நவீன தமிழ் கவிதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத முதல் ஐந்து இடத்தில் இருக்கிறவர் கவிஞர் கலாப்ரியா. ஐம்பது ஆண்டுகளாக கவிதையில் இயங்கி வருகிற இவரின் சிறந்த சமீபத்திய கவிதைத் தொகுப்பு இது. இறுக்கமும் செறிவும் நிறைந்த இந்தக் கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பில் புதிய அலைகளை உண்டுபண்ணுகிறவை. புதிதாகக் கவிதை எழுத வருகிறவர்களுக்கு இவை தருகிற உத்வேகம் ஆச்சரியமானதாயிருக்கும்.
கலாப்ரியா (பிறப்பு: ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுதத்துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
பொதுவாக கவிதைகள் அதிகமாக நான் வாசிப்பது கிடையாது, நான் வாசித்த ஒரு முக்கியமான கவிதை தொகுப்பு என்றால் அது பிரமிளின் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைகள் தொகுப்புதான். அதன் பின்பு தான் இந்த கவிதையை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி எடுத்து வாசித்தேன். வாசித்த ஒவ்வொரு கவிதையின் முடிவில் கவிதை உருவாக்கிய படிமம் மனதில் பல வகையான உணர்வுகளை தட்டி எழுப்பியது - நான் கூறுவது ஒவ்வொரு கவிதைக்கும். இந்நூலில் சுமார் 160 கவிதைகளுக்கு மேல் இருக்கலாம். எல்லா கவிதைகளும் நம்முடைய வாழ்வில் என்றோ நாம் அனுபவித்த ஒரு வாழ்வின் அங்கத்தை பிரித்து எடுத்து கவிதையின் வடிவத்தில் படைத்திருக்கிறார். நம்முடைய பாலிய காலம் நிகழ்வுகள் விலங்குகள் பறவைகள் இயற்கையின் அழகுகள் மழை வீடு என நம்மை சுற்றி இருக்கின்ற பின்பத்தை இவரின் கவிதையின் ஊடாக அனுபவிக்கும் போது அது மனதில் உருவாக்கி படிமமும் அதற்கான உணர்வுகளும் மனதில் தத்தூம்பிக் கொண்டே இருக்கும். பெரும்பான்மையான கவிதைகள் எல்லாம் பத்து வரிகளுக்கு உள்ளாகவே தான் இருந்தது. தினம் ஒரு பத்து கவிதை என ஒரு மாதம் முழுவதும் வாசித்தேன். இதுவே நான் வாசிக்கும் இவருடைய முதல் படைப்பு. இவரின் மற்ற படைப்புகளையும் மேலும் வாசிக்க வேண்டும் என மனம் எத்தனிக்கிறது.
வாசிக்கும்போது தோன்றிய உணர்வுகளையும் அவ்வப்போது அக்கவிதையின் அருகில் எழுதியிருந்தேன். அதை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.
#176 Book 17 of 2023-சொந்த ஊர் மழை Author- கலாப்ரியா
“எந்த ஊரை மழை நனைத்தாலும் சொந்த ஊர் பற்றிய செய்திலேயே அதிகமும் நனைகிறது இதயம்.”
2022-இல் social media-வில் நான் அதிகம் ரசித்த கவிஞர்களுள் கலாப்ரியாவும் ஒருவர்.நெல்லைக்காரர்களின் கவிதை என்றாலே தனி அழகு வந்து விடுகிறது தமிழுக்கு. வண்ணதாசன் இவரைப் பற்றி கூறியதை கேட்டப்பின் இவர் புத்தகங்களை படித்தே ஆக வேண்டும் எனத் தோன்றி நான் படித்த புத்தகம் தான் இது.
காதல் ஒருவனை என்ன செய்யும்?அவனை கவிதைகள் கிறுக்க வைக்கும் என்பதை போல கவிதை ஒருவனை என்ன செய்யும்? என்ற கேள்விக்கு ஒரு வரியில் பதில் கூறவே இயலாது.எதைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை எழுதலாம்,எழுதவும் முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால்,எல்லாரும் ரசிக்கும் வகையில்,எல்லாரும் புரிந்துக் கொள்ளும் வகையில் கவிதை எழுதுவது ஒரு கலை.அப்படியாகவே அமைந்திருக்கிறது இந்த புத்தகமும்.
“சுழல்வது யார் காலம்” என்ற தலைப்பில் வரும் கவிதை நம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு தள்ளுகிறது.சில கவிதை “தென்றல்” போல நம்மை வருடி செல்கிறது.சில கவிதைகள் பல பழைய நினைவுகளை இழுத்துக் கொண்டு வருகிறது.எல்லாமே அளவாய் அழகாய் இருக்கிறது இதில்.
சொந்த ஊர் மழை-குடையை மறக்கச் செய்து ரசிக்க தூண்டும் மழை இது!
கவிதை என்பது என்ன? அது என்ன மாதிரியான மாற்றங்களை மனதில் ஏற்படுத்துகிறது? எந்த கணங்களில் அது நம் மனதை கலக்கிறது? இப்படிப்பட்ட கேள்விகளை எனக்குள்ளே நான் பல நேரம் கேட்டுக் கொள்வதுண்டு. சிறு வயதில் இருந்தே பாரதியும், வள்ளுவனும், பாரதிதாசனும் என் வாழ்வின் கடினமான நேரங்களில் துணை வந்த போதும், கவிதை என்னும் வஸ்து, பலவித மாற்றங்களை தன்னுள் கொண்டு மாறி வரும்போது, மாறிவரும் அதன் இருப்பும், அதன் வடிவமும், அதன் கருவும் இந்தக் கேள்விகளை எனக்குள் மறுபடியும் மறுபடியும் சுழன்று வரச் செய்து கொண்டே இருந்தது . என் தேடல் என்னை கல்யாண்ஜி (வண்ணதாசன்) கவிதைகளிடம் நிறுத்தியபோது, அந்த வரிகளில் ஏதோ ஒன்று உள்ளே உடைந்து உருகியது உணர முடிந்தததும், அதற்காகவே அவர் எழுத்தை திரும்ப திரும்ப நாடியதும் நடந்தது. இருந்த போதும் என் கேள்விக்கு பதில் தெளிவாக கிடைக்கவில்லை… என் வாசிப்பின் எல்லை, புகைப்படக்காரனாய் என்னை நிறுத்தியபோதும், அதன் தாக்கம் எனக்குப் புரிபடாத ஒரு மாயமாகவே இருந்தது. என் புகைப்படங்கள், தி.ஜா., அ.முத்துலிங்கம், எஸ்.ரா என்று கதைசொல்லிகளின் பார்வைகளின் வழியே விரிந்த போதும், கவிதைகளின் தாக்கம் உணரப்படாமலே இருந்தது. அது என்னவோ தெரியவில்லை, நெல்லை என்ற பெட்டகம் அளித்த இன்னொரு கற்கண்டு, இப்போது தான் சுவைக்கக் கிடைத்தது. கலாப்பிரியாவின் எழுத்துக்களை படித்திராத எனக்கு, இந்தப் புத்தகம், கவிதைகளின் நோக்கத்தை எனக்குள் வார்த்தெடுத்தது. இந்த தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும், எனக்கு ஒரு சக புகைப்படக்காரனின், படத்தைப் பார்க்கும் பரவசத்தை அளித்தன; அப்படி அளித்து படிமம் என்பது கவிதையின் உள்ளுயிர் என்பதை உணர வைத்தன. “எந்த ஊரை மழை நனைத்தாலும் சொந்த ஊர் மழை பற்றிய செய்தியிலேயே அதிகம் நனைகிறது இதயம்” என்ற வரிகளில் நடக்கும் நிகழ்வின் பௌதீகம் மேலும் வரும் கவிதைகளின் வருகையால் தெளிவுறுகிறது.
“நீண்ட நடைப்பயணம் தந்தை தோளில் இருந்து குழந்தையைத் தாய் மறுபடி வாங்கிக் கொள்கிறாள் மிகமிக மகிழ்ச்சியோடு தாவுகிறது தாயிடம் இந்தப் படிமத்தை நீங்கள் உள் வாங்கிக் கொள்வதைப் போலவேதான்” என்ற வரிகள் விளக்குவது போல் , அந்தப் பௌதீகத்தை இதைவிடத் தெளிவாக விளக்க முடியாது…
அதற்குப்பின்,எனக்குள் இருக்கும் புகைப்படக்காரன், ஒவ்வொரு வரிகளிலும் அந்தக் கூத்தாடுகிறான். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை கலாப்பிரியா , அவர் முகநூல் பக்கத்தில் பதிந்த குறுங்கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது… இந்தத் தொகுப்பில் இருப்பதெல்லாம் முத்தா என்றால், எனக்கு உடன்பாடில்லை தான். “நாத்து என்பது சேத்து மொழி” என்பது போன்ற சில கூழாங்கற்கள் இடறத்தான் செய்கிறது… அதனாலென்ன, காலின் ஆழத்தில் சென்று அள்ளும் போது பல முத்துக்கள் மட்டும் அல்ல, சிறு கற்களும் தானே கைகளில் சிக்கும்…
நெல்லையின் சுவைகளில், கலாப்பிரியாவின் எழுத்துச் சுவை ஒரு வகை… நெல்லைக்காரரான அவர், வார்த்தைகளில் எழுப்பும் உணர்வுகளில் படிப்பவரை அமிழ்ந்து போக வைப்பவர், சக நெல்லைக்காரரான வண்ணதாசனைப்போல்....