கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர்.