#271
Book 32 of 2024- யதி
Author- பா.ராகவன்
இது முழுக்க முழுக்க சித்தர்கள் மற்றும் ரிஷிகள் பற்றிய புனைவு நாவல். ஒரு குடும்பத்தின் வாயிலாக அவர்களின் வாழ்க்கையை நமக்கு சொல்கிறார். ஒரு தாய், தந்தை, தாய் மாமன், நான்கு மகன்கள். மூத்த மகனுக்கு ஒரு ரிஷியை சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது, அவன் ஒரு ஓலைச்சுவடியை கண்டறிகிறான். அதில் எழுதியிருப்பது என்னவென்றால், அந்த குடும்பத்தில் இருக்கும் 4 மகன்களுமே சித்தர்கள் ஆகுவார்கள் என்பது தான். அதே போல் மூத்த மகன் வீட்டை விட்டு ஓடி சித்தர் ஆகிறான். மீதி மூன்று மகன்கள் என்ற ஆனார்கள், அவர்களும் சுவடியில் குறிப்பிட்டது போல் சித்தர்கள் ஆனார்களா அல்லது இல்லற வாழ்வை மேற்கொண்டார்களா என்பது தான் கதை.
இது ஒரு பெரிய புத்தகம். ஆனால், துளிக் கூட, ஓரிடத்தில் கூட சலிப்பில்லாமல், தொய்வில்லாமல் இந்த கதை நகர்கிறது. இது ஒரு அழகான அனுபவம், இதை படிக்கையில் நமக்கும் சித்தர்கள், ரிஷிகளை நோக்கி ஒரு மனப் பயணம் தொடங்கும். கதை இப்படித் தான் முடியும் என ஒரு இடத்தில் நாம் கணிக்கையில் முழுக்க முழுக்க நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு முடிவு. இந்த புத்தகம் எனக்கு ஒரு அழகான,புதுமையான அனுபவம். தமிழில் வித்தியாசமான புத்தகங்களை படிக்க விழைபவர்களுக்கு இது ஒரு தரமான பரிந்துரையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.