இந்தியாவிலும் உலக அரங்கிலும் புதுத் தமிழ் இலக்கியத்தின் மேன்மையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராகவே இருந்துவரும் க. நா. சுப்ரமண்யம் தமிழ் நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இலக்கிய பத்திரிகை வெளியீடு ஆகிய துறைகளில் மைல் கல்கள் பதித்திருக்கிறார். தற்காலத் தமிழ் எழுத்தில் அதனைப் புரிந்திருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ க. நா. சு. வின் விமரிசனக் கண்ணோட்டத்திற்கும் முன்மாதிரிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள். எழுபத்தி மூன்றாவது வயதிலும் அயராது உழைக்க வேண்டியுள்ள இவரது 'விமரிசனக் கலை' ஒவ்வொரு தமிழ் வாசகரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்...
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
சிறுகதையோ, நாவலோ, கவிதையோ இலக்கியமாகக் கொள்ளப்படுவது அவைகளை எழுதுபவரைவிட வாசிப்பவர்களின் இலக்கியப் ப்ரஞ்யயை, இலக்கியம் சார்ந்த அறிதலைப் பொறுத்ததே.
அதனாலேயே இப்புத்தகம் இலக்கிய விமர்சனம் செய்ய முற்படுபவர்களுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு வாசகருக்குமானதுமாகிறது. விமர்சகனும் அடிப்படையில் ஒரு வாசகன்தானே?
இந்தப் புத்தகம் மேற்ச்சொன்ன அத்தகைய இலக்கிய அறிவைக் கற்பதில் நிச்சயம் ஒரு துவக்கப்புள்ளியாக அமையும்.
பண்டைத் தமிழ் எழுத்துமுறையிலிருந்து, இன்று தமிழ் இலக்கியத்தில் உபயோகத்திலிருக்கும் உரைநடை மொழி உருவாகி வளர்ந்துவரக் காரணமாக இருந்த எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர்களின் புத்தக மேற்கோள்கள் நமக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் அருமையாகத் தொகுக்கப்படிருக்கும் புத்தகம் இது.
மேலும், சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் என்றால் என்ன? எப்படியிருந்தால் அவை சிறுகதையாகவோ, நாவலாகவோ, கவிதையாகவோ உருப்பெறும் என்பதை, நம் தமிழ் இலக்கிய முன்னோடிகள் (கு.ப.ரா., மௌனி, புதுமைப்பித்தன் etc.,) முதல், பல உலக இலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள்வரை மேற்கோள்கள் காட்டி நல்ல புரிதலை இந்தப் புத்தகம் ஏற்படுத்த முயல்கிறது.
வாசகர்களுக்கு மட்டுமின்றி, எழுத விழைபவர்களுக்கும் இப்புத்தகம் பெரும் திறப்பாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.
அனைத்து எழுத்தாளர்களுக்குமே தன்னளவில் எழுத்து - இலக்கியம் என்னதென்று விளக்கிட ஆசையிருக்கும்போலும். தமிழில் நவீன - தீவிர இலக்கியத்தின் எழுத்தாளர்களின் முன்னோடியான க.நா.சு அவரளவில் இலக்கிய விமர்சனம் என்னதென்று விளக்க முயன்று, அதன்வழியே ஒவ்வொருமுறையும் இலக்கியம் என்னதென்றே சொல்லிச் செல்கிறார். இலக்கிய வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள் போலவே இலக்கிய விமர்சனமும் இலக்கியத்தின் ஒருவடிவமே என்கிறார். முறையான சீரான இலக்கிய விமர்சனங்கள் மட்டுமே தமிழில் எழுத்தின் வளத்தை மேம்படுத்தும் என்கிறார். அதற்கு புதிய எழுத்தாளர், பழம் எழுத்தாளர் போன்ற பாகுபாடுகள் கூடாது. அது ஒரு காவலனைப் போல் தகுதியானவற்றை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்கிறார். பழமை என்பதனாலேயே சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் நாம் இலக்கியமாகக் கருதத் தேவையில்லை என்கிறார்.
தமிழில் நவீன எழுத்துமுறை தோன்றியதன் வரலாற்றைக் கூறுகிறார். இங்கே வசன நடைகள் தோன்றியதன் விதம் தோன்றியதை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியங்களுக்குப் பிள்ளைபோல் என்கிறார். ஷேக்ஸ்பியர் பற்றிய தகவல்கள். தமிழில் நவீன எழுத்துமுறை தோன்ற காரணமான எழுத்தாளர்கள் - டாக்டர். சாமிநாதய்யர், எஸ். வையாபுரிப் பிள்ளை, கு.பா.ரா ஆகியோரை - பற்றிய தகவல்கள். சிறுகதை, நாவல் போன்றவற்றின் வடிவம் குறித்தான எண்ணங்கள். எல்லாம் இலக்கிய விமர்சனம் என்பதைத் தாண்டி இலக்கியத்தையே காட்டி நிற்கின்றன.
இலக்கியம் இன்னதென அறிய முற்படுவோர் வாசிக்க வேண்டிய நூல்.
This entire review has been hidden because of spoilers.