மனதை மகிழ்ச்சியில் நிறைப்போம் என்னும் விந்தை உலகத்தைச் சேர்ந்தவள் தமிரா... பெற்றோர்களின் பாதுகாப்புகளோடு பறக்கும் வலசை பறவையவள்… வழியில் சின்னச் சின்ன ரகசியங்கள், சின்னச் சின்ன அத்துமீறல்கள் என ஒத்திகை வாழ்க்கையில் அவள் பற்றிக் கொள்ளும் உயிர்ப்புகள் தான் அவளது அடையாளம்.
உங்கள் குழந்தைகள், உங்களுடையவர்கள் அல்லர் அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர். அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி உங்களிடமிருந்து அல்ல உங்களுடன் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு உரியவர்களல்லர். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; … எண்ணங்களை அல்ல…
என்று நீண்டு செல்லும் இவ்வரிகள் கலீல் ஜிப்ரானின் வரிகள். கட்டுரைகள், கதைகள், செய்தித் துணுக்குகள், நிகழ்வுகள் என்று எத்தனையோ வழிகளில், வெவ்வேறு விதங்களில் இவ்வரிகளின் அர்த்தங்களே நமக்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. நாம் அதனை கண்டும் காணாமல் கடந்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் உணர்ந்திருக்கிறோமா..? அல்லது அதைப் பற்றியதான புரிதலையேனும் கொண்டிருக்கிறோமா..? ஆம் எனில் எவ்வகையில்..? இல்லையெனில் அதன் காரணம்..? என்று கேள்விகளை எழுப்பினால், அதற்கு கிடைக்கும் விடை, ஒருவகை மௌனமே.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை என்று சொல்வார்கள். அந்தக் கலையை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதில் இருக்கிறது அவர்களின் வாழ்க்கை. எனில், எல்லோருடைய வாழ்வும் சிறப்பாக அமைந்து விடுகிறதா..? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆனால், இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கலை என்பதை விட, அது ஒரு சவால் என்பதே மிகப் பொருந்தும். அந்த அளவிற்கு குழந்தைகளின் உலகில் இன்று பலவகைச் சிக்கல்கள் சூழ்ந்து விட்டன.
அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு, சுதந்திரம், அதிகாரம், கல்வி, தேவைகள், விருப்பங்கள், இலட்சியங்கள்.. போன்றவைகளும் அவைகளுக்கான அளவீடுகளும் என பலவித குழப்பங்களுக்கிடையே குழந்தைகள் – பெற்றோர்கள் இடையேயான உறவு எப்போதும் பதற்றமான ஒரு நிலையிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும் நாகரிகங்கள், அதனை பிரதிபலிக்கும் சமூகங்கள் என ஒரு சிடுக்கான வாழ்க்கைக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் அழுத்தங்கள் நமது வாழ்க்கையை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கிறது. அப்படிச் செல்லும் பட்சத்தில் அதனை நேர்மறையாகக் கையாளும் திறனே நமது இருப்பின் நிலையை தீர்மானிக்கிறது.
குழந்தைகள் வளர்ப்பில் ஓரளவிற்கு ஒரு புரிதலுக்கு வந்து விட்ட பெற்றோர்களுக்கு, அவர்கள் பிள்ளைகளாகும் போது, அப்புரிதலில் ஒரு தடுமாற்றம் வந்து விடுகிறது. பிள்ளைகளின் பதின்பருவம் அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மிகுந்த குழப்பநிலையையே அளிக்கிறது.
முந்தைய காலத்தைப் போலல்ல பிள்ளைகள். சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக தன் விருப்பமாக நடந்து கொள்ளவே முனைகிறார்கள். அதற்குத் தகுந்த அளவுத் தகுதியும் அவர்களுக்கு உண்டு. எனினும் அதனைக் கையாளுவதில் தான் தடுமாறிப் போகிறார்கள். அதனைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றது போல் நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டு, அவர்களை வழிநடத்துவது மட்டுமே நமது பணி. மாறாக, அப்போதும் நம் கைக்குள் வைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த முனைந்தாலோ விளைவுகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே முடிகிறது.
பசிக்கு மீன் கொடுப்பது நல்ல செயல். எனினும் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது உன்னதமான செயல். என்பதைப் பரிந்துரைக்கும் கதைக்களமே.. அனிதா சரவணனின் “பிளாட்டோனிய காதல்”
அமெரிக்க வாழ் தமிழ்க்குடும்பத்தின் தலைவி இந்திரா. கூடவே பள்ளியில் மாணவர்களின் ஆலோசகராகப் பணி. அவரது பதின்பருவ மகள் தமிரா. இவர்களுக்கிடையேயான உறவும், அதன் மூலம் கட்டமைக்கப்படும் உணர்வுகளும், அவர்களது வாழும் சமூக நிலையும், அது ஏற்படுத்தும் தாக்கங்களுமாக கதை முழுவதும் இருவரே பிரதான கதாபாத்திரங்கள். அப்பா விஜய், சகோதரன் இனேஷ், என மிகச்சிறிய குடும்பம்.
தமிரா உயர்நிலை வகுப்பிற்கு செல்லும் நிலையில் கதை ஆரம்பிக்கிறது. பதின்பருவ சிக்கலும் கூடவே ஆரம்பிக்கிறது. பெருகி வரும் இணையதள நட்பு, தன் வீட்டின் தமிழ்க் கலாச்சாரம், தன் நாட்டின் அமெரிக்கக் கலாச்சாரம், தன்னைச் சுற்றியுள்ள சமூக நாகரிகங்கள், உடன் பயிலும் தோழர்களின் கருத்துக்களும் கொள்கைகளும், கூடவே அவர்களின் நடத்தைகள், தோரின் மீதான அவளது ஈர்ப்பு என எல்லாவற்றிலும் குழம்பினாலும், அதிலிருந்து தனக்கென ஒன்றை வடித்துக் கொண்டு தன் வாழ்வை முன்னெடுத்து செல்கிறாள். அதற்கு அம்மா இந்திராவின் அணுகுமுறை எவ்வாறு அவளை வழிநடத்திச் செல்கிறது என்பதைக் கதையாகக் கூறுவதோடு காட்சிகளாகவும் விரிக்கிறது.
இந்திராவின் பாத்திர படைப்பு தற்கால அம்மாக்களை சித்தரிக்கிறது. அதுதான் காலத்தின் கட்டாயம். கண்டிப்பும் அரவணைப்பும் வழிநடத்துவதும் என எல்லாவற்றையும் ஒருங்கே செயல்படுத்துவது என்பது மிகக் கடினம். எனினும், இத்தகைய அம்மாக்கள் தான் தற்காலத்தின் தேவை, என்பதை பிரதிபலிக்கும் பாத்திரம்.
தோரின் கதாபாத்திரமும் இன்றைய இளைஞர்களை சித்தரித்தாலும், கூடுதலாக பொறுப்புணர்ச்சியோடு சித்தரித்த விதமும் அழகு. அது ஒருவகையில் நமது எதிர்பார்ப்பும் கூட.
இவர்களையெல்லாம் விட தமிராவின் படைப்பே விஞ்சி நிற்கிறது. அந்த அளவிற்கு அவளது கதாபாத்திரம் கனகச்சிதம். அந்த வயதில் அவளுக்குள் எழும் கேள்விகள், குழப்பங்கள், சிந்தனைகள், உரையாடல்கள், ஈர்ப்புகள், எதிர்ப்புகள் என பதின் பருவத்தின் உணர்வுகள் எல்லாம் துல்லியமாக ஆசிரியர் கையாண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக, எதிர்பாலின ஈர்ப்பு நிலையைக் கையாண்டிருக்கும் விதம் மிக நேர்த்தி.
கதையின் களமான அமெரிக்காவின் பழக்கவழக்கங்கள், அடையாளங்கள், உணவு, விழாக்கள், மக்களோடு அவர்களின் உணர்வுகளும் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் மீதான அக்கறை, இளைஞர்களின் மீதான நம்பிக்கை, குடும்பத்தின் அணுகுமுறை பற்றிய அவரது கண்ணோட்டங்கள் அவருக்கேயுரிய கேலியோடும், பரிகாசத்தோடும் கதை முழுவதும் பயணிக்கிறது. கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு பற்றிய குறிப்பில் மிஸ்டர் ஆந்தையார் என்று அழைப்பது அவரது நக்கலுக்கு ஒரு சிறு சான்று. அதற்குக் காதலும் முத்தமும் கூட விதிவிலக்காகவில்லை.
கதையோடு பொருந்திப் போக வைக்கும் இயல்பான மொழிநடையில், சீரான வேகத்திலும் சுவாரஸ்யமாகவே செல்கிறது.
ஒவ்வொரு மனிதனும் சுற்றியிருப்பதைப் பார்த்தே தன்னை வளர்த்துக் கொள்கிறான்.
திடீரென உருவாகும் சஞ்சலங்களும் நெருக்கடிகளும் மட்டுமே மனிதனை வார்த்தெடுக்கும் அச்சாகிறது.
தமிரா என்ற பருவ பெண்ணைச் சுற்றியே முழுகதையும்.
தனிப்பட்ட வாழ்வில் எவ்வகை இடைஞ்சலும் இல்லாத உயரிய வாழ்க்கை வாழ்பவளுக்கு வெளியில் வீசும் சூழ்நிலை கசகசப்பு அகத்தைப் பாதித்தாலும் அது வெற்று சலனமாகவே போகிறது.
தமிரா வாழும் மண்ணிற்கேயுரிய சில பிரச்சனை நடந்தேறும் போது உண்டாகும் தவிப்புகளே அவளுள் வரும்காலத்தில் செல்ல போகும் பாதையை ��டிவமைக்கிறது.
மகள் தமிராவை கண் பார்வையில் இருந்து விலக விரும்பாத இந்திரா.
சில ஆக்கப்பூர்வமான சந்திப்புக்களே போதும் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க என்பதை தோரின் மூலமும்,பெற்றவர்களின் பிரிவு பாதித்தாலும் அதன் பிறகான வாழ்க்கை எப்பொழுதும் தடைபெறுவதில்லை என்பது எம்மா மூலமும் என ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்வின் ஒரு கோணத்தைக் காட்டியே செல்கிறது.
தோரை சுற்றி எழுப்பப்பட்ட காட்சியமைகளும்,இந்திராவின் கதாபாத்திரமும் கதையில் அழுத்தமாக ஒன்றவிடுகிறது.