மனைவியின் மேல் கொண்ட அதீத பொசசிவ்னஸ் காரணமாக அவன் வாழ்க்கையையும் கெடுத்து கொண்டு தன்னை உயிராய் நேசித்தவளின் வாழ்க்கையிலும் பிரச்சனையாக மாறியவனை பற்றிய கதை இது.
நிகழ்வுகளால் மனதில் தோன்றியிருக்கும் பள்ளத்தைச் சரிசெய்யாமல் மேலோட்டமாக உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் விரித்துச் சமன்பட்டது போலக் காட்டுவது அடுத்தவர்களையும் சேர்த்து துன்புறுத்தும் என்பது தெரியாமலே போகிறது.
தான் கடந்து வந்த பெண்களைப் பார்த்து ஒருவித ஏளனத்தையே அப்பாலினத்தின் மேல் சுட்டும் ஹரிசரண் மனைவியையும் விட்டுவைக்கவில்லை. அதை அதீத காதல், முன்னுரிமை என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி மனதை துவள செய்யும் குடும்ப வன்முறையைத் தான் கட்டவிழ்கிறான்.
எங்குத் தவறு நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள்ளே கமலியின் வாழ்வு சூறாவளிக்குள் சிக்கிப்போகிறது. சுயநல மனிதர்கள் சூழ இருப்பவள் அதற்குப் பலியாகத் தன் உதிர உருவத்தை இழந்த பிறகு தன்னைப் பிணைத்திருக்கும் கட்டுக்களில் இருந்துவிடுபட்டாலும் உள்ளுக்குள் பூத்திருக்கும் காதல் சிலவற்றை மன்னிக்கச் சொல்கிறது.
கதை தொடங்கிய சில பக்கத்திலேயே முடிவு எதை நோக்கி என்பது தெளிவாகிவிடுகிறது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலக் காட்சிகள் ஒருசேர பயணத்தைத் தொடங்கி சரண் என்ற பெயரை வைத்துக் கண்ணாம்மூச்சி விளையாடுகிறது.
எவ்வித உணர்வுபூர்வ அழுத்தங்களும் இல்லாமல் இருப்பதால் முன்முடிவுகளுடன் படிக்க வேண்டிய கதை தான்.