முந்தைய பாகங்கள் போலவே, இந்த பாகத்திலும் மிக கவனமாகவும் அழகாகவும், கோவில் கட்டுவதில், பல்வேறு சமூகங்களின் பங்கைப் பற்றி விவரிக்கிறார். பல்வேறு சமூகங்களின் ஏற்றத் தாழ்வுகள், உணர்வுகள், கனவுகள், காதல், ஏக்கம் என்ற பல்வேறு பரிணாமங்களை அடுத்தடுத்து கையாளுகிறார். பாலகுமாரனின் நடுநிலைத் தன்மை எங்கெங்கும் சூரியனின் கதிர்கள் போல பளிச்சென இருக்கிறது. கதாபாத்திரங்களை அவர்கள் பல்வேறு வேண்டிய மற்றும் வேண்டாத குணங்களுடன், மொத்த குணாதிசயங்களைப் பார்க்கும் போது, நம்மைப் பற்றிய ஒரு சுயபரிசோதனை ஏற்படுகிறது. இதில், ராஜேந்திரன் என்ற இளவரசன், எதிர்காலத்தில் அரசனாக பரிமளிக்கப் போவதற்கான தயார்படுதலை, மிக அழகாக விளக்கியுள்ளார்.
ஆதித்த கரிகாலன் எவ்வாறு கொல்லப்பட்டிர��க்கலாம் என்பதை தனக்கே உரிய பாணியில், அழகாக கையாண்டிருக்கிறார். எங்கெங்கெல்லாம், எழுத்தாளனின் கற்பனையை, சரித்திரத்துடன் பின்னி பிணைக்க முடியுமோ, அங்கெல்லாம், அழகாக பின்னி பிணைத்து, வரலாற்றை நமக்கு பல்வேறு பழங்களுடன் பஞ்சாமிர்தமாக ஊட்டுகிறார்.
கோவில் இப்படித்தான் கட்டியிருப்பார்கள் என்பதை மிக அழகாக ஒரு தேர்ந்த கட்டிடக்கலை நிருபர் போல எடுத்துரைக்கிறார்.
இந்தப் புத்தகத்தை நான் மறக்க மாட்டேன். ஏனென்றால், இதைப் படிக்கும் போதுதான் பாலகுமாரன் மறைந்தார். அவருடைய எழுத்துக்கள் என்றும் வாழும்.