சத்தியம் தோற்பதில்லை. இந்த காந்திய வார்த்தைகளை நான் நம்புகிறேன். வெவ்வேறு நிலங்களில் வசிக்கும் வெவ்வேறு சாட்சிமனிதர்களான காந்தியர்களை, பாலசுப்ரமணியம் முத்துசாமி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தான் படித்த படிப்பை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே சுருக்கிக்கொள்ளாமல், எல்லா மக்களுக்குமானதாக பயன்படுத்த நினைக்கும் அவருடைய அக்கறையை நான் பெரிதும் மதிக்கிறேன். அந்த அக்கறையில் உருவான இப்புத்தகத்தை முக்கியமானதாக நினைக்கிறேன்.
- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
அறிமுகமாகும் ஒவ்வொரு புதிய தளத்திலும் புதுப்புது காந்திகள் முளைவிடலாகிவிடுகிறார்கள். அவர்கள் காந்தியை எதன் வழியாகவும் பிரதிபலிக்க வேண்டியதில்லை; சாராம்சப்படுத்திக் கொண்டால் போதுமானதாகிவிடுகிறது. அப்படியென்றால், காந்தியம் எங்கே வாழ்கிறது? அது படைப்பூக்கத்தில் வாழ்கிறது. புதிய உலகின் சவால்களைத் தன்னுடையதாக்கிக்கொண்டு உயிர்ப்பான தீர்வுகளை உருவாக்குவோர் வழி அது தன்னை விஸ்தரித்துக்கொள்கிறது. இந்த நூலில் வரும் ஒவ்வொரு ஆளுமையினிடத்திலும் இந்தப் பண்பைக் காண முடியும்; பாலா துல்லியமாக இதை நாடி பிடித்திருக்கிறார்.
மிக சுவாரஸ்யமான நடையில் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் வார்த்தைகள் வழியே மலரும் பாலாவின் கதையாடல் எண்ணற்ற காந்திகளை உருவாக்கும் தேட்டத்தையும் அதற்கான ஆற்றலையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. காந்தியின் நூற்றியைம்பதாம் ஆண்டு தருணத்தில் வெளியாகும் இந்த நூல் காந்தியத்தின் வல்லமையை உயரே தூக்கிப் பிடிக்கிறது; கூடவே காந்தியின் கனவிலிருந்து இந்த நாடு இன்றைக்கு எவ்வளவு விலகி வந்துவிட்டது, அவர் கொடுத்துச் சென்ற வல்லமை மிக்க கருவியை நாம் இன்றைக்கு எந்த நிலையில் பராமரிக்கிறோம், என்னவாகக் கையாள்கிறோம் என்ற தீவிரமான கேள்வியையும் நம்முள் எழுப்புகிறது!
- சமஸ், பத்திரிகையாளர்
இந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது.
மெல்ல மெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி, குறைந்த வேலை வாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது. மானியங்களால் செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்துகொண்டேவருகின்றன. இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன்.
சுதந்திரச்சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கிவருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை.
சாமானியனாய் எல்லா வித ஆசைகளுடனும் வாழ்தல் எளிது. அதே நேரம் காந்தியைப் போல் வாழ்தல் எப்போதுமே பெருந்தவம் என்றே எனது புரிதல். அதீத நவநாகரீகமும் அறிவியலின் தாக்கமும் இன்றைய வாழ்தல் முறையில் பெரும் தாக்கத்தை தொடுத்துள்ளது. அந்த வாழ்க்கை மனிதனை ஓவ்வொரு மணித்துளியும் வாழ்ந்தாக வேண்டிய அவசியத்தை மாயா தோற்றமாக மாற்றி அதன் போதையை அணு அணுவாய் பருகி வாழ்தல் என்பதை அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாற்றி விட்டது. அது சுயநல வாழ்வையும் போட்டி மிகு சமூகத்தையும் கண்முன்னே நிறுத்துகிறது.
இக்காலச் சமூகத்தில் பெரும் யோகியைப் போல தன் வாழ்வைச் சாமானியனுக்குச் சமமாக முன்னிறுத்தி எந்நலமும் நாடாது தன் வாழ்வை திறந்த புத்தகமாக்கி அதிலும் சில நேரம் தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தவறுகள் இருக்குமிடத்தில் அதை திருத்தி வாழ்ந்த மாமனிதனின் வாழ்வையொட்டிய மனிதனின் தேடல் என்பது அசாத்தியமானது.
இந்த புத்தகம் காந்தியைப் போல் அச்சு அசலாக வாழ்ந்தவர்களைப் பற்றியல்ல. காந்தியின் தாக்கத்தால் ஏதோவொரு துறையில் அவர்கள் காட்டிய தன்னலம் பாரா அர்ப்பணிப்பு உணர்வு அவர்களை இன்றைய காந்தியர்களின் பட்டியலில் இடம் பெயரச் செய்துள்ளது. பொதுப் பணியில் சுயம் ஒடுக்கி தன்னையே சமூகத்திற்கு ஒப்புக்கொடுக்கும் பேருள்ளங்களைக் காணும் போது அபரிமிதமான பிரமிப்புணர்வும் நம்மால் அப்படி ஆக முடியாத வெறுமையுணர்வும் எற்படுவதை தவிர்க்க முடியாததாகவே ஆகிறது.
இவர்கள் காந்தியப் பொருளாதாரத்தின் கிளைகளில் சிலக் கிளைகளைத் அவர்களுக்குரியதாக மாற்றியிருக்கிறார்கள். அதில் பல சாதனைகள் தேசத்தின் அடையாளமாகவே ஆயிருக்கிறது. அந்த புத்தகத்தில் சுட்டப்பட்டவர்களில் சிலர்
வெண்மை புரட்சியின் தந்தை(அமூல்) என்று வர்ணிக்கப்பட்ட வர்கீஸ் குரியன்,
இன்று கண் மருத்துவமனையில் இலவசமாக அல்லது குறைந்த செலவில் சிகிச்சைகளை மேற்கொண்டு பெரும் சாதனைகளை புரிந்து வரும் அரவிந்த் கண் மருந்துவமனையின் ஸ்தாபகர் டாக்டர் வெங்கிடசாமி,
சோனம் வாங்சுக்கால் லடாக் பாலைவனத்தில் அடிப்படை அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் கொண்டு மக்களுக்காக இதுவரை நிர்மாணித்துள்ள கல்வி, நீராதாரக் கட்டமைப்பு, பனிப்பாள மீட்டெடுப்பு (பனி ஸ்தூபிகள்),
தண்ணீர் காந்தி என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சிங்கால் மேற்கொள்ளப்பட்ட ஆர்வரி என்ற சிறுநதியை வற்றாத ஜீவநதியாக மாற்றிய பெருமை,
இன்று நாமெல்லாம் அரசதிகாரிகளின் ஊழல்களை வெளிக்கொணரும் (Right Information Act) தகவலறியும் உரிமை சட்டம் வருவதற்கான முன்னோடியாக இருந்த அருணா ராய் மற்றும் குழுவினர் ,
நவின தொழிற் நுட்பக் கூடங்களில் தான் அறிவியல் ஆய்வுகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தகர்த்து நம்மைச் சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டே அறிவியல் ஆய்வுகளை குழந்தைகளுக்கு எளிய முறையில் நிகழ்த்த முடியும் என்பதை செய்துக் காட்டிய அர்விந்த் குப்தா
என்பவர்களை நம் மனதோடு நெருங்க வைக்கிறார் ஆசிரியர்.
இனிவரும் காலங்களில் இப்படியான காந்திகளைத் தான் பார்க்க முடியும் என்பதும் இவர்களின் சாதனைகள் ஏதோவொரு வகையில் காந்தியத்தை பிரதிநுதப்படுத்துகிறது என்பது இதுவரை வந்த ஆட்சியாளர்கள் காந்தியைப் போன்றவர்களை உருவாக்க தவறிவிட்டார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. இவையாவும் நூலைக் குறித்தான முக்கியமான பார்வைகளில் சில மட்டுமே இனியும் இருப்பதை நூல் வாசிப்பதில் அறியலாம்.
நேர்மறைகளை மட்டுமே எடுத்து சொல்லல் என்பது விமர்சனத்தை சாய்வு அரசியலை கொடுத்து விடும் என்பதில் என்னை அதீத கவனப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இந்னூலின் ஆசிரியர் காந்தியையே நேசிப்பது போலவே சாய்வு அரசியலையும் நேசித்து விட்டாரோ என்ற ஐயம் இவர் எழுத்தில் இயல்பாகவே வெளிப்படுகிறது.
புத்தகத்தின் சில பகுதிகள் :
” சுதந்திரச் சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக் கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கி வருகிறது. பொருளா தாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தரமுடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை.
1991ஆம் ஆண்டு, இந்தியா அந்நியச் செலாவணிச் சிக்கலைச் சந்தித்தது. அன்றைய சூழலை மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்திய தலைவர் நரசிம்மராவ் அவர்கள், மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்ற திறமையான நிபுணர்களின் உதவியோடு, 80களில் வேகமாக வளரத் துவங்கிய பாரதப் பொருளாதாரத்தை மேலும் வளரும் வகையில் மாற்றினார். அதன்பின் வந்த பல அரசுகளும், அதே வழியில் செல்ல, பாரதம் உலகின் முக்கியப் பொருளாதாரங்களுள் ஒன்றாக உருவெடுத்தது. அதே சமயத்தில் உருவாகி வந்த மென்பொருள்துறை, பாரதப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியது.
இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பலமடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும் அதற்கேற்ப வேலைவாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது. மெல்லமெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது.
சைவ உணவுப்பழக்கம் அதிகம் உள்ள குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் மலையாளக் கிறிஸ்துவருக்கு நல்ல உணவு, வீடு கிடைப்பது எனப் பல சங்கடங்கள் இருந்தன. வார இறுதிகளில், விடுமுறை நாட்களில் மும்பைக்கு ரயில் பிடித்துச் சென்று தாஜ் ஹோட்டலில் தங்கி, வயிறார உண்டார்.
நாடெங்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு இதே நிலைதான். இன்றும், அதிகாரம் பரவலாக்கப் படாமலேயே பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்பதே, உள்ளூர் பங்களிப்பு ஜனநாயகம் என்னும் கருத்தாக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இந்தப் பிரச்சினையின் ஆணிவேர்கள், இந்திய அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்ட காலத்திலிருந்தே இருக்கின்றன என்கிறார் லஷ்மி சந்த் ஜெயின்.
லடாக், ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி.
Scientific Mind and a Religious Mind - விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகுதல். அந்த அணுகுமுறையை மிகவும் சிரத்தையுடன் செய்தல். Freedom and Order - சுதந்திரமும் ஒழுங்கும் இயல்பாக மலர்தல். ( மொழிபெயர்ப்பு எனக்கு அவ்வளவு உவப்பில்லை)
எனதுப் பார்வையில்
90 களில் நடைப்பெற்ற பொருளாதார மாற்றம் உலகச் சந்தைகளைத் திறந்து விட்டது. அதுவரை நலிவுடனிருந்த இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதுடன் அன்று தான் என்ற அகந்தையுடன் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இன்று காணாமல் போகும் நிலையை அடைந்திருக்கிறது. மக்கள் பெரும் நுகர்விற்கு அடிமையாகி இன்று சுயநலம் சார்ந்த பணமதிப்பு அறியாத சேமிக்கவே தெரியாத, பெரும் நுகர்வின் அடையாள நாகரீகத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இன்றைய இந்தியப் பொருளாதார மாற்றத்தின் பெரும் பங்கை மாற்றக் காரணமாக இருந்த பழைய ஆட்சிக்காலம் ஒரு மதச்சார்ப்பற்ற அரசாகவே விமர்சிக்க நினைப்பதுவும், இன்றைய அரசாங்கம் ஏதோ மதச்சார்புடன் மற்ற மதத்தினரை குரல்வளையை நெறி��்கும் அரசாங்கம் போலவும் இன்றைய அரசுதான் தாராள மையக் கொள்கையை தீவிரப்படுத்த முனைப்பு காட்டுவது போல சொல்வது பெரும் நகை முரண். இதுக் குறித்து பெரும் விவாதமே நடத்தலாம். அது புத்தக விமர்சனப்பகுதியில் முடியாது என்பதால் கடந்து விடுகிறேன். இன்றைய காலத்தில் தாரளவாதம் என்பது மறுக்க முடியாது என்பது நிதர்சனம்.
லடாக் பற்றி சொல்லும் போது இது காஷ்மீரின் பகுதியாகவே சொல்லப்படுகிறது. நான் வாசித்தது கிண்டிலில் அது வெளிவந்ததும் இந்த ஆண்டில் தான் எனும் போது கடந்த ஆண்டே யூனியன் பிரதேசமாக பிரிக்கப் பட்ட லடாக்கை கடந்த காலத்தில் காஷ்மீரின் பகுதி என்று அடையாளப் படுத்தியிருக்கலாம்.
வர்கீஸ் குரியனின் உணவு பற்றி வரும்போது அது குஜராத்,மாட்டுக்கறி, கிருத்துவர் என்ற குறியீடுகள் காந்தியக் கட்டுரைகளுக்கு ஒவ்வாதவையாகவே தெரிகிறது. மேலும் வர்கீஸ் குரியன் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதை சொல்வதில் என்ன தயக்கம் இருக்கிறது.
லஷ்மி சந்த் ஜெயினின் கூற்றுக்கு (இந்தப் பிரச்சினையின் ஆணிவேர்கள், இந்திய அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்ட காலத்திலிருந்தே இருக்கின்றன) அடிப்படை ஆதரமாக
கிறிஸ்தோபர் ஜாப்ரிலாவின் அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் எனும் நூலிலிருந்து அடிக்குறிப்புகளை கொடுத்திருக்கிறேன்.
(அம்பேத்கர் இல்லாமல் போயிருந்தால் காந்திய சிந்தனைகள் இன்னமும் வலுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி நடந்துவிடாமல், அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் காந்திய சிந்தனைகளைத் தள்ளிவைப்பதை உறுதி செய்தார்.)
(காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்கவேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையத்தில் குவிக்கவேண்டும் என்கிற முடிவு காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார். அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்)
இன்றையக் காலங்களில் காந்தியின் பெயரால் நடக்கும் போராட்டங்கள் அவ்வளவு நிறைவைத் தருவதில்லை. அது மக்களுக்கான போராட்டமாக இருக்காமால் அது மக்களைத் அநாவசியமாகத் தூண்டி அரசியல் ஆதாயங்களைப் பெறும் போராட்டமாக (CAA) மாறியுள்ள அவல நிலைகள். இதைக் குறிப்பிடக் காரணம் இந்த புத்தகத்தில் RTI க்கு காரணமாக இருந்தவர்களில் ஹர்ஷ் மேந்தர் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டது. ஆனால் அவரை உச்சநீதிமன்றம் கண்டித்ததும் அவர் அந்த போராட்டத்தை பெரும் கலவரமாக மாற்ற தூண்டிய வார்த்தைகள். அந்த கலவரம் தொடங்கிய போது எழுந்த விமர்சனங்கள்( வலது சாரிகளால் திட்டமிட்ட போராட்டம் எனப் பொங்கி) இன்று அந்த போராட்டத்தின் தீவிர பிண்ணனியில் இடம் பெற்ற அரசியலவாதிகளும், தொழிலதிபர்கள் இவையெல்லாம் எதை நோக்கிய பார்வை என்பதே கேள்வியாக.
குறைகளும் சாய்வுத்தன்மை மட்டுமே புத்தகத்தை வாசிப்பதிலிருந்து ஒதுக்கிட முடியாது. சிலக் குறைகள் கண்டாலும் அதில் சுட்டிக்காட்டப்படும் அத்துனை மனித நேய ஆர்வலர்களும் போற்றப்பட வேண்டியவர்களே.
காந்தியின் மறைவிற்கு பிறகு நம்மால் இத்தனை கோடி மக்களிலிருந்து ஒரு சில காந்திகளை மட்டுமே காணும் அவல நிலையிருக்கிறது. அதே நேரம் காந்தியை போலவே வாழ்ந்து எந்தவொரு புகழ்ச்சிக்கும் ஆட்படாமல் காந்தியின் மந்திர சொல்லிற்கு ( எந்தவொரு சத்தியாகிரஹியும் சுய விளம்பரத்திற்காய் தன்னை வெளிப்படுத்தி கொள்ளக் கூடாது ) ஆட்பட்டு மறைந்து போன பல நூறு காந்திகளுக்கு இவ்விமர்சனம் உரித்தாகட்டும்.
என் மகனுக்கு தூங்கும் போது கதை சொல்லும் நேரம் எப்போதும் எங்கள் இருவருக்குமான ஒரு தனி உலகம்; விலைமதிப்பில்லா நேரம். படிக்காத, விளையாடாத மற்ற நேரங்களில் தொலைக்காட்சியின் சாகச நாயகர்களும், புதுமைகளும், அதைச்சுற்றிய கனவுகளும் சூழ்ந்து கொள்ளும்போது, தூக்கத்திற்கு முன் சில மணித்துளிகளே எனக்கும் அவனுக்குமான பிரத்தியேக பொழுதுகள். அவற்றில் திருவாத்தான்களும், தெனாலி ராமனும், முல்லாவும் மட்டுமே ஆரம்பத்தில் அனுமதி. பிறகு அவன் வளர்ந்து வரும்போது அவனுக்கு அவன் பார்க்கும் மாய உலகங்களின் சாகச நாயகர்களைத் தாண்டி, தன்னம்பிக்கையும், சமூகத்தின் மேல் நம்பிக்கையும் சொல்ல, கடவுளையும், சாத்தானையும் கூட்டிவர நான் விரும்பவில்லை. அதனால், அதற்கு பதிலாக ஒரு சோதனை முயற்சியாக இன்றைய காந்திகளில் இருந்து அவனுக்கான கதையை தேட முயற்சி செய்தேன். ராஜேந்திர சிங்கும், டாக்டர் Vயும், டாக்டர் குரியனையும் மெதுவாக சொல்ல ஆரம்பித்தபின், அவன் கேள்விகளால் எங்கள் உலகம் சிறிது சிறிதாக, நேரு, காந்தி மற்றும் இந்திய சமகால வரலாறு என்று விரிந்தது எனக்கே பெரிய ஆச்சர்யம். பொதுவாக, காந்தியம் என்றால் அது மிக இறுக்கமான ஒரு தத்துவம் ( dogmatic ) என்பதையும், அது சமகால இந்தியாவின் அபிலாஷைகள் மற்றும் தேடல்களுக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு விஷயம் என்பதையும் இந்த நூல் முழுதும் உடைக்கிறது. காந்தியை பற்றியே அப்படி ஒரு பிம்பம் தெரிந்தோ, தெரியாமலோ தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. அது உண்மையல்ல என்று காந்தியை பறந்த கோணத்தில் ஆராய்ந்தவர்களுக்கும், அவரைப்பற்றி வாசித்தவர்களுக்கும் புரியும். உதாரணத்துக்கு, "காந்தியுடன் ஒரு நாத்திகன்" எழுதிய கோரா, ( "An Atheist with Gandhi" by Goparaju Ramachandra Rao) காந்தியின் தீவிர மத நம்பிக்கை என்ற பிம்பம் எப்படி உண்மை அல்ல, என்பதை விளக்கியிருப்பார். அவரும் மற்ற காந்தியுடன் பழகிய பலரும் இணையும் ஒரு மையப்புள்ளி, காந்தியின் தத்துவம் இறுக்கமானதல்ல. மிகவும் நெகிழ்வானது, நடைமுறை உண்மையை ( practical facts rather than theoretical purity) மையப்படுத்தியது என்பது. அதன் மீட்சியாகவே இந்தப் புததகத்தின் மனிதர்கள் காணப்பட வேண்டும். அவர்கள் யாவரும் காந்தியத்தையும், அதன் கோட்பாட்டினைப் பேசாமல் வாழ்வையும் அதன் நடைமுறை தீர்வுகளையும் காந்திய வழியிலேயே நடத்திக்காட்டியவர்கள். அவர்கள் அனைவரும் எளிமை, மற்றும் தற்சார்பு ஆகியவற்றின் வழியில், மக்களுக்கான தீர்வை, மக்களுடன் இணைந்து, வழிநடத்தி, அவர்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தியவர்கள். மக்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு பிரமாண்டமான திட்டங்கள் மட்டுமே தீர்வல்ல. எளிமையான மாற்றுச்சிந்தனை மூலமாவே அவை தீர்க்கப்படலாம் என்று உணர்த்துபவர்கள். சமகால நிகழ்வுகளை தத்துவார்த்தமாக அணுகாமல், நடைமுறை உண்மைகளின் அடிப்படையில், மாற்றுச்சிந்தனை வழியாக தீர்வை நிகழ்த்திக்காட்டியவர்கள். அந்த தற்சார்பு வழியில் தீர்வுகள் உண்டு என்ற நம்பிக்கையை விதைப்பவர்கள். ராஜேந்திர சிங்காகட்டும், சோனம் வாங்சுக்காகட்டும், அர்விந்த் குப்தாவாகட்டும், அவர்கள் எல்லோரும் சொல்வது, பெரிய பிரச்சினைகளுக்கு எளிய வழிகளில் தீர்வு காண முடியும் என்பது மட்டுமல்ல, ஒரு நீடித்த தீர்வுக்கான வழி என்பது, உடனடித் தீர்வு தருவதாக உறக்கச்சொல்லும் பிரம்மாண்ட பாஸ்ட்புட் திட்டங்களை விட, எளிமையான, தற்சார்பு தீர்வுகளின் வழியேதான் காணமுடியும் என்பதை. புதிதாய் தற்சார்பு பொருளாதாரத்தின் நடைமுறை உண்மைகளைப்பற்றி அறிந்துகொள்ள முயலும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு நல்ல கையேடு. அதோடு சமகால அரசியல், சாமானியரின் வாழ்வு ஆகியவற்றைப்பற்றிய புரிதலையும் இது எடுத்து வைக்கிறது.
இதை எழுத, தீவிர உழைப்பும், அளப்பரிய ஆராய்ச்சியும் தேவைப்பட்டிருக்க வேண்டும். அதனால் இதில் கூறப்படும் நிகழ்வுகளுக்கான சான்றுகளையும், குறிப்புகளையும் இணைத்திருந்தால் ஒரு புத்தகம் என்பதைக்கடந்து, ஒரு ஆவணம் என்ற நிலையை எட்டியிருக்கும் என்பது சிறு குறையே. மற்றும் இதில் வரிசைப்படுத்தியிருக்கும் சிலர் தவிர மற்றவர்களுக்கு காந்தியத்தின் பாதிப்பு எப்படி அவர்களின் பார்வையை தீர்மானித்தது என்பது தெளிவாக காட்டப்படாதது மற்றும் ஒரு குறையே.
ஆனால், இந்தப்புத்தகம் அளிக்கும் பறந்த அனுபவப்பாடத்தையும், கேள்விகளையும், சிந்தனைகளையும் பார்க்கும்போது, இந்தச் சிறு குறைகள் ஒரு பொருட்டே அல்ல....
அதையெல்லாம் கடந்து இன்றைய உலகமயமாக்கல் மற்றும் தீவிர வலதுசாரி பார்வைகள் செல்வாக்குடன் வலம் வரும் நேரத்தில் , படிக்கும் இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் மாற்றுப் பார்வையை, தற்சார்பு வழி தீர்வுகளை, அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் வகையில், இது ஒரு வெற்றிகரமான படைப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.
இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி - கட்டுரை தொகுப்பு - பதிப்பகம் ,தன்னறம் நூல்வெளி- முதல் பதிப்பு 2019, பக்கங்கள் - 190
இன்றைய காந்திகள் - காந்திய வழியில் பயணித்து சாதித்த மனிதர்களின் கதை
புத்தகம் பற்றி :
மொத்தம் 190 பக்கங்களும் 11 தலைப்புகளும் கொண்ட இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும் மனிதர்கள் அனைவரும் காந்திய வழியில் தற்சார்பு பொருளாதாரம் , கல்வி , சுற்றுசூழல் , அரசு நிர்வாக அமைப்பு என எல்லா சூழல்களிலும் தங்கள் பங்களிப்பை செலுத்திய மனிதர்கள். அமுல் நிறுவனத்தின் நிறுவனர் வர்க்கீஸ் குரியன் , பொருளதார நிபுணர் லட்சுமி சந்த ஜெயின் , வெறும் பாத கல்லுரியை ஆரம்பித்த பங்கர் ராய் , தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக போராடி அதை கொண்டு வந்த அருணா ராய் , இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், ஆரோகிய சேவா சங்கத்தை தொடங்கிய அபய் மற்றும் ராணி பங், லடாக் பகுதியில் வசிக்கும் தொழில் நுட்ப ஆசிரியர் சோனம் வாங்ச்சு , ஏழைகளுக்குக்கான இலவச மருத்துவ கண் சிகிச்சை தொடங்கிய அரவிந்த் கண் மருத்துவ குழுமம் , மேலும் இலா பட் , அரவிந்த் குப்தா போன்ற ஆளுமைகள் பற்றியும் அவர்கள் செய்த சிறப்பான செயல்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர். மிகவும் பயனுள்ள புத்தகம் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தகவல்கள் இருக்கிறது . கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவம் இந்த புத்தகம் படித்த பிறகு கிடைக்கும் .கண்டிப்பாக அனைவரும் படிக்கச் வேண்டிய புத்தகம் இது .