ஒவ்வொரு நாட்களும் நொடி நொடியாகச் சர்வ சாதாரணமாகக் கரைந்துபோகும். அதில் சில தருணங்களே கவனத்தை ஈர்க்கும், அடியோடு புரட்டிப்போடும், மனதை சிதறடிக்கும்… அவையே வாழும் கணங்கள். சில கணங்கள் வாழ்வின் அழகிய தருணங்களாகும்… அதில் சிதற விட்ட கணங்கள் என்றும் படிமங்களாக மனதில் உறைந்துபோகும்.
துயரம் மாந்தர்களை அகநோக்கு உள்ளவர்களாக ஆக்குகிறது. பிறரிடம் நமக்கு உள்ள உறவை மிகத் தெளிவாகவும், மிகவும் உறுதியாகவும் புலப்படுத்தச் செய்வது துன்பம் – வி.ஸ.காண்டேகர்.
வாழ்வு தருணங்களால் ஆனது விரல்விட்டு எண்ணக்கூடிய சில முக்கியமான தருணங்களில் தான், நம்மில் பலரது வாழ்வு ஒளி வீசிச் சிறக்கிறது – அஜயன் பாலா.
அப்படித் தவறவிட்ட தருணங்களின் மகத்துவத்தை, அவர்களுக்கு நேரும் துயரங்களின் வழி உணரும் இருமனங்களின் வாழ்வியல் கதை.
சாத்விகா… லாஸ் ஏஞ்சல்ஸின் பிரதான சாலையில் அதிவேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். பயணத்தில் ஆங்காங்கே தடைகள் ஏற்பட, அதன் காரணமாக, அவளுக்குள் எழும் நினைவலைகளின் மூலமே, கதை பயணிக்கிறது. சக்தியைக் காண வேண்டும் என்ற துடிப்பும் இணைய அவளது நினைவலைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
சக்தி... சக்திவேல். சாத்விகாவின் கணவன். அவனுக்குக் காதல் திருமணமாகவும், அவளுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவும் இருந்த வாழ்வு, சில வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல், விவாகரத்தின் மூலம் அவர்களிடமிருந்து கழண்டு கொண்டது. மூன்று வருடங்கள் நீண்டிருந்த பிரிவின் காலங்களுக்குத் தடையாக அவனது விபத்துச் செய்தி அவளை அடைய, அவனைக் காண விரைந்து கொண்டிருக்கும் வேளையில் பழங்கணக்கும் பார்க்கலானாள்.
இருவேறு பழக்கவழக்கங்கள், பார்வைகள், குணங்கள், சூழல்கள் என்று பலதரப்பட்ட வித்தியாசங்கள் கொண்டிருந்தவர்களை திருமண பந்தம் இணைத்திருந்தாலும் கூட, அவரவர் சுயமும், எதிர்பார்ப்புகளும், எண்ணங்களும், கொஞ்சமே கொஞ்சம் வீம்பும் அவர்களை தள்ளி தள்ளியே நிறுத்தியிருக்கிறது, என்பதை அவள் காலதாமதமாகவே உணர்ந்து கொள்கிறாள். பயணம் முழுவதும் இதே வகையிலான கேள்விகளும் குழப்பங்களும், தெளிவுகளும் அவளை மூழ்கடிக்க… பயணத்தின் முடிவில் சக்தி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்து சேர்கிறாள்.
அங்கு மருத்துவமனையில் இருக்கும் சக்தியோ, அவளைப் போலவே பலவற்றையும் நினைத்து மருகியவனாக இறுதியில் ஒரு முடிவை எடுக்கிறான். சாத்விகாவைக் காண வேண்டும் என்ற தவிப்புடனும், அவளிடம் தன் காதலைக் கூறி அவளுடன் தன் வாழ்வை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புடனும், நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறான்.
இருவரும் சந்தித்துக் கொண்ட தருணத்தில் அவனது உள்ளத்தை அவளிடம் வெளிப்படுத்த, அவளது மனம் அவனிடம் நம்பிக்கைக் கொள்ள மறுக்கிறது. அவள் சிந்திக்க அவகாசம் எடுத்துக் கொள்கிறாள். ஆயினும், நாளடைவில் இருவரும் இணைந்து இல்வாழ்வில் சிறக்கின்றனர்.
நல்ல எழுத்து நடை… விவாகரத்துகள் பெருகி விட்ட இன்றைய காலக்கட்டத்தின் ஆண்-பெண் மனங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கதைக் களம்.
அவரவர் நியாயங்கள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்களைக் கூறும், அதே நேரத்தில், எதிர்த்தரப்பின் மீதும் விமர்சனங்களை விலாவாரியாக வைக்கிறார், ஆசிரியர்.
இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் முறைகளைக் கூறி வரும் பொழுதே, அதனூடாக முந்தைய தலைமுறையின் வாழ்வியல் கோட்பாடுகளையும், சமூகப்பழக்கங்களையும் விமர்சனங்களுக்கு உட்படுத்துகிறார். அதில் சற்றே எள்ளல் தொனிக்கிறது.
ஒரே நிகழ்வின் இருவேறு பரிமாணங்கள், கோணங்கள், அர்த்தங்கள் என்ற பார்வையில் விரியும் கதைக்களம் பின் பாதியில் கொஞ்சமே கொஞ்சம் சலிப்பின் கோட்டைத் தொடுகிறது.(எனக்கு) அது இருதரப்பு மனநிலையையும் உணர்த்துவதற்காக என்றாலும் கூட, அவ்வுணர்வை தவிர்க்க முடியவில்லை.
கதை முழுவதும் ஆங்காங்கே வரும் காதல், திருமணம், உறவுகள் பற்றிய கேள்விகள், உளவியல் பார்வையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் கோர்கிறது.
ஒவ்வொரு உறவுக்கு இடையிலும் ஒரு சுதந்திரம் இருத்தல் நலம். ஆனால், அது உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு என்ற அளவில் பரந்துபட்ட சுதந்திரமாக இருத்தல் கூடாது. மாறாக, நம் பாதை எது என்ற தேடலில் இருக்கிறது அந்த சுதந்திரத்தின் வெற்றி… என்பதை உணர்த்தும் வகையில் இக்கதை சிறக்கிறது.
Unique writing style. Excellent flow. Subtle romantic story with lots of messages for married couples.Kudos to the author .Expecting more novels from you.