வெற்றி என்பது எப்பொழுதுமே கானல் நீர் தான். அதை நோக்கிய பயணத்தை இனிமையாக்கித் தருவது நமக்கு அமையும் குடும்பமும் நாம் தேர்ந்தெடுக்கும் காதல், நட்பு என்னும் உறவுகளும். பிறந்த உடனே நாம் முதலில் கற்றுக் கொள்வது இருத்தலியல். நம் வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப எதிர் அசைவை நம்மை அறியாமலேயே சூழலிலிருந்து நாம் கற்றுக் கொண்டு ஜெயிக்க முயல்கிறோம்.
உலகத்திற்குத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவரும் போராடி தான் நிற்கிறார்கள், அவர்களை ஊக்கப்படுத்துவது சில நேரங்களில் எதிர்கால வாழ்வின் மீதான பயங்களாகக் கூட இருக்கலாம்.எதிர்காலம் பற்றிய நினைப்பு இல்லையென்றால் நிகழ்காலத்திலே தேங்கி பின்தங்கிவிடுவோம்.
படித்து முடித்து அடுத்த என்ன என்ற கேள்வி எழும் போது தான் உலகத்தைப் பற்றிய நிசர்சனம் புரிய ஆரம்பிக்கிறது..எந்த பக்கம் செல்ல வேண்டும் என்ற வழி தெரிந்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாகக் குடும்பப் பொருளாதாரம் வரும் போது தான் பல புதிய சிந்தனைகள் பிறக்கின்றது. தன்னை தானே உயர்த்திக் கொள்ள போராடும் வெற்றி அதற்காக எவரையும் குறைச் சொல்லாமல் எவர்மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் இருப்பது நேர்மறை சிந்தனையின் தொடக்கம்.நேர்மறை எப்பொழுதும் தோல்வியைக் கண்டதில்லை அதுபோல் வெற்றியின் வாழ்வில் வெற்றிகளே தொடர்கின்றது.
தன் கனவுகளின் வழியாக மகனை நடத்தி செல்லும் தந்தைக்குத் தான் செய்த தவறு அவனை இழந்த பிறகே புரியும் ஆனால் அவரின் மீது வைத்து இருக்கும் பாசத்தில் அந்த சந்ததியில் எவரோ ஒருவர் விருப்பத்துடன் தன்னை அவரின் கனவுகளிடம் ஒப்படைப்பர் அப்படிப் பட்ட பெண்ணாக நிலா வருகிறாள்.
வாழ சென்ற நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளுடன் தான் வாழமுடியும், அங்கே போய் ஒப்பீடு செய்தல் முற்றிலும் முரணான விஷயமாகும். வெற்றியின் வெளிநாட்டு வாசமும் அங்கே நிகழும் சம்பவங்களும்.
காதலியையே கைப்பிடிப்பது அதுவும் பெரியவர்களின் ஆசியுடன் என்பது வரமல்லவா? அதை நடத்தி காட்டியிருப்பவர்கள் வெற்றி-நிலா.
நிற்பதற்கு உறுதியான ஒரு இடம் தாருங்கள். இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்… என்ற அறிஞனின் வரிகள், நம் ஒவ்வொருவருக்கும், நிலையான இடம் எவ்வளவு அவசியம் என்பதையே உணர்த்துகிறது.
இந்த உலகில் உள்ள அனைத்தும்… ஓரறிவுள்ள புல், பூண்டு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை.. தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள தினம் தினம் போராடும் நிலையில் இருக்கிறது காலம். இந்நிலையில், அதை எப்படி, எந்த வழியில், எந்த முறையில் அணுகுவது என்பது தெரியாத நிலை. இவையெல்லாவற்றையும் கடந்து, நேர்மையான முறையில், ஒரு இடத்தில் நிலைத்து நிற்பது, என்பது எவ்வளவு சவாலான காரியமாக இருக்கிறது.. என்பதைக் கூறும் யதார்த்தம்...
கனவுகள். பார்வையற்றவனையும் காண வைக்கும் கனவுகள். நிலையற்ற வாழ்க்கை எனத் தெரிந்தாலும்.. நிஜமாகுமா என்று சந்தேகம் கொண்டாலும்.. உறக்கத்திலும், விழிப்பிலும் மனிதன் கனவுகளோடே வாழ்கிறான். அதுவும் பெற்றோரின் கனவுகள் என்றும் குறைந்ததில்லை. ஆனால், அவர்களின் கனவுகள் நிஜமாகும் தருணம்… காலத்தின் கோலத்தால் வெறும் துயர நினைவுகளாக மனதில் தங்கி விடும் துயரமும் நிதர்சனம்.. என்பதையும் தன் போக்கில் உணர்த்தி செல்கிறது…