மணியம் .
என்னுரை:
"இயற்கை வளங்கள் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய அருஞ்செல்வங்களாகும். அதை அழிக்க எவரேனும் முற்பட்டால், வேள்பாரி போன்ற வீரர்கள் எக்காலமும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்" என்பது புதின ஆசிரியர், மூவேந்தர்கள் மூலமாக இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும்.
பிற்கால சோழர்கள், பாண்டியர்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளான கல்வெட்டுக்கள்,பட்டயங்கள் போன்றயவே அரிதினும் அரிதாகிவிட்ட நிலையில், 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வேளிர்குல தலைவனை பற்றிய வரலாற்றை, உண்மைத்தன்மை குறையாமலும், விறுவிறுப்போடும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய படைப்பாகும்.
வீரயுக நாயகன் வேள்பாரி ----காலத்தை வெல்லும் ஆகச்சிறந்த படைப்பு.
என் மதிப்பீடு : 5//5.