பள்ளிக்கூட உபாத்தியார்கள் தங்கள் மாணவர்கள் முன்னுக்கு வர பலவகைகளிலும் உதவுகிறார்கள், ஆனால் சமுதாயத்தில் அவர்களுக்கு மேன்மையான இடமும் தகுதியான பாராட்டுக்களும் அனேகமாக கிடைப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும், விஞ்ஞானம், சரித்திரம், அரசியல் என்று பல துறைகளில் வெற்றி பெறுகிறவர்கள் கூட தங்களுக்கு அடி நாட்களில் அடித்தளம் அமைத்து தந்தவர் கதை ஞாபகம் வைத்துக் கொண்டு அவர்கள் பெயர்களை சொல்வதில்லை. நன்றி குரலை அடிக்கடி காரணமில்லாமல் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிற தமிழர்களிடையே இப்படி!
மாறாக பலவிதங்களிலும் வெற்றி பெற்று நன்றி மறவாதே திரும்பி வந்து தன் பழைய உபாத்தியாரையும், சில நாட்கள் தனக்கு உணவு அளித்து தன் குடும்பத்தில் ஒருவனாக நடத்திய வாத்தியாரின் மனைவியையும் எண்ணி திரும்பி வந்தால் எப்படி உணர்வான் என்ன செய்வான் என்று சொல்லி பார்க்க எனக்கு ஆசை. இதை உணர்ச்சிவசப்பட்டு விடாமலும் மெலோட்ராமாட்டிக்காகச் செல்லாமல் சொல்லி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் எழுத ஆரம்பித்தேன்.
இந்த நாவல் என் மனத்திலிருந்து கல்வி பற்றிய சிந்தனைகளையும் சேர்த்து நாவலாக எழுத முயன்றேன், கோவை என்கிற கதாபாத்திரம் வந்தவுடன் நாவலுக்கு ஒரு புது பரிமாணம் வந்தது போல தோன்றியது எனக்கு. எனக்கு மிகவும் உதவினா.
உணர்ச்சிப் போராட்டங்களாக வெளியாகி இருக்கக்கூடிய இரண்டு சரடுகளை உணர்ச்சிவசப்பட்டு விடாமல் சொல்லி விடுவதும் கையாளுவதும் சற்று சிரமமாக தோன்றினாலும் ஒதுங்கி நின்று பட்டும்படாமலும் சொல்லிவிட முடிந்தது. நன்றி, காதல், தியாகம் இரண்டுமே மெலோட்ரமாடிக் விஷயம்தான். மெலோட்ராமாவைத் இருக்கத்தான் நான் பெரும் பாடுபடவேண்டியதாக இருந்தது.
கல்வி பற்றிய சிந்தனைகளை பிரச்சாரம் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை, அவை கோதையின் சிந்தனைகளாகவும் ராமானுஜனின் நினைவுகளாகவும் இடம்பெறுகின்றன.
நிஜ மனிதர்களில் சிலரை நாவலில் கொண்டு வருகின்ற காரியத்தை சுப்ரமணிய பாரதியார் கூட செய்து பார்த்திருக்கிறார். அதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு, சரிவர அளவுக்கு மீறி சரிதையாகப் போய்விடாமல் இருப்பதாகவே நினைக்கிறேன்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக, இலக்கிய ரசனை அதிகம் அற்ற சமுதாயத்தை இலக்கியம் என்று எழுத முன் வருகிற மாதிரி இந்தியாவில் சில விஞ்ஞானிகள் இருந்து வருகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். அவர்களில் ஓரிருவரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்களுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்வது நியாயம் என்று தோன்றுகிறது.
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
தனக்கு அவ்வளவு முக்கியமில்லாதது என்று கருதி அதை விட்டு இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்காமல் போனால் மனதில் எங்கோ ஒரு இழையில் அது துடித்துக் கொண்டே இருக்கும்.
படிப்பு, புகழ் என்ற வட்டத்தில் சிக்கினாலும் அதன் மையப்புள்ளியாகத் தன்னை உருவாக்கியவர்களிடம் இருக்கும் அன்பு எங்கெங்கே சுற்றினாலும் அவர்களையே தேடிவர வைத்துவிடும்.
உலக அளவில் போற்றத்தக்க ஆராய்ச்சியாளனான ராமானுஜன், பல காலம் அமெரிக்காவில் இருந்து தனக்கென ஒரு பெயரை பெற்ற பிறகு சொந்த மண்ணுக்கு வர விரும்பி இந்தியா வந்து விடுகிறான்.
ஒன்பது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவனுக்கு இருக்க இடம் கொடுத்தவர்களையும் பள்ளியில் இவனை ஊக்கப்படுத்தி மேற்கல்வியைத் தொடர வைத்தவரையும் சந்திக்க வருகிறான்.
ராமானுஜனுக்கு ஆசிரியராக இருந்த கோதண்டராம அய்யங்கார்,வேறு ஊரில் இருப்பதைத் தெரிந்து வந்தவனுக்கு ஆச்சரியமான வரவேற்பு கிட்டுகிறது.. அவன் வருகைக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த அவரின் குடும்பத்தைத் தனது குடும்பமாகக் கருதி அங்கேயே இருக்க முடிவெடுக்கிறான்.. அவரின் மகள்களில் ஒருவளான கோதை மாற்றுக்கல்விக்காக அந்த ஊரில் உருவாக்கிய பள்ளியில் வேலைச் செய்வதை அறிந்தவன் தனது துணையிருந்தால் சிறப்பான மாணவர்களை உருவாக்கலாம் என்ற லக்ஷ்யத்தோடு அவர்களை வழிநடத்துபவனாகச் சேர முடிவெடுக்கிறான். அச்சிறு கிராமத்தின் பள்ளி நாடறியும் நிலைக்கு உயர்த்துகிறான்.
கோதண்டராமனின் கடைசி மகள் ராதா, ராமானுஜத்தை பெற்றவர்களின் பேச்சில் இருந்தே அடையாளப்படுத்திக் கொண்டு சிறுவயது முதல் தன் மனதில் அவனைப் பற்றிய ஆசையை வளர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த கோதை அவர்களின் திருமணத்தை நடத்த பெரியவர்களைத் தூண்டுகிறாள், தன் மனதில் அவனைப் பற்றிய நினைவுகள் இருந்தாலும்.
தான் செய்த தியாகம் ராமானுஜனுக்குத் தெரியாமலே இருப்பதால் மெல்ல அவளின் மனது சகஜநிலையில் இருந்து மாறுப்படுகிறது,அவனின் அமெரிக்க பேராசிரியர் வந்த சில நாட்களிலே கோதையைப் புரிந்து கொண்டவர் சொல்லும் ஒரு வார்த்தை அவளைப் பழையபடி மாற்றிவிடுகிறது.
வசீகரச் சிரிப்பிற்குச் சொந்தக்காரியான கோதை மீண்டும் சிரிப்பை வெளிக்காட்டுகிறாள்.
மனதின் நுணுக்கத்தை ஒருபோதும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.