“நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது. நாம் அதிமாகச் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வுவயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனிதநேயமே நமது தேவை. புத்திசாலித்தனத்தைவிட அன்பும் மென்மையுமே தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். ஆகவே, புதிய உலகிற்காக போரிடுவோம்! அது ஒரு நாகரீகமான உலகம்!” – சார்லி சாப்ளின்
“தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்” – செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல்
சமகாலச்சூழலில், அறமற்ற பெரும்பாதையில் இந்த மானுடப்போக்கு திசைப்படுத்தப்படும் இந்நேரத்தில்… காலங்கடந்து உயிர்த்து நிற்கும் வார்த்தைகளாக ஸீயாட்டீல் மற்றும் சாப்ளின் இவர்களின் சொற்கள் ஒவ்வொன்றும் இன்று வெளியொலிக்கிறது. வாழ்வின்மீதும் இயற்கையின்மீதும் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் எல்லா மனங்களுக்குமான பற்றுதலை இவைகள் சுமந்திருக்கிறது.
வாஷிங்டன் ஜனாதிபதிக்கு 1852ல் செவ்விந்திய சமூகத்தலைவன் ஸீயாட்டீல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கமும், தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் இறுதிக்காட்சியில் சாப்ளின் பேசும் உரையின் தமிழ்மொழிபெயர்ப்பும்… ஒன்றிணைந்த புத்தகம் “இருதயத்தை நோக்கி இருஉரைகள்”
Chief Seattle lived from approximately 1790 to 1866, in the Pacific Northwest region of what is now the United States. He was a chief of the Suquamish and the Duwamish and was present at treaty negotiations that took place with the white settlers in the 1850s. It was at one of these negotiations that Chief Seattle delivered a speech in his native tongue, a speech that has since—in a variety of forms—served as the basis of ecological movements around the world.
'சூழலியலைக் காக்கத் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த எல்லா உயிர்களுக்கும்' என்ற படையலோடு தொடங்குகிறது இந்தப் புத்தகம். 1852 ஆம் ஆண்டுச் செவ்விந்தியச் சமூகத் தலைவன் ஸீயாட்டில் எழுதியதைத் தமிழில் பிரசன்னா ராமஸ்லாமி மொழிபெயர்த்த ஒரு கட்டுரையும், தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் பேசும் உரையை விசுவாமித்திரன் மொழிபெயர்த்த இன்னொரு கட்டுரையும் இந்த நூலை நிறைக்கின்றன. 'வாஷிங்டனில் இருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாகச் செய்தி அனுப்பி இருக்கிறார்' என்று தொடங்கும் முதல் உரை இயற்கையின் மீது மனிதம் கொண்டிருந்த, கொள்ள வேண்டிய காதலைப் பேசுகிறது. அதிகாரத்தை நோக்கி மனம் அடைய வேண்டிய மாற்றத்தை அடுத்த உரை நகர்த்துகிறது. சமகாலச் சூழலுக்கு மிக முக்கியமான தேவையாக இந்த ஈர் உரைகளும் இருந்தாலும் 1800களிலேயே சூழலியலைக் காக்க வேண்டிய தேவை இருந்ததைச் சொல்லும் முதல் உரை ஆச்சரியமானது. அந்த ஆச்சரியத்தோடு சேர்ந்து இன்னொரு ஆச்சரியம் 20 பக்கமே இருந்தாலும் இந்த இரு உரைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து புத்தகமாக்கி இருக்கும் தன்னறம் பதிப்பகத்தின் அக்கறை. கருவிற்கு ஏற்ற அட்டைப்படம், இன்னுமொரு மொழிபெயர்ப்பு முன்னுரை, இரண்டு கவிதைகள் என வடிவமைப்பில் காட்டிய நேர்த்தி பதிப்பகத்தை நேசிக்கச் சொல்கிறது. தொடர்ந்து இயங்குங்கள்.
புத்தகத்தில் உள்ள இரண்டு கவிதைகள்.
சிறுமி கூவுகிறாள்: நான் போகிற இடம் எல்லாம் நிலாகூடவே வருகிறதே. சிறுவன் கத்தினான்: இல்லை. நிலா என்கூட வருகிறது. இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு திருப்பத்தில் பிரிந்தனர். வீட்டிற்குள் நுழைந்து, உடன்வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள். நிலா இருக்கிறதா? இருக்கிறதே. அவள் சின்ன அலையைப் போல் சுருண்டாள். அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி. எல்லோர் கூடவும் போன நிலா பிறகு எங்கே போனதென்று எல்லோருக்கும் தெரியவில்லை.
- தேவதச்சன்
வெயில் தானாகவே சொல்லிக் கொள்கிறது ஒரு மழை அடிச்சா நல்லா இருக்கும்.
- வண்ணதாசன்
நல்லா இருங்க தன்னறம் மற்றும் மொழிபெயர்ப்பாளர் குழு.