எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பல மடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன். பொள்ளாச்சி சாலையில் அதிகாலை நேரம் ஒரு ஆண் சடலம் சாலையோரம் கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகிலுள்ள காமாட்சிபுரம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, அங்கிருந்து எஸ்.ஐ அபு மற்றும் பாலு இருவரின் கள விசாரணையிலிருந்து கதை துவங்குகிறது. இறந்தவன் யார்? மரணத்துக்குக் காரணம் கொலையா, விபத்தா? போஸ்ட்மார்டம் அறிக்கை, மகஜர், மேன் மிஸ்ஸிங் தகவல், கொலைக்கான பின்னணி, சந்தேகிக்கும் நபர
ஒரு இளைஞனின் மரணம் மூலம் ஆரம்பித்து அது ஆணவக்கொலையா அல்லது அரசியல் கொலையா என்கிற ரீதியில் பயணமாகும் கதை,கொங்கு மண்டலத்தில் உள்ள சாதிரீதியான அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் எளியமக்களின் இன்னல்களும்,நூற்பாலைகளில் சிக்கிச் சீரழியும் பெண்களும் மற்றும் அப்பெண்களின் குடும்பத்தினரின் அவலங்களையும் அத்துடன் NGO நிறுவனங்களின் செயல்பாடுகளை வழக்கறிரான இரா.முருகவேள் சிறப்பான முறையில் புதினமாக எழுதியுள்ளார்.
ஒரு கொலையில் தொடங்கும் கதை, கொங்கு மண்டலத்தில் பரவலாக காணப்படும் சாதி, கம்யூனிசம், தீண்டாமை, சேரி, மில் தொழிலாளர்கள் படும் துன்பம், சமூக மூடநம்பிக்கைகள், சமூக ஆர்வல குழுக்கள் ஆகியவற்றின் குறுக்கு வெட்டு பார்வையாக விரிகிறது.
காவல் நிலையத்தில் தொடங்கும் விசாரணை வழி பயணப்படும் கதை, தன் கிளைக்கதைகள் மூலம் சாதிய அடக்குமுறைகளையம் ஒடுக்குமுறைகளையும் ஒருசேர காண்பிக்கிறது. சில இடங்களில் தெரியும் தொய்வை சரிசெய்தால் சிறப்பான ஒரு ஆவணமாக இப்புத்தகம் அமையும்.
வெறுமனே ஒரு துப்பறியும் நாவல் என செம்புலத்தை குறுக்க முடியாது. அந்த எண்ணத்தில் அணுகினால் நமக்கு ஏமாற்றம்தான். ஆனால் ஒரு கொலை வழக்கின் விசாரணையின் போக்கில் திரு.முருகவேள் காட்டுவது சமூகத்தில் நிலவும் சாதிய பொருளாதார அடிமைத்தனங்களின் நவீன முகத்தை. அவ்வகையில் இது நல்ல பதிவு.
பொள்ளாச்சி அருகே இருக்கும் காமாட்சிபுரம் என்ற சிறிய ஊரின் அருகே வாய்க்கால் ஓரமாக ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அதனை விசாரிக்கத் தொடங்குகிறார்கள் காமாட்சிபுரம் காவலர்கள். இறந்தவன் யார்? யாரோடு அவனுக்கு என்ன பிரச்சனை? என நீளும் நாவல், இக்கொலையின் பின்னே இருக்கும் சாதீய அமைப்புகள், அரசியல் ஆதாயங்களுக்காக அவர்கள் செய்திடும் காய் நகர்த்தல்கள், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வியல், ஒடுக்குவோர் - ஒடுக்கப்படுவோர் இடையேயான பிரச்சனைகள், மனித உரிமை மீறல்கள் நிகழும் போது தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை தொட்டுச் செல்கின்றன.
திருப்பூர் - கோவை - பொள்ளாச்சி கொங்கு மண்டலமே நாவலின் நிலப்பரப்பு. ஒரு துப்பறியும் நாவலைப் போல தொடங்கினாலும், கதை சொல்லல் முறை வெகு இயல்பாகவே இருக்கிறது. எவ்வித எதிர்பாரா திடுக்கிடும் திருப்பங்களையும் கொடுத்து ஒரு சாகச கதையினைப் போல் இதனை மாற்றிட எழுத்தாளர் முயற்சிக்கவில்லை. பல கதாப்பாத்திரங்கள் வருகின்றன. நாவலுக்கு தேவையான அளவிற்கு அவர்களுக்குண்டான அறிமுகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாவலில் அங்கங்கே இடம் பெற்றிருக்கும் நாட்டுப்புற பாடல்களும், கிராமிய கதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன. உண்மை அறியும் குழுவிடம் பேசிடும் இளங்கோ என்ற இளைஞனின் ஆணையுறுதி கல்லூரி, பள்ளிகளில் மாணவர்களின் மனதில் ஊடுருவியிருக்கும் சாதீய பாசமும், குலபெருமை காப்பதாய் சொல்லி சக மாணவர்களின் மீது காட்டிடும் வன்மத்தையும் வெளிபடுத்துவதாய் இருந்தது. அரசியல் ஆதாயம் வேண்டி, தன் அதிகாரத்தை அப்பகுதியில் நிறுவுவதற்காக இளைஞர்கள் சாதி என்ற வலைக்குள் எப்படி எல்லாம் பின்னப்பட்டிருக்கிறார்கள், எப்படி எல்லாம் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள் என பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை எதுவும் பிரச்சார தொனியில் இல்லை. அனைத்துமே நாவலின் கதாபாத்திரங்கள் வழியாகவே பேசப்படுகின்றன. அதில் எதன் பக்கம் செல்ல வேண்டும், எவருடைய நீதி முக்கியம் என்பதையெல்லாம் வாசகனே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான். விசைத்தறி தொழிலாளர்களின் வேதனைகள் குறித்து நான் வாசிப்பது இதுவே முதன்முறை. வறுமையிலும் இது போன்ற வாட்டி வதைக்கும் பணிச் சுமைக்கு இடையிலும் நாட்களை நகர்த்துபவர்கள் தான், நம் வாழ்க்கை எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை உணரச் செய்கிறார்கள்.
Very good story about hardship and problems faced by a community in a kongu belt. It doesn't take any sides and explains from both the sides. Worth read to understand the shift to handloom from agriculture and much more.