வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றி தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்துவம் எப்படி உருவாகியது என்பதற்கு நிறைய உதாரணங்களை இந்த நூலில் காணமுடிகிறது. இவ்வளவு வெளிப்படையாகத் தனது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்ட கவி வேறு யாருமில்லை. கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ என்னும் இந்த நூலை இலக்கிய வாசகர்களும் கவிஞர்களும் அவசியம் வாசிக்கவேண்டும். எஸ்.ராமகிருஷ்ணன்
கலாப்ரியா (பிறப்பு: ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுதத்துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
'இசைந்து வாழ்தல்' என்ற சொற்றொடர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த சொற்றொடர்க்கேற்ப வாழ்க்கை அருளும் ஒவ்வொரு தருணங்களை அவை இன்பமாயினும் துன்பமாயினும் அவற்றிற்கு இசைந்து அந்தந்த கணத்திற்கு நம்மை முற்றிலும் உட்படுத்திக்கொண்டு வாழ்தல் என்பது ஒரு கலை. அந்தக் கலை கவிஞர் கலாப்ரியாவிற்கு வெகு இயல்பாகவே வாய்த்திருக்கிறது.
கவிஞர் சிறு வயது முதல் பணி ஓய்வு பெற்ற காலம் வரை வாழ்க்கை அவருக்கு அளித்த வெவ்வேறு அனுபவங்களை உணர்ச்சி ததும்ப மிகவும் நேர்மையாக நம்மிடம் இந்த நினைவின் தாழ்வாரங்கள் வழியாகப் பகிர்கிறார். வாழ்வின் தாழ்வுகளைப் பிறரிடம் பகிர்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதனைச் சுவைப்படப் பகிர்வதற்கு ஒரு திறன் வேண்டும். இந்த இரண்டுமே கவிஞருக்குக் கைவசமாகி இருக்கிறது. வாழ்க்கையின் பின்னடைவுகளைச் சமாளிக்க நம் மனது எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். அது புத்தகமாக இருக்கலாம், நல்ல படங்களாக இருக்கலாம், இசையாக இருக்கலாம். அதுபோல கவிஞருக்குத் திரைப்படங்களும், திரைப்பாடல்களும் அவர் வாழ்க்கையின் பெருந்துணையாக அமைந்திருக்கிறது. இந்நூலில் திரைப்படங்களும் பாடல் வரிகளும் இடம்பெறா அத்தியாயம் ஒன்று கூட இல்லை என்பதே அதற்குச் சான்று.
"ஏம்ல, யாராச்சும் கிருஷ்ணராச தேவராயரும், தெனாலிராமனும் திருநெல்வேலி வட்டார பாசைல பேசி கேட்டிருப்பீங்களா?" இதில் வரும் ஒர் அத்தியாயத்தில் கவிஞரின் ஆசிரியர் தெனாலிராமன் கதையை மாணவர்களுக்கு அவர்களது மொழியிலேயே சொல்லியிருக்கும் அந்தக் காட்சியை நான் மிகவும் சிரித்து, ரசித்து வாசித்தேன்
வார்த்தை அலங்காரங்கள் இன்றி, திருநெல்வேலி வட்டார மொழியோடு, இயல்பாகத் தன் நினைவு அடுக்குகளை அவிழ்த்திருப்பதே இந்நாலின் மிக அழகான அம்சம். அவரின் நினைவுகள் மட்டுமின்றி, திருநெல்வேலி மக்களின் பண்பாட்டினையும், அவர்களின் பழக்கவழக்கங்களையும் கவிஞர் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருப்பது பிரமாண்டம்
எந்த ஒரு ஆரவாரமுமின்றி தாழ்வாரங்களில் சொட்டும் மழை நீர் போல் இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் பொறுமையாக இசைந்து வாசித்தால் இந்நூல் வாசிப்பனுபவம் நிறக்கும்.
அறுபதுகளின் இளைஞர்களை, அப்படியே கண்முன் நிறுத்துகிறார். திமுக தொண்டனாக, எம் ஜி ஆர் ரசிகனாக, இந்தி எதிர்ப்புக் குரலாக (தார் டின்னுடன் செங்கோட்டை பயணம் ஒரு சுவையான, உண்மையான பதிவு) இளமை தரும் தவிப்பொடு, அலை பாயும் பருவத்தை, பாசாங்கில்லாமல் பதிவு செய்துள்ளார். ஒரு கவிஞனாக என்னை வசியம் செய்தவரின், கவிதைக்கு பின்னுள்ள அனுபவங்கள் சற்றே வித்தியாசமாக, எதிர்பாராத விதமாக ஆனால் உண்மையாக இருப்பது புரிகிறது. திருநெல்வேலி இளைஞனின் கலா (பிரியமான) ரசனையான அனுபவங்கள்.