தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் இவை. தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்புக்கொடுத்து, அயராது பணியாற்றி, அத்துறைகளை வளப்படுத்திய ஆளுமையாளர்கள் இவர்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு, உத்வேகம், உழைப்பு ஆகியவற்றின் அருமையை நாம் உணர்ந்து போற்ற வேண்டும்; சுவீகரிக்க வேண்டும். பொதுவாக, எந்தவொரு வகையான வரலாற்றுப் பதிவிலும் நாம் சீரிய முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இது குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறோம்.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.