இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத்தக்க சில நூல்களுக்கு விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்திலும் ஊடுபாவாக இழைந்து செல்வது அக்காலகட்டத்தில் விவாதங்களினூடாக மேலெழுந்து வந்த தலித்திய விமர்சனச் சிந்தனை. முந்தைய பத்தாண்டு காலத்தில் தலித்திய விமர்சனக் கருத்துக்களைத் தொகுத்துக்கொள்வதற்கு இந்நூல் தனது பங்களிப்பை ஆற்றக்கூடும்.
ராஜ் கௌதமன் (ஆகஸ்ட் 25, 1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்கியவர்.