வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர். தற்போ இவர் பாயும் புலி (2015 திரைப்படம்) மற்றும் சேதுபதி (2016 திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்.
நீளும் ரெக்கை, வேட்டை போன்றவை இவரது சிறுகதை நுால்களாகும். பட்டத்து யானை, குற்றப்பரம்பரை (முன்னதாக கூட்டாஞ்சோறு என அழைக்கப்பட்டது) மற்றும் குருதி ஆட்டம் ஆகியவை இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.
தான் எனும் அகங்காரம், அது கொடுக்கும் கோபம், அதன் உந்துதலில் அழியும் குலம்… என்பதை இரத்தமும் சதையுமாக நம் எண்ணங்களை ஆட்கொள்கிறாள் அரியநாச்சி.
சாதாரண விசயத்துக்காகக் கொலை செய்து விட்டு, ஜென்மக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெள்ளையத்தேவனைக் காண, அவரது முதலும் மூத்தவளுமான மகள் அரியநாச்சி சிறைக்கு வருகிறாள். அவள் நிறைசூழி. தனது தங்கையான மாயழகிக்கு தனது கொழுந்தன் சோலையைக் கல்யாணம் செய்யும் பொருட்டு, தந்தையின் சம்மதம் வேண்டி பார்த்து விட்டு செல்கிறாள்.
இதனை அறிந்து கொண்ட அவளது இளைய சகோதரன் பாண்டிக்கு கோபம் எழுகிறது. சாதாரணமாகவே அவனது அக்காவின் ஊரான வெள்ளாங்குளம் என்றாலே அவனுக்கு அவ்வளவு வெறுப்பு. இதில் அரியநாச்சியின் செயல் அவனது கோபத்திற்கு எண்ணெய் ஊற்ற, அதை மேலும் அவனது மனைவி குமராயி ஊதி பெருதாக்குகிறாள்.
அரியநாச்சி, பாண்டி, மாயழகி மூவரும் சிறு வயதிலேயே தாயை இழந்து விட, அவர்களை சீராட்டி வளர்த்தது வள்ளி அத்தை தான். நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று விட்ட பிறகு, தன் அண்ணனுடைய மக்களை சொந்த மக்களாக பாவித்து வரும் வள்ளிக்கு, இப்பிரச்சனை மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது.
பாண்டி தன் மச்சினனுக்கும், அரியநாச்சி தன் கொழுந்தனுக்கும் என மாயழகியை மணமுடிக்க நினைக்க, இப்பிரச்சனை வெள்ளாங்குளம் – பெருநாழி எனும் இரு ஊராரின் பிரச்சனையாக வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனினும், அரியநாச்சியின் கணவன் சக்கரைத்தேவனின் பெருந்தன்மையினால், மாயழகியை பாண்டியின் மச்சினனுக்கு நிச்சயம் முடித்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணமும் நடக்கிறது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, திருமணம் முடிந்த அன்றே, மாயழகி, அரியநாச்சி, குமராயி மூவருமே தாலி அறுக்கின்றனர்.
கோபம், மூர்க்கம், சினம் என எல்லாம் ஒரே உணர்வைக் குறித்தாலும் அவை வெளிப்படும் அளவுகளில் வேறுபடும். இக்கதை மாந்தர்களின் உணர்விலும், வாழ்விலும் இரண்டறக் கலந்திருப்பதும், வெளிப்படுவதும் மூர்க்கம் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பே.
வாழ்வுக்கும் வார்த்தைக்கும் உணர்வுக்கும் இடையே கண நேர இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து என உடனுக்குடன் காரியத்திற்கு துணிந்த பின்னரே, அதனை எண்ணிக் குமைகின்றனர்.
ஏதேனும் நடந்து விடுமோ. எனும் பதைபதைப்பிலேயே கொண்டு சென்று, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஆசுவாசம் கொள்ளும் வேளையில், சட்டென்று அது நடந்து விடும் நேரம் நம்மையும் அப்பதற்றம் சூழ்ந்து கொள்கிறது. அந்த அளவிற்கு ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாத எழுத்து நடை.
வட்டார வழக்கிலான உரையாடல்களின் நேர்த்தியும், களங்களைக் காட்சிப்படுத்தும் விதங்களும், கதை மாந்தர்களின் உணர்வுகளைக் வாசகருக்கும் அப்படியே கடத்தி விடுதல் இதன் கூடுதல் சிறப்பு.
புத்தகம் : அரியநாச்சி ஆசிரியர் : வேல ராமமூர்த்தி பக்கங்கள் :120 பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
"இது, என் மண். இவர்கள்தான் என் மனிதர்கள். இந்த மண்பற்றி மட்டுமே எழுதுகிறேன். இந்த மனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்."
வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகம். அவர் புத்தகத்தின் பின் உறையில் கூறியது போல் ரத்தம் பற்றி எழுதப்பட்ட கதை.மண்வாசம் பக்கங்களினூடே கமழ்கிறது .
அவசரத்தில் செய்த கொலைக்காக ஜெயில் வாசம் செய்யும் வெள்ளையத்தேவன். தாயும் குழந்தைப்பேரில் இறக்க, தந்தையும் விட்டுச்சென்ற குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கிறார் அவர் தங்கை வள்ளி அத்தை.
அக்கா அரியநாச்சியின் மச்சினன் சோலைகக்கு தன் தங்கை மாயழகிய மணமுடித்து தன்னோடு அழைத்துச் செல்ல நினைக்க, அண்ணன் பாண்டி தன் மச்சினன் கருப்பையாவுக்கு அவளை மணம் செய்ய விரும்ப., இடையில் இது ஊர்பிரச்சனையாக மாறாமல் அரியநாச்சியின் கணவர் சக்கரைத்தேவன் பாந்தமாக நடந்து கொள்ள, இறுதியில் மாயழகிய யாரை மணந்தாள் என்று கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு குறையாமல் எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
"கோபம் குலத்தை அழிக்கும்" என்ற வழக்குமொழிக்கு சான்றாகிறது கதை.
சண்ட செய்வோம் வாடா! என கோபத்தில் சிந்தனையை இழக்கும் மனிதன் சந்திக்கும் இழப்புகள் ஈடுகொடுக்க முடியாத இழப்பாக அமைந்துவிடும் என்பதற்கு சான்றாக அரியநாச்சி நாவல். தென் திசை மக்களின் வட்டார வழக்கு மொழி நாவலின் சிறப்பு.
அரியநாச்சி . வன்முறை தான் முடிவென்பதை அட்டைப்படத்தை பார்த்ததுமே நீங்கள் முடிவெடுத்திருந்தால் நீங்களும் நானும் வேறல்ல . கதை படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே அரியநாச்சி நிறைமாத கர்ப்பிணி என்று தெரிந்தவுடன் சற்றே மனம் படபடக்க ஆரம்பித்தது . அதன்பின் கதையின் ஓட்டம் நம்மை வேறு எண்ணங்களுக்கு திசைதிருப்பாமல் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு போக , இறுதியில் நாம் எதிர்பார்த்த வன்முறை முடிவு எவ்வித ஆச்சரியமும் ஏற்படுத்தாமல் , நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் முடிந்தது . குருதியாட்டம் குறுநாவலை போலவே நன்றாக போய்க்கொண்டிருக்கும் நாவல் பக்கங்கள் குறைய குறைய வலுக்கட்டாயமாக முடிவுக்கு தள்ளப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது . ஆசிரியரின் விறுவிறுப்பான நடை மட்டுமில்லையென்றால் கண்டிப்பாக முழுதாய் படித்து முடித்திருக்க கூட முடியாத ஒரு குறுநாவலாக தான் இது அமைந்திருக்கும் ( இப்போதும் கூட அவர் படைப்புகளில் கடைசி இடத்தையே இது பிடித்திருக்கும் ) . கதாபாத்திரங்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை . கதையும் பெரிய திருப்பங்களையோ , புதிய கதவுகளையோ திறக்கவில்லை . எழுத்தாளரின் எழுத்தை விரும்பி படிப்பவர்கள் ஒரு முறை அதுவும் எழுத்தாளருக்காக படிக்கலாம் .அவ்வளவு தான் .
கூரிய பார்வையும், கம்பீர குரலும், உறுதியான உடற்க்கட்டும் கொண்ட நடிகரும், எழுத்தாளருமான திரு.வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துப் பயணம் பற்றி பலரும் அறிந்ததே..,
அவரின் படைப்புகள் அத்தனையுமே சிறப்பானது என சொல்லக்கேட்டு எதை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் திகைத்தேன்.
அவரின் படைப்புகளான குற்றப் பரம்பரை, பட்டத்து யானை, குருதி ஆட்டம் ஆகிய மூன்றுமே ரத்தம், கோபம், வீரம் கொண்ட ஆண் உருவத்தைக் கொண்ட அட்டைப் படங்களை கொண்டிருக்க "அரியநாச்சி" நாவல் அதே ரத்தம், கோபம், வீரம் கொண்ட பெண் உருவமே அதை தேர்ந்தெடுக்க காரணமாயிற்று..,
விறுவிறுப்பான கதை அமைப்பு, குடும்ப உறவுகளுக்கு இடையில் கட்டப்பட்ட கதை, வாழ்க்கை எவ்வளவு ��ிறியது, கண்மூடி திறப்பதற்க்குள் தோன்றி மறையும் கோபத்தின் விளைவு, இன்றைய நாட்களிலும் சாதி பெருமை பேசிக் கொண்டு வெற்றாய் திரியும் சில மனிதர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
ஆப்பநாட்டு பெண் தெய்வம் என்ற வரிகளுடன் தொடர்கிறார் ஆசிரியர் திரு. வேல ராமமூர்த்தி.
வெட்டு, குத்து என்பது எவ்வளவு இயல்பாகக் கருதப்படுகின்றது என்பதை ஆசிரியர் வெகு தெளிவாக இக்கதையில் விவரிக்கிறார். கால் பவுன் தங்கத்திற்காக 9 தலைகள் உருண்டது முதல், ஜெயில் நமக்காகத் தானே சர்கார் கட்டி வைத்திருக்கிறது என்கிற வழக்கம் வரை கதையில் பல வரிகள் நம்மை திகைப்பூட்டுகின்றன.
144 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் கதை பெரிய திருப்பங்களையோ , புதிய கதவுகளையோ திறக்கவில்லை என்றாலும் சில கதாபாத்திரங்கள் மனதில் சில தாக்கத்தை உண்டாக்குகின்றன. குறிப்பாக அரிய நாச்சியின் திருமணம் ஆகாத அத்தை கதாபாத்திரம் தீராத காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. விறுவிறுப்பான கதை அமைப்பு, குடும்ப உறவுகளுக்கு இடையிலான கதைக்களம், கண்மூடி திறப்பதற்க்குள் தோன்றி மறையும் கோபத்தின் விளைவு என பதறவைக்கும் கதை நகர்வுடன் நம்மை ஈர்க்கிறார் ஆசிரியர்.
அறிவியல், கல்வி என தற்கால சமூக வளர்ச்சி வேரூன்றி நிற்கும் இன்றைய நாட்களிலும் சாதி பெருமை பேசிக் கொண்டு வெற்றாய் திரியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றால், முந்தைய நூற்றாண்டில் அது இன்னும் எவ்வளவு மோசமானதாக இருந்திருக்கும் என்பதை வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துக்கள் உணர வைக்கின்றன.
தமிழ்நாட்டின் கிராமத்து மண் சார்ந்த கதைகளை படிக்க விரும்புவோர் இந்த புத்தகத்தை தாராளமாகப் படிக்கலாம்.
ஜெயிலுல ஜென்ம கைதியாக இருக்கும் வெள்ளையத்தேவன். அவனுக்கு இரண்டு பொண்ணு ஒரு மகன்.ஒரு கொலை பண்ணிட்டு ஜென்மத்திலே உள்ள போயிட்டாரு மூணு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குனது வெள்ளையத்தேவனின் தங்கை வள்ளிதான்.
பெரிய பொண்ணு அரியநாச்சி அவள் கணவன் வெள்ளாங்குளம் சக்கரைதேவன்.கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷசத்துக்கு அப்புறம் இப்போதான் ஒரு புள்ள உண்டாயிருக்க அரியநாச்சிக்கு. தங்கச்சி மாயழகிய தன் கொழுந்தன் சோலைக்கு கட்டிவைக்கணும்னு ஒரு ஆசை.
வெள்ளையத்தேவன் மகன் பாண்டி அவனுடைய மனைவி குமராயி. சொத்து வெள்ளாங்குளம் ஆளுகளுக்கு போக கூடாதுன்னு குமராயிக்கு தன் தம்பி கருப்பையாவுக்கு மாயழகிய கட்டி வைக்கணும்னு முடிவாய் இருந்தா.
இதுல மாயழகிய யாரு கல்யாணம் பண்றாங்க பின்பு என்ன ஆகுது என்பதுதான் கதை.
முதலில் வரும் அத்தியாயங்கள் வெள்ளையத்தேவன், அரியநாச்சி, வெள்ளாங்குளம் சக்கரதேவரின் அறிமுகங்கள் கதையோடு கூறப்படுகிறது.
மொத்தமுள்ள இருபது அத்தியாயங்களும் விறுவிறுப்புக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லாமல் பறக்கிறது. இறுதிப் பக்கத்தில் யாரும் எதிர்பாராத சில சம்பவங்கள் தோன்றி கதை முடிகிறது.
தமிழ்நாட்டின் கிராமத்து மண் சார்ந்த கதைகளை படிக்க விரும்புவோர் இந்த புத்தகத்தை தாராளமாகப் படிக்கலாம்.
வெட்டு, குத்து என்பது எவ்வளவு இயல்பாகக் கருதப்படுகின்றது என்பதை ஆசிரியர் வெகு தெளிவாக இக்கதையில் விவரிக்கிறார். சில வரிகள் திகைப்பூட்டுகின்றன: கால் பவுன் தங்கிற்காக 9 தலைகள் உருண்டது முதல் ஜெயில் நமக்காகத் தானே சர்கார் கட்டி வைத்திருக்கிறது என்கிற வழக்கம் வரை. 144 பக்கங்கள் என்ன நடக்குமோ என்கிற பதை பதைப்புடனே நகர்கின்றன. கதையின் முடிவு ஒரு நொடியில் எவ்வளவு சேதம் நடக்க முடியும் என்பதையும், கோபம் குலத்தையே அழிக்கும் என்பதையும் நம் கண் முன்னே காட்டுகிறது. ஆசிரியரின் எழுது பேச்சு வழக்காக இருந்தாலும் வாசிக்க எளிமையாகவே இருந்தது (ஜெயமோகன் எழுத்து மட்டுமே பேச்சு வழக்கில் வெகு வித்தியாசமாகவும், வாசிக்கச் சிரமமாகவும் இருக்கிறது). வேல ராமமூர்த்தியின் இதற நூல்களை வாசிக்க விழைக்கிறேன்.
கோபம் குலத்தை அழிக்கும் என்ற மையக்கருத்துள்ள புத்தகம்.
அக்கா தம்பி தங்கை சார்ந்து வரும் கதை.
அரியநாச்சி தாயில்லா தங்கையை மிகுந்த பாசத்துடன் தாங்கியிருக்கிறாள், திருமணமுடிந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு கருவுற்று நிறைமாத கர்பிணியாய் தன் தந்தையிடம் தங்கையின் திருமணம் பற்றி பேச சிறைச்சாலைக்கு செல்வதில் தொடங்குகிறது இக்கதை.
வெள்ளைத்தேவர் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார், அங்கும் மிகுந்த நன்னடைத்தையோடு இருக்கிறார்.
பாண்டி தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் தன் தங்கையின் திருமணத்தை தன் தந்தையிடம் பேசியதால் கோபம் கொண்டு தன் மனைவியின் தம்பிக்கு மாயழகியை முடிக்கப்போவதாக பேசுகிறான்.
திருமணம் நடந்ததா இல்லையா? கதைமாந்தர்கள் என்வானார்கள் என்பது மீதிக்கதை.
'கோவம் குலத்தை அழிக்கும்' என்ற மையக்கருத்தை கொண்டு நகர்கிறது இந்நாவல். கல்யாணத்தில் என்ன பிரச்சனை வருமோ என்ற பதட்டதுடனே ஆசிரியர் வாசகர்களை வைத்திருக்கிறார். விறுவிறுப்புடன் கதை நகர்ந்தாலும், கதை மனதில் பதிந்த அளவிற்கு கதாபாத்திரங்கள் பதியவில்லை. அவசர அவசரமாக கதைக்கு முடிவு அளித்ததை போல இருந்தது.
புத்தகம் : அரியநாச்சி எழுத்தாளர் : வேல ராமமூர்த்தி பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 120 நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ்
🔆அரியநாச்சி - அவளது தந்தை , அந்த ஊரில் மிகவும் மதிக்கத்தக்க மனிதர். ஒருவரை ஆத்திரத்தில் தன்னை மறந்து ஒருவரை கொலை செய்து விடுகிறார் . அதற்காக ஆயுள் தண்டனையும் பெறுகிறார் . அரியநாச்சிக்கு அடுத்து ஒரு தம்பி (பாண்டி ) ஒரு தங்கை (மாயழகி) . கடைசி பெண் பிறந்தவுடன் அவர்களின் தாய் இறந்துவிடுகிறார் . தன் தங்கைக்கு ஒரு தாயாக இருந்து அனைத்தையும் பார்க்கிறாள் அரியநாச்சி .
🔆இந்த நிலையில் அரியநாச்சிக்கும் , வெள்ளாங்குளம் சக்கரைத்தேவனுக்கும் திருமணம் நடந்தது . திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அவள் கருவுற்றாள் . அந்த நிலையில் அரியநாச்சியின் தங்கை மாயழகியின் திருமண பேச்சுகள் தொடங்கின . அரியநாச்சியின் கொழுந்தனுக்கும் , பாண்டியின் மச்சானுக்கும் , மாயழகியை திருமணம் செய்து கொள்வதில் சண்டை வருகிறது . என்ன ஆயிற்று என்பதே மீதிக் கதை .
🔆ஆவதும் பெண்ணால் , அழிவதும் பெண்ணால் என்பதே அரியநாச்சி .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி