மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத்தின் சிறுபகுதிதான்.
பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்கள்... எல்லோருமே நம் பார்வையில் வாழ்பவர்கள் தான். தினமும் இவர்களை கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையிலும் இவர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன.
இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில காட்சிகளை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கடத்தும். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது வாழ்க்கை பற்றிய உங்கள் கற்பிதங்கள் மாறவும் செய்யலாம்!
நம் கழிவறையில் மெத்தனமாக கழிக்கும் tooth brushயும் sanitary napkin-னும் எத்தனை மனிதர்களின் உயிரை காவு வாங்குகிறது தெரியுமா?
"எனக்கு போதும்" என்று நம் தட்டில் மிச்சம் வைக்கும் சோற்றை விளைவிக்க ஒரு விவசாயி படும் பாடு அனைவருக்கும் தெரியும். அவன் விளைவித்த நெல்லை அரசியாக்க ஒருவன் நெருப்பில் படும் பாடு நமக்கு தெரியுமா?
IT Park-இல் ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டு கண்ணாடி துடைக்கும் அந்த இளைஞனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லையா?
வறுமையை நோயாகக் கொண்டு வாழ்பவர்கள், அந்த வறுமையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் இடைத்தரகர்கள் என நம் அன்றாட வாழ்வில் நம்மோடு பயணிக்கும் மனிதர்களின் அந்தர வாழ்க்கையை அலசுகிறது இந்த புத்தகம்.