உலக மொழிகளின் இலக்கிய வளங்களை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்குமான ஒரே வழிமுறை மொழிபெயர்ப்பு. உலக இலக்கியத்தின் செழுமையான பாதைகளில் பயணம் செய்வதென்பது நம் காலத்தோடு நாம் கொள்ளும் உறவன்றி வேறில்லை. இப்பயணத்துக்கு மொழிபெயர்ப்புகள் மட்டுமே உதவ முடியும். ஒரு மொழியின் சமகாலத் தன்மைக்கும் வளத்துக்கும் மொழிபெயர்ப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழில் வெளிவந்திருக்கும் புனைகதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கணக்கில் கொண்டால் இப்பணியில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வலுவான மொழிபெயர்ப்பு இயக்கம் தமிழில் உருவாக வேண்டிய நெருக்கடியில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.