ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியமாகிறது... உறவுக்குள் பாலமாய், புரிதலுக்கான அவகாசமாய், வேலையின் இறுக்கம் தளர்த்த, மனதின் இரைச்சலை அணைக்க... இது எதற்கும் இல்லையென்றாலும் சரி அருகருகே அமர்ந்திருக்கும் அந்த தருணத்தின் இனிமை மட்டுமே போதும்.
சார்பில்லாமல் தனித்து எதுவும் இல்லையெனும் போது வாழும் ஒவ்வொரு நொடியும் மற்றவர்களிடம் ஏதோ ஒருவகையில் சார்ந்திருக்கும் மானுட வாழ்க்கையில் தன் தனித்தன்மையைக் காட்டினாலும் பொதுவான விலகல் சாத்தியமில்லை, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே ஆகும்.
குழந்தை பருவத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சிகள் காலப்போக்கில் மாற்றம் கண்டு பின்னுக்குத் தள்ளப்படுகிறது ஆனால் சிலர் மட்டும் மாற்றத்தை பலவகை முயற்சியில் காட்டி மற்றவர்களின் கவனத்தைத் தன் மீதே குவிக்க வைத்து அதில் வெற்றியும் பெறுகின்றனர் அதுவே அவர்களுக்குத் தேவையானதை கொண்டு வந்து சேர்க்கிறது அப்படியொருவனாகிறான் அஜயன்.
எந்நிலையிலும் அடுத்தவர்களின் கருத்துக்கள் தன் மீது திணிப்பதை விரும்பாதவள் கையாலும் அலட்சியமே மற்றவர்களின் கவனிப்பை அவள் பக்கம் திருப்பி விடுகிறது.இப்படி தான் இருப்பேன் என்று இருப்பவளின் மீது மற்றவர்களின் பார்வை நிலைபெறுகிறது. அஜயனுக்கு நேர் எதிர் திசையில் இருப்பவளான அருவியின் செயலே அவளின் பக்கம் அவனை எதிர்கொள்ளச் செய்கிறது.
கல்லூரி பருவத்தில் தன்னுடைய புகழின் வெளிச்சத்தை குறைத்து அவளின் எல்லையை விரிவுபடுத்திய அருவியின் செயலில் எரிச்சல் அடையும் அஜயன்.
தன் தாயின் ஆளுமையைப் பார்த்து வளர்ந்து அதில் பெறுமையடைந்த அஜயன் அவர்களைப் போலவே வேலையில் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் அருவியிடம் வீழ்ந்தது தான் காலக் கணக்கு.
நேரமின்மையே உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்துகிறது என்பதை மெய்பிக்க முயன்ற தம்பதிகளாக அஜயன்-அருவியின் சண்டை உச்சத்தை எட்டி வார்த்தைகள் தடித்துப் போய்ப் பிரிவை நுழைக்கப் பார்த்துவிடுகிறது.
பேசி சரி செய்ய முடியாதது என்று எதுவுமில்லை ஆனால் பேசுவதைக் கேட்கவும் அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தவும் தான் மனது வேண்டும்,தன் வசத்தை விரைவில் இழக்காதவர்களுக்கு அது இயல்பாகவே அமைந்துவிடுகிறது அப்படிபட்டவர்களான அஜயன் - அருவிக்கு அனைத்தும் சாதகமாகவே அமைந்துவிடுகிறது.
கதை என்று பார்த்தால் ஏற்கனவே சந்தித்தவர்கள் இருவரின் திசைகளும் வேறு வேறு என்று அறிந்து வைத்திருப்பவர்கள் தான் என்றால் ஏன் கூடாது என்ற கேள்வியைக் கொண்டு வாழ்க்கை பயணத்தில் இணைந்து தினசரி போராட்டங்களில் தங்களின் பொறுமையின்மையில் ஆட்பட்டு அதன் பிறகு மறுசீரமைப்புக்கு உட்படுவது தான் “இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்” .
சின்னச் சின்னக் காட்சிகள் அதன் தொடர்ச்சியாய் அமையும் விவாதங்கள் என்று முடிவை நோக்கி நகரும் போது நம்மளை சொல்ல வைக்கிறது “பீல்குட் கதை” என்று.
புரிதல், தெரிதல், அறிதல், உணர்தல், அணுகுதல்… போன்றவற்றால் நெய்யப்படும் மென்மையான இழையின் உறுதியின் தன்மையிலேயே உறவுகளின் வலிமை மையம் கொண்டிருக்கிறது.
அனுமானங்கள், முன்முடிவுகள், அகங்காரங்கள், சந்தேகங்கள், எதிர்பார்ப்புகள்.. போன்றவற்றினால் உருவாக்கப்படும் கத்தியின் கூர்மை.. அந்த மெல்லிய இழையின் மேல் எப்போதும் குறி வைத்துக் காத்திருக்கிறது.
இவையிரண்டிற்குமான இடைவெளியில் ஆழ்ந்த மௌனம் ஒன்று எப்போதும் நிலைபெற்றிருக்கின்றது. இழையின் மென்மையும் கத்தியின் கூர்மையும் ஒன்றையொன்று தாக்கும் தருணங்களில் எல்லாம், அம்மௌனம் மேலும் அழுத்தம் கொள்கிறது. அதனாலேயே இரைச்சல் அதன் மொழியாகிறது..
மௌனம்… சொற்களற்ற மொழி தான், ஆயினும் அது நிறைய நிறைய பேசும்.. வலிக்க செய்யும்.. இனிக்கச் செய்யும்... அலட்சியப்படுத்தும்… அவமானப்படுத்தும்.. அமைதிப்படுத்தும்… சலிப்படைய வைக்கும்.. கோபம் கொள்ள வைக்கும்… ஆறுதல்படுத்தும்… சில சமயம் வெறி பிடிக்கவும் வைக்கும். ஏனெனில், மனதினுள் புதைந்து கிடக்கும் உணர்வுகள் எண்ணற்றவை. அதன் தாக்கங்கள் அளவற்றவை.. அதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கொட்டித் தீர்க்கும் மொழி ஒன்று உண்டென்றால் அது மௌனத்தின் இரைச்சல் மட்டுமே..
இத்தகைய ஆற்றல் மிக்க மௌனம் உருவாக்கும் வெற்றிடத்தில், கவனம் கொள்ளவில்லையானால், அது மனங்களுக்குள் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கி விடும்.
நிற்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், இதையெல்லாம் உணர்ந்து கவனத்தில் வைத்துக் கொள்ள முடியுமா..? என்றால்… ஏன் முடியாது..? நிச்சயம் முடியும்… அதற்கு உங்களுக்கு கொஞ்சம் நேரமும் தேநீரை விரும்பும் மனமும் இருந்தால் போதும்.. எவ்வளவு பெரிய மௌனத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் உடைத்து விடலாம்.. என்ற நம்பிக்கையை விதைக்கும் கதைக்களம்..
தேநீர் பிடிக்காதவர்கள் என்ன செய்வது என்று குதர்க்கமாக(என்னை) யோசிக்கக் கூடாது.. இங்கு தேநீர் என்பது குறியீடு.. நாம் சற்றுப் பரவலாக சிந்தித்து பார்த்தோமானால், எப்போதும் ஒரு சந்திப்பானது… அது எந்த உறவின் அடிப்படையிலானாலும், எந்த ஒரு நிகழ்வென்றாலும், அதன் நோக்கம் எதுவென்றாலும்… பெரும்பாலும் அங்கு தேநீர் கோப்பைகள் தான், உறவுப்பாலங்களாக பரிமாணம் கொள்கின்றன.
நாம் தேநீர் பருகும் அந்த சில நொடிகள் அல்லது நிமிடங்கள்… நம் மனதின் உணர்வுகள் எல்லாம்… தேநீர் கோப்பையின் ஆவியைப் போலவே, காற்றில் கலந்து இலேசாகிறது. எவ்வித எதிர்மறையான எண்ணங்களும் நேர்மறையில் அடைக்கலமாகி விடும்.. அனுபவம் உறவினை அர்த்தப்படுத்தி விடும்..
பார்க்கும் பார்வையில், செய்யும் செயல்களில், வாழும் முறையில்… என எல்லாவற்றிலும் நேரெதிர் குணங்கள் கொண்டிருக்கும் அருவியும் அஜயனும் திருமண பந்தத்திற்கு ஆட்படுகின்றனர். இருவருக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்திருந்தாலும் அவர்களை மீறிய ஒரு வகை உணர்வில் மண வாழ்க்கையில் இணைகின்றனர். அதற்கு பெற்றோர்களுக்காக என்ற சமாதானம் துணை செய்கிறது.
மஞ்சள் கயிறு மேஜிக் அவர்களுக்குள்ளும் தனது வேலையை காண்பிக்கிறது.. என்றாலும், இயல்புகள் எதையும் மீறிய ஒன்று அல்லவா..? விருப்பங்கள், முன்னுரிமைகள், தனித்தன்மைகள்.. போன்றவையும் கொஞ்சம் ஈகோவும் இணைந்து கொண்டதில் அவரவர் இயல்புகள் வேகம் கொள்கின்றன. விளைவு சச்சரவுகள், வலிகள், பிரிவு…. பின்பு புரிதலுடன் கூடிய இணைவு….
மோதல் – திருமணம் - காதல், பிரிவு – வலி - உறவு, என்ற வகையில் இது ஒரு வழக்கமான காதல் கதை தான்.. என்றாலும் வழக்கத்திலிருந்து, சற்றே விலக்கிப் பார்க்க வைக்கும், அதன் கதை கூறும் உத்தியில்...
கதாபாத்திரங்களின் கட்டமைப்பு மிகக் கச்சிதம்.. குறிப்பாகக் கதையின் நாயகனும் நாயகியும், இக்காலத்தின் இளைஞர்களை பிரதிபலிக்கும் தனித்துவமிக்க வார்ப்புகள்.. எந்த இடத்திலும் சற்றும் பிசிறில்லாமல், அவர்களது இயல்புகள் மாறாமல் கொண்டு சென்ற நேர்த்தியில்…
கல்லூரி வாழ்க்கையின் கலாட்டாக்களை, அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய விதத்தில்..
இப்போது எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். (அப்படி இருக்கின்றோமா..? என்பது வேறு விசயம்) தன்னுடைய தனித்துவத்தை, சுதந்திரத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவ��ர, அதையே பிறருக்கு நாம் செய்கிறோமா..? என்று சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.. அதையும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொள்.. என்ற இலேசான சீண்டலில்..
மதில் மேல் பூனையின் நிதானத்துடன், கதையின் தன்மை கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது.. உணர்வுகளின் ஆழம் அழுத்தவில்லை.. இன்னும் சற்று அழுத்தம் கூடியிருந்தால், ஒரு புலம்பலாகவோ அல்லது சலிப்பாகவோ தோற்றம் கொண்டிருக்க எல்லா வகையிலும் வாய்ப்பிருந்தும்… உணர்வுகளை மிக அழகாகக் கோர்த்த அதன் கச்சிதத்தில்…
சமூக அவலங்களினூடாக வெளிப்படும் அக்கறை.. அதில் விரவியிருக்கும் அழகான நகைச்சுவையில்…
எழுத்து நடை, வர்ணனை, காட்சிப்படுத்துதல், விவரணைகள், வார்த்தைப் பிரயோகங்கள், முந்தைய கதைகளை விட வெகுவான முன்னேற்றத்தில்… என அனைத்துத் தளங்களிலும் இக்கதை சிறந்து விளங்குகிறது…