"திராவிட மாயை ஒரு பார்வை - மூன்றாம் பகுதி" - சுப்பு
இருபது ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி, 2019ல் முதற்பதிப்பாக வெளிவந்த புத்தகம் இது.
எம்ஜிஆர், திராவிட கொள்கைகளை கொண்ட தலைவராக அறியப்பட்டாலும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்துவந்துள்ளார் என்பதை, பல்வேறு மேற்கோள்களோடு இப்புத்தகத்தில் எடுத்து காட்டியுள்ளார் இந்நூலாசிரியர்.
இந்த மூன்றாம் பகுதி, 'விஜயபாரதம்' எனும் வார இதழில் 2016-2017 வாக்கில்,
1967 முதல் 1981 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மூலமாக கொண்டு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, இப்புத்தகம்.
இதில் மொத்தம் 26 தலைப்புகளில் கட்டுரைகளாக திரு எம்ஜிஆர் அவர்களின் அரசியல் அறிமுகம், எம்.ஆர்.ராதா அவர்களால் எம்ஜிஆர் சுடப்பட்டது,
திமுக 1967ல் வென்ற காரணம், அவரின் வள்ளல் குணம்,
கோவில்களுக்கும் ஆன்மீக பெரியவர்களுக்கும் அவரளித்த ஆதரவு, பெரியாரின் வசைக்கு ஆளானது, திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக எனும் கட்சி தொடங்கி வெற்றிகொண்டது, சட்டமன்ற நிகழ்வுகள் என பல்வேறு தகவல்களை பிற புத்தகங்களிலிருந்து மேற்கோள்காட்டி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
இப்புத்தகம் 102 பக்கங்களை மட்டுமே கொண்டதாக இருந்தாலும் கிட்டத்தட்ட திரு எம்ஜிஆர் எனும் சரித்திர நாயகன் பற்றிய பெரு வரலாற்றின் சிறு ஆவணமாகவே இந்நூலை பார்க்கலாம்.
வலது சாரி சிந்தனைகளோடு எழுதப்பட்ட புத்தகம் என ஒதுக்கிவிடாமல், நடுநிலையோடு வாசித்தால் சில உண்மைகள் விளங்கும், பல வரலாறுகள் திரும்ப திரும்ப நடைபெறுவது புரியும் .
புத்தகத்திலிருந்து ...
/திராவிடர் கழகம் போல இன நலனுக்காக மட்டும் போராடாமல், பூலோக அடிப்படையில் திராவிடம் முழுமைக்கும் நன்மைகள் உண்டாக முன்னேற்றம் காண நாம் பாடுபட வேண்டியிருப்பதால் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று நம் கட்சிக்குப் பெயர் இருப்பதே எல்லாவகையிலும் பொருத்தம் என்பது என் தாழ்மையான எண்ணம்" என்றார் அண்ணாதுரை.
/
/"மதம் என்று சொல்கின்ற நேரத்தில் மக்களுக்கு ஒரு ஒழுக்க முறையை, ஒரு குறிக்கோளை, ஒரு லட்சியத்தை, ஒரு வாழ்வுமுறையை அது அமைத்துத் தருவதென்றால் நான் முழுக்க முழுக்க மதவாதி.
மதம் என்பது மக்களைச் சாதிகளாகவும் குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிளவுபடுத்தி ஒருவருக்கொருவர் பார்க்கக் கூடாது, தீண்டுவது கூடாது, ஒருவருக்கொருவர் கலந்து உரையாடக்கூடாது என்பதுதான் மதம் என்றால் என்னைவிட மதத்திற்கு விரோதியாக யாரும் இருக்க முடியாது.
இந்த இரண்டிலே எம் மதம் இவர்கள் மதம் என்பதைப் பொறுத்து, நான் இவர்கள் நண்பனா, பகைவனா என்பது அதிலே அடங்கியிருக்கிறது." என்றார் பேரறிஞர் அண்ணா .
/
/அறிஞர் அண்ணாவின் கடவுள் கொள்கையை மீண்டும் பகிரங்கமாக அமுல்படுத்த தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், அண்ணா திமுக என்று புதிதாக கட்சி துவக்கியவுடனேயே, கடவுள் கொள்கையைத் தெள்ளத்தெளிவாகப் பிரகடனப்படுத்தினார். சைவர்கள் சிவன் கோயிலுக்கும் வைணவர்கள் பெருமாள் கோயிலுக்கும் கிறிஸ்தவர்கள் மாதா கோயிலுக்கும் முஸ்லிம்கள் மசூதிகளுக்கும் செல்வதுபோல் தனது கட்சியில் உள்ளவர்கள் அவரவர்கள் வழிபடும் கோயில்களுக்குப் போகலாம். தடையேதும் இல்லை. மதவழிபாடு தனிப்பட்ட நபர்களின் சுதந்திரம். அதில் நானோ எனது கட்சியோ தலையிடாது என எம்ஜிஆர் அறிக்கை வெளியிட்டார்.
/
/தி.மு.க.வின் ஊழலைப் பற்றி பகிரங்கமாகப் பேசினார் எம்.ஜி.ஆர். என்பதையும் அதற்காகக் கட்சியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
அந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் கருத்துருவாக்கமே எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிளக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள் அந்த அக்டோபர் மாதத்தை "அக்டோபர் புரட்சி" என்று கொண்டாடினார்கள். கருணாநிதி கட்சியில் இருந்தவர்களுக்கோ அது 'கருப்பு அக்டோபர்' ஆக காட்சியளித்தது.
/
/"பதினைந்து லட்சம் உறுப்பினர்களையும் 18 ஆயிரம் கிளைகளையும் கொண்ட கழகம்(திமுக) இது. என்னுடைய 28 ஆண்டுகால நண்பரான அவரையோ அல்லது என்னையோ காப்பதை விடக் கழகத்தைக் காப்பதே முக்கியம். கழகத்தில் ஊழல் என்று பொது இடத்தில் பேசியதற்காக அவரை விலக்கி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் கருணாநிதி.
/
/எம்.ஜி.ஆரின் அரசியல் முயற்சிக்குத் தமிழக மக்களிடம் கிடைத்த வரவேற்பு பற்றி அவருடைய பாதுகாவலர் கே.பி.ராமகிருஷ்ணன் 'மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.' என எழுதிய புத்தகத்தில், 'எம்.ஜி.ஆரை தி.மு.கவிலிருந்து நீக்கிய பின்பு தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மக்கள் கொதிப்படைந்த சமயம் அது. அந்த நேரத்தில் மக்களைச் சந்தித்து நியாயத்தை எடுத்துக் கூறவும் மக்களின் மனநிலையையும் கருத்தையும் அறியவும் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் எம்.ஜி.ஆர். அவருடன் நாங்களும் மிகுந்த கவனத்துடன் எங்களது பணியில் ஈடுபட்டிருந்தோம். அனகாபுத்தூர் ராமலிங்கம், ஆலந்தூர் மோகனரங்கன், செங்கல்பட்டு எஸ்.எம்.துரைராஜ், எம்.கே. காதர், கே.ஏ.கிருஷ்ணசாமி போன்ற ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆருடன் புறப்பட்டோம்.
முதலில் ஆலந்தூரில் புறப்பட்ட சுற்றுப்பயணம் தொடர்ந்து பல்லாவரம், தாம்பரம், காஞ்சிபுரம், ஆரணி, அரக்கோணம் என்று ஏராளமான இடங்களுக்குத் தொடர்ந்தது.சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு
கொந்தளிப்புடன் காணப்பட்டனர். சொல்லப்போனால், இரவில் கூட சிறிதும் தூக்கமின்றி விடிய விடிய மக்களைச் சந்தித்தார். மக்களின் பாச வலையில் நெகிழ்ந்து போனார் எம்.ஜி.ஆர். எங்கு நோக்கினும் வாழ்த்துக் கோஷம் விண்ணைப் பிளந்தது. ஒவ்வொரு பகுதியிலும் லட்சக் கணக்கான மக்கள் மத்தியில், அவ்வாறு காஞ்சிபுரத்தில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோது கூட்டத்தில் பேச இரவு 7 மணிக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. என்ற போதிலும், மக்களின் அன்பு மழையில் நனைந்த எம்.ஜி.ஆர். நள்ளிரவு 1 மணிக்குத் தான் செல்ல முடிந்தது.
/
/இராமாபுர தோட்டம் வீட்டின் நிலவறையில் கம்பர், வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம் இருந்தது. ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தித் திருமகனும், மகாபாரதத்தில் இரண்டு விதமான பதிப்புகள், மேற்கத்திய இலக்கிய மொழிபெயர்ப்புகள், திருக்குறள், மூ.வ. அவர்களது எழுத்தோவியங்கள் எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்களது சிந்தனைச் செல்வங்கள், தமிழ் அகராதி இப்படி 1,500 புத்தகங்கள் இருந்தன. செம்மல் படிப்பார். சில சமயம் கண்மூடி சிந்தனை செய்வார். அது தியானமா, மௌன விரதமா தெரியாது. அங்கிருந்த செம்மலின் அன்னையின் படத்தின் பின்னால், ஒரு சிறு பழைய புத்தகம் இருந்தது. குருவாயூரப்பன் சுலோகம், 'என் அன்னை அதை தினமும் பாராயணம் செய்துவந்தார். அதுதான் என் பெரும் சொத்து' என்றார் செம்மல்.
/
/தாயிடத்தில் அன்பு, தந்தையிடத்திலே மரியாதை, சொனிடத்தில் பயபக்தி, நண்பனிடத்தில் பாசம்,
ஏழைகளிடத்தில் இரக்கம் என்ற இந்த பண்புகள் தான் தெய்வபக்தி. மனதில் தூய்மை ஏற்பட்டால் அதுதான் பக்தி. அந்தத் தூய்மையை ஏற்படுத்துவதற்கு நான் அந்தக் கடவுள் வேஷம் போட்டுத்தான் நடிக்க வேண்டுமா என்ன?" என்றார் எம்.ஜி.ஆர்
/
/திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துவக்கவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர், "எங்களுக்குத் தலைவர் அண்ணா. அண்ணாவுக்குத் தலைவர் பெரியார். எந்த வழியைப் பின்பற்றுகிறீர்கள் என்று யாராவது கேட்டால் அண்ணா வழிதான் நாங்கள் /பின்பற்றுவது" என்றார்.