இப்புத்தகத்திற்குத் தலைப்பு “பொண்டாட்டி”க்குச் சமர்ப்பணம் என்று வைத்து இருந்தால் முழுவதும் ஒத்துபோய் இருக்கும்.
டிக்டாட் பெண் சொல்வது மாதிரி சொன்னால் “ஏன்டா .. நீங்க அக்கா தங்கச்சி கூடத் தானே பொறந்தீங்க, உங்களை நம்பி வந்த பொண்ணை இப்படித் தான் அம்மா பேச்சை கேட்டு சந்தேகப்பட்டு அடிச்சு துரத்தி விடுவீங்களா டா. இதனால் குடும்பத்தில் எவ்ளோ சண்டை தெரியுமா?” என்று கதையின் மையத்தைச் சொல்லலாம்.
பல கிளைக்கதைகள் அனைத்தும் பொண்டாட்டிகளை எப்படி வகை வகையா கணவர்கள் கொடுமைபடுத்தி அவளின் உணர்வுகளை உதாசீனப்படுத்தித் தன் கையை விட்டு அவள் சென்ற பிறகு தான் செய்த தவறுகளை எல்லாம் காலம் உணர்த்துவதைப் பொறுமையாகப் பார்க்கும் பார்வையாளராக நிற்பதை விவரிக்கிறது.கிளைக்கதைகளின் முடிச்சு சேரும் இடமாகத் தீட்ஷாவின் வாழ்வு இருக்கிறது.
கணவன் சந்தேகப்பட்டு எண்ணிலடங்கா கொடுமை செய்வதைப் பொறுத்துக் கொண்டே இருக்கும் திட்ஷா அவன் விவாகரத்து முடிவை எடுக்கும் போதும் ஏற்றுக்கொண்டு தனித்து இருப்பவளின் வாழ்வில் மீண்டும் ஒருவனின் குறிக்கீடு,குழந்தை பிறந்த பிறகு அவனும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் “போங்கடா” எனக்குக் கல்யாண ராசியே இல்லை என்று படிச்சு கலெக்டராக மக்களுக்குச் சேவை செய்து அவளைக் கீழ்தரமாகப் பேசிய ஆட்களைத் தன் காலடியில் காலம் தள்ளிவிடுவதைப் பொறுமையாகப் பார்க்கிறாள்.
மகன் எங்கே மனைவி தீட்ஷா பின்னாடி போயிட்டுத் தன்னைத் தனித்துவிடுவானோ என்று பயந்து தேவகி செய்த கொடூரங்களுக்குக் கடைசிக் காலத்தில் தீட்ஷாவின் நிழலிலே அடைகலமாக வேண்டிய சூழலை இரண்டாவதாக வந்த மருமகள் உண்டாக்கி விடுகிறாள்.
எழுத்தாளர் சமகாலத்தில் உள்ளே நுழைக்கவில்லை மனைவியின் நடத்தையைச் சந்தேகப்படக் கடிதங்களை மட்டும் காரணமாக்கி எழுதி இருக்கிறார்.நவீன வஸ்து “டிக்டாட்” எல்லாம் வரும் காலத்தில் எழுத்தில் வரலாம்.
குறைந்த பட்சம் ஒரு 120 பக்கம் சுயபுலம்பல் “ஏன்டா... இப்படிப் பொண்டாட்டிகளைப் புரிந்து கொள்ளாமல் கொடுமை படுத்துறீங்க” என்று செல்கிறது.
எப்பொழுதும் பெண்களை அதிகமாகக் கொடுமைபடுத்திக் கடைசியில் மன்னிப்பு கேட்டவுடன் இதயம் நெகிழ அணைத்து கொள்வாள் என்று எழுதும் டெம்ப்ளேட்டில் இருந்து எழுத்தாளர் இந்தக் கதையில் வெளிவந்ததே பெரும் ஆறுதல்.