புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.
புதினம் போலன்று சிறுகதை. பெரும்பாலும் புதினம் திரைப்படம் போலிருக்கும். யார் நல்லவர் யார் தீயவர் என்ன நடந்தது அதன் விளைவென்ன என்று தனித்தனியாய்த் தெள்ளத்தெளிவாய்க் காட்டி உணர்ச்சியைத் தூண்டும். ஆனால் சிறுகதை அப்படியிருப்பதில்லை
பெரும்பாலும் சிறுகதை என்பது படிப்பவரின் உணர்ச்சியைத் தூண்டுவதில்லை உணர்வை எழுப்புகின்றன. மனத்தை விம்மச் செய்வதில்லை விரியச் செய்கின்றன. அனைத்தையும் விவரிப்பதில்லை வரிகளுக்கிடையில் படிக்கப் பயிற்றுவிக்கின்றன
பல சிறுகதையை அவற்றின் முழுவீச்சை என்னால் உணரமுடிவதில்லை என்ற மனக்குறை அண்மையில் வருத்தமளித்துக் கொண்டிருந்தது. அந்நிலையில் எழுத்தாளர் Narsim அண்ணன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டதே இந்நூல். சிறுகதையை இப்படியும் அணுகலாம் என்று சிறிது வெளிச்சம் பாய்ச்சும் நூல் இது
ஆகத்தேர்ந்த படைப்பாளிகள் 12 பேரின் 12 சிறுகதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கதையையும் எந்தக் கோணத்தில் பார்த்தால் ஆசிரியர் சொல்ல வரும் உட்கருத்து விளங்கும் என்று 12 கட்டுரையால் விளக்கேற்றி வைக்கிறார் விமலாதித்தமாமல்லன்
வரிகளை மட்டுமே படிக்கும் கண்கள் அதை மட்டுமே மனத்தில் காட்சிப்படுத்திக்கொண்டு வரும். ஆனால் நின்று பொறுமையாக கவனித்தால் மட்டுமே அந்தச் சூழலும் காலமும் மனநிலையும் முன்னால் நடந்திருக்கக்கூடியவையும் பின்னால் நடக்கவிருப்பவையும் மனக்கண்முன் தோன்றும். அவ்வளவும் சேர்ந்ததே ஒரு சிறுகதை
எழுதப்பட்டிருப்பது சிறு துளி விவரிப்பு மட்டுமே. எழுதப்படாதவை வாசகரின் அறிவிற்கும் கற்பனைக்கும் ஏற்ப விரியும் வளரும். ஆனால் என் போல் சிலருக்கு அது எளிதில் கைவருவதில்லை. அதற்கு விமலாதித்த மாமல்லன் போல் சிலர் தேவைப்படுகின்றனர்.
இந்நூல் படித்த பிறகு வரக்கூடாத சிந்தனை ஆனால் வந்து தொலைத்த சிந்தனை இதுவே - இந்நூலில் இருப்பது போல நாம் படிக்கும் அனைத்துச் சிறுகதைக்கும் ஒவ்வொரு கட்டுரை இருந்தால் எவ்வளவு எளிமையாக இருக்கும். ஆனால் அது கூடாது. ஏன் கூடாது என்கிறீர்களா? ஏனெனில் எல்லாவற்றையும் எளிமையாக்கித் தந்து கொண்டே இருந்தால் அறிவு மழுங்கிப்போகும் நுட்பம் உணரும் திறனற்றுப் போகும் கற்பனை வறண்டு போகும்
கலைப்படைப்பெனச் சொல்லப்பட்டும் உணர்ச்சியைத் தூண்டும் யாவும் அறிவை மழுங்கச் செய்பவையே. அறிவையும் மனத்தையும் விரிவு செய்யும் படைப்பே கலைப்படைப்பு. ஆனால் அத்தகைய படைப்புக்கள் எளிமையாக இல்லாத காரணத்தினாலேயே பலரால் தேர்ந்தெடுக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. இந்நூல் படித்தபின் அத்தகைய எண்ணம் மாறும் என்பது உறுதி
திரு. விமலாதித்த மாமல்லன் அவர்கள் தமிழின் சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறார்... ஒவ்வொரு பானைக்கும் ஒரு சோற்றினை எடுத்து பரிமாறுகிறார்... பிறகு பானை சோற்றையும் எடுப்பது அவரவர் விருப்பம்...
நிலை என்னும் பூமணி அவர்களின் கதையின் விளக்கம் நெஞ்சை தொட்டு விட்டது... சமூகத்தின் அடுக்குகளுக்கு பெயர்கள் மாறுகிறது... அதன் செயல்பாடுகள் அப்படியே இருக்கிறது...