முகிலினி நாவல். கோவை மாவட்டத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது பவானி ஆறு. அந்த ஆறு மீட்கப்பட்டதற்கான வரலாறைப் பேசுகிறது நாவல்.
இந்த நாவலைப் படிக்கும் நண்பர்களுக்கு இது முற்றிலும் புனைவு, எதுவுமே புனைவு அல்ல என்று இரண்டு முரண்பட்ட சித்திரங்கள் கிடைக்கக் கூடும். எனவே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு என்று வைத்துக்கொள்ளலாம். காலத்தையும் சம்பவங்களையும் வசதிக்காக கொஞ்சம் முன்பின்னாக மாற்றியிருக்கிறேன்.
அருணனின் அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி, டி.எம்.பார்த்தசாரதியின் திமுக வரலாறு, கண்ணாக்குட்டியின் போராட்டம் என் வாழ்க்கை, பஞ்சாலைத் தொழில் நேற்று இன்று நாளை, என்.
சூழலியல்#1 வழக்குரைஞர்,எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான திரு.இரா. முருகவேளின் நூல்கள் பெரும்பாலும் சூழலியல் குறித்தான அடிப்படையாகக் கொண்டவை.முகிலினியும் அதே வரிசையில் கொங்கு நாட்டின் முக்கிய அணைக்கட்டு "பவானி" நீர்த்தேக்கத்தின் அடிப்படையாகக் கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த ராஜு,ஆரான், மாரிமுத்து மற்றும் கஸ்தூரிசாமி போன்ற மனிதர்களின் மூன்று தலைமுறைகளின் கதையே இந்நூலகும். Based On The Actual Events என்ற அடிப்படையில் இந்நூலில் கூறப்பட்டுள்ள பல்வேறு உண்மையான மனிதர்கள்,தரவுகள் மிக முக்கியமானது.புத்தகம் முழுவதும் தகவல்களஞ்சியம் ஆக வாசிப்பில் சிறிதளவு தொய்வு ஏற்படாமல் இருப்பதே இந்நூலின் சிறப்பாகும்.
பல தலைமுறைகளைக் கண்ட ஆற்றை மையப்படுத்தி அதில் மூன்று தலைமுறைகள் எதிர்கொண்ட சம்பவங்களைச் சொல்வதுடன் அல்லாமல் ஒருவரின் ஆசை பல்லாயிர மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கி சுற்றுச் சூழலை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியது மட்டுமில்லாமல் அதை நிவர்த்திச் செய்யாமல் செய்யும் மற்றொரு செயல் மேலும் பலரின் உத்தியோகத்தையும் கேள்விக்குறியாக்கி இழப்பை சந்தித்தவர்களின் அடுத்த தலைமுறையும் வேறுவகையில் இழப்புகளையே எதிர் கொள்கிறது.
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு தொடங்கிய கதைக்களம். பிரிவினையால் பருத்தி உற்பத்தி செய்யுமிடம் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொள்ள இந்தியாவில் இருக்கும் மில் உற்பத்தியாளர்கள் மூலப்பொருள் கிடைக்காமல் அல்லாடும் வேளையில் மக்களின் தேவையை நிறைவு செய்ய புதிய உத்தியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பொழுது செயற்கை இழை உற்பத்தியை இத்தாலிய நிறுவனத்துடன் சேர்ந்து கஸ்தூரிசாமி பவானி ஆற்றை ஒட்டிய பகுதியில் மிகப்பெரிய ஆலையைத் தொடங்குகிறார்.
பலகோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட ஆலை, செயல்முறைப்படுத்த வேண்டிய அனைத்தையும் கவனத்தில் கொண்டு உற்பத்தியை பெருக்குகிறது.. மிகப்பெரும் இலாபமீட்டும் நிறுவனமாக மாறிய பிறகு அதைக் கைப்பற்ற வேண்டி கேண்டி கொடுக்கும் நெருக்கடியை தாங்க முடியாமல் முழு நிர்வாகத்தையும் அவனிடத்திலே நல்ல இலாபத்திற்குத் தன் பங்குகளை விற்று விடுகிறார் கஸ்தூரிசாமி.
சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாமல் உற்பத்தியை அதன் உச்சநிலைக்குக் கொண்டு சென்ற கேண்டியால் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவை சுத்திகரிக்க முடியாமல் அப்படியே ஆற்று நீரில் கலக்கவிட்டதால் நீர்நிலையின் மாசு விவசாயம்,கால்நடைகள்,பெயர் தெரியாத உயிர்கொல்லியாக மாறி மனிதர்களையும் சேர்த்து அழித்துக் கொண்டே வருகிறது. சமூக ஆர்வலர்களும் அம்மக்களுடன் சேர்ந்து நடத்தும் போராட்டம் அரசின் கவனத்தைப் பெற முடியாமல் போக இழப்புகளின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வர எதிர்ப்புகளும் அதிகரித்த பிறகு தகுந்த ஆதாரத்துடன் கோர்ட்டின் உத்தரவுப்படி ஆலையை இழுத்து மூடிவிடுகின்றனர்.
தேவையை முன்னிருத்தி தொடங்கப்பட்ட ஆலையை முதல் தலைமுறையினர் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலையில் ஈடுபட மெல்ல அடுத்தத் தலைமுறையினர் வரும் போது உபயோகப்படுத்தும் கெமிக்கலால் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் மூன்றாம் தலைமுறையினரின் விடாப்பிடியான போராட்டத்தால் மூடுவிழா கண்டாலும் அது அப்பகுதியை மெல்ல மீட்டெடுக்கலாம் என்றாலும் வேறு ஏதோ ஓர் இடத்தில் இம்மாதிரியான ஆலைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் வேறு ஓர் இடத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்தாலும் அதைத் தடுக்க முடியாது என்று தவிப்புக்குள்ளாகும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பதட்டத்திற்கு விடையறியாமல் தேங்கி நிற்கிறது.
மக்களின் முன்னேற்றத்திற்கு என்று தொடங்கப்பட்ட அனைத்தும் ஏதோ ஒருவகையில் இயற்கையைப் பாதிப்புக்குள்ளாக்கியே தன்னிறைவை நோக்கி நகர்கிறது.ஆனால் தேவைகள் ஒருபோதும் பூர்த்தியாவது இல்லை.ஒன்று முடிந்தால் மற்றொன்றின் துவக்கம் என்று இயல்பாகவே சுழல் முறையைப் பின்பற்றுகிறது.
மக்களின் ஏற்றத்தாழ்வை போக்குகிறோம் என்று சொல்வது எவ்வளவு மாயையோ அது போலத் தொழிற்சாலையும் இயற்கையுடன் இசைந்து நடைபெறும் என்று நம்பப்படுத்துவதும் மாயையே..ஒரு போதும் பாதிப்புக்குள்ளாக்காமல் தேவைகள் நிறைவு பெறுவதில்லை.
ஆலையின் கட்டுமானம்,செயல்முறைகளின் வழியே தமிழ்நாட்டின் அப்போதைய அரசியலும், தொழிற்சங்களின் உருவாக்கமும்,புதிய கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும் அக்காலக் கட்டத்தில் நடந்தவைகளின் குறிப்புகள் வரும் சந்ததிகளுக்குத் தெளிவாக்க விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை வேளாண்மை என்று பலரும் அதன் பக்கம் ஆர்வம் காட்ட அதுவும் பணக்கார வர்க்கத்தை மட்டுமே குறிவைத்து நடத்தும் வியாபாரம் ஆகிறது என்பதை விளக்கினாலும் அதற்காகச் சொல்லும் காரணங்கள் மற்றும் ஒரு புரட்சியை விரைவில் எதிர்கொள்ள அடித்தளத்தை அமைத்துக் கொண்டு வருவதை மறுக்கமுடியவில்லை.
இரண்டாம் உலகப்போரில் யாருக்காகவோ போராட போன ராஜு திரும்ப இந்தியா வந்து கஸ்தூரிசாமியின் புதிய ஆலை தொடங்க காரணமாக இருந்த பலவற்றுள் தன்னையும் பொருத்திக் கொண்டு அதிலே உழைத்து உடல்நலனையும் கெடுத்துக் கொண்டு நிர்வாகம் கைமாறிய பிறகு அதிலிருந்து வெளியேறித் தனிப்பட்ட வாழ்வில் நிறைவாக வாழ்ந்து மடிந்துபோகிறார்.
ராஜுவின் பேரனான கௌதம் இயற்கை வேளாண்மை பக்கமும் வக்கீல் தொழிலிலும் போராடிக் கொண்டு எந்தப் பாதையில் தான் பயணப்படணும் என்ற முடிவை இறுதியாக எட்டுகிறான்.
தொழிற்சாலை கட்டுமானம் தொடங்கப்பட்ட காலத்தில் நிலத்தைச் செப்பனிட வந்தது முதல் பவானி ஆற்றின் ரசிகனாகவே மாறிய ராஜு அதற்கு முகிலினி என்று பெயர் வைத்து தன் சந்ததிகள் அனைவருக்கும் அதனுடனான உறவை பலப்படுத்துகிறார்.
ஒரு தொழிற்சாலையின் எழுச்சியும் கவனத்தில் கொள்ளாத ஒரு சிறு தவறால் அதுகண்ட வீழ்ச்சியும்.
நீர்நிலையின் மாசு எப்படி அதன் சுற்றுப்புறத்தை உருக்குலைத்து தீராத அடையாளத்தை விட்டுச் செல்வதற்கும் மனிதனே முக்கியக் காரணமாகிறான்..
மூடிய ஆலையில் இருந்து திருடும் கும்பலில் இருக்கும் சந்துரு கொலைப்பழியில் மாட்டிய பிறகு கௌதம் உதவியால் விடுதலையானவன் தனக்கெனப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு மலைவாசிகளின் இன்னல்களைப் போக்க அதன் வழியில் பயணப்படுகிறான்.
பல மாந்தர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பவானி ஆற்றுடனோ இல்லை தொழிற்சாலையுடனோ தொடர்பில் இருந்து அதனால் பெற்ற பலனும் துன்பங்களும் அலசி செல்கிறது.
பணமும், திறமையும், தொழில் நுணுக்கங்களை அறிந்தவர்கள் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வெற்றிகளாக்கி கொள்கின்றனர்,கஸ்தூரிசாமி தலைமுறைகளும் வெவ்வேறு தொழில்களில் தங்களின் இலாபத்தை ஈட்டுகின்றனர்.
சேர்பவற்றின் இயல்பைக் கொண்டு தன் போக்கில் ஆறு பாய்ந்தோடுகிறது.
நாவல் : முகிலினி ஆசிரியர் : இரா.முருகவேள் பதி��்பகம் : பொன்னுலகம்
மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவென்பது தாய் குழந்தைக்குமான உறவைப் போலவே. அக்காலம் தொட்டே மனிதன் தன் வாழ்வுப் பாதையை இயற்கையோடு இணைந்தே தகவமைத்து வாழக்கற்றுக்கொண்டான். இயற்கை மனிதனுக்கு கொடையாகவும் சில நேரங்களில் கொடுமையாகவும் இருந்திருக்கிறது. இயற்கையில் நிகழும் இந்த மாறுபாடு இயற்கை சமநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் இயற்கையின் உத்தியே. காலப்போக்கில் மனிதன் தன் அதீத முயற்சியாலும் இயற்கையுடனான போராட்டத்தினாலும் அதனை தற்காலிகமாய் தன் வசப்படுத்தியுடன் அதனுடனான உறவில் சிறிது சிறிதாய் அந்நியப்பட்டு தனக்கென்ற சுயநலசார்பு வாழ்வில் அதன் சமநிலையை குலைத்து ஏற்படுத்திய நாகரீக மாற்றங்களும் தொழிற்புரட்சிகளும் மக்களின் வாழ்வை மேம்படுத்தியிருந்தாலும் அந்த முன்னேற்றப் பாதையில் நாம் மறந்து போனது இயற்கையோடான நமது இணக்கமான பந்தத்தைப் பற்றியே. இந்த நாவலும் இதைப்பற்றிய களத்தையே கருவாய் கொண்டே எழுதப்பட்டுள்ளது. நாவலின் மொழிநடை வேகத்தையும் தடையும் கொடுக்கமால் நகருவதை ஆசிரியர் தன் எழுத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். காலக்கட்டத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாவனி சாகர் அணையின் நிர்மாணத்தில் தொடங்கி அறுபதாண்டுகாலம் பயணித்து சமகாலத்தில் முடிவடைகிறது, நாவலின் களம் சிறுமுகை மற்றும் கோவையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகு நூலிற்கு தேவையான பருத்திக்கு பஞ்சம் ஏற்படுகிறது, சுதந்திரத்திற்கு முந்தையக் காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பருத்தி இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு தன்னிறைவைக் கொடுத்திருந்ததாய் ஆசிரியர் நினைவுப்படுத்துகிறார். அப்பஞ்சத்தைத் தவிர்க்க தென்னிந்திய ஆலை அதிபர் ஒருவரால் முயற்சியெடுக்கப்பட்டு 1953 காலக்கட்டத்தில் இத்தாலியத் தொழில்நுட்ப உதவியோடு பாவனி ஆற்றின் ஓரமாக சிறுமுகையில் ரேயான் எனப்படும் செயற்கையிழையைத் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழக அரசின் உதவியோடு தொடங்கப்படுகிறது. தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது அதைச்சுற்றியுள்ள மக்களின் வாழ்வும் வளப்படும் என்பதில் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. இதில் கைவிடப்படுவது தொலைநோக்குப் பார்வையே. முதலாளிகளின் சுயசார்பினாலும் அரசின் மெத்தனப்போக்கினாலும் இப்படி ஏற்பட்ட தொழிற்சாலைகளால் மக்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி யாரும் கவலைக் கொள்வதாய் தெரிவதில்லை என்ற நிலையை முகிலினி நாவல் அழகாய் நமக்கு விளக்குகிறது. சமகாலத்தில் நடந்த ஒரு சம்பத்தைக் கையிலெடுத்து அதனுடன் இணக்கமான கதாப்பாத்திரங்களை உருவாக்கி படிக்கும் நாமும் அதனுடன் அதன் காலக்கட்டங்களிலேயே பயணிக்க வைத்து நம்மை அதனுள் ஈர்த்து விடுவது நாவலின் பலமாய் கருதுகிறேன். அதே நேரத்தில் இயற்கையை மீட்டெடுக்கப் போகிறோம் என்ற போர்வையில் எப்படி இந்த முதலாளித்துவங்கள் தம்மை உருமாற்றிக் கொண்டு சுழலுக்கெற்பையான வாழ்வில் நம்மை எப்படி எல்லாம் சுரண்ட நினைக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாகரீக மோகத்தில் இயற்கை சமநிலையைக் கெடுத்து விட்டோம். அதற்காய் இயற்கை நம்க்கும் பேரழிவுகள் எண்ணிக்கையிலடங்கா. இதை மாற்ற நாம் என்ன முயற்சி எடுத்தோம் என்பதற்கான கேள்வி என்னுள்ளே விவாதித்துக் கொண்டே இருக்க அதை தனியொருவானாய் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்குறிக்கும் அரசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் எளிமையான வாழ்க்கை என்ற விடையைத் தருவது தெளிவான புதிய உலகத்திற்கான வழியாக இருக்கலாம். இதுப்போன்ற நாவல்கள் இன்றைய மனிதனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையே. இக்கருத்தையும் களத்தையும் ஒட்டிய நாவல்கள் நிறைய வந்து பரவலாக எல்லா மக்களிடமும் போய் சேர வழி வகை செய்ய வேண்டும். நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சூழலை நம் மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்க நம் குழந்தைகளுக்காய் நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்விய இந்நாவல் எழுப்பும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. இதுப்போன்ற முயற்சியைக் கையிலெடுத்து அப்பணியைச் சிறப்பாய் செய்து முடித்த ஆசிரியருக்கு மனமார்ந்த பாரட்டுகளோடு...
செல்வ வளம் மிக்கது என்றளவில் அறியப்பட்டிருக்கும் கோவை மாவட்டம் அல்லது கொங்குப் பகுதியின் பரிணாம வளர்ச்சியில் கடந்த 100 வருடங்களில் அங்கு வாழ்த்து வரும் மக்கள் பல விதமான சிந்தனை மாற்றங்களை கடந்து வந்திருப்பதை இதை விட சுவாரஸ்யமாக ஒரு புதினமாக பதிவு செய்வது அரிதான காரியம். மிகக் குறிப்பாக மூன்று தலைமுறை பங்களாவாசிகளைப் பற்றியும் குடிசைவாசிகள் பற்றியும் ஒரு மையப்புள்ளியை வைத்து பரவலான விஷயங்களை கதையாக்கியிருப்பதில் கடும் உழைப்பு உள்ளடங்கியுள்ளது. இந்தக் கதையில் வரும் அனேக சம்பவங்கள் இந்தியாவின பெருநகரங்கள் முழுமைக்கும் பொருந்தும் என்பதால் தவிர்க்க முடியாத நாவலாகிவிடுகிறது.