இமயமலைப் பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்த போது மிரண்டு விட்டேன். Charles Bukowski-யின் கதைகளுக்கு நிகரான கதைகள் இவை. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகரைத் துன்புறுத்தாமல் கதை சொல்லத் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது. நான் வாசகர்களைச் சொல்லவில்லை. எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இந்த நிலையில் அராத்து எழுதிய இந்தச் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய இளைய சமுதாயத்தினர் இன்று அனுபவிக்கும் angst இந்தச் சிறுகதைகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அராத்துவுக்கு angst என்றால் என்ன என்று தெரியாது. தெரிய வேண்டியதில்லை. -சாரு நிவேதிதா
வாங்கிய இடம்: ஸீரோ டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கிய நாள்: 10-ஜனவரி-2024 எழுதியவர்: அராத்து நூல் வாசிப்பனுபவம்: புஸ்ஸி புத்தகத்தை வாங்கியவுடன் "நிம்பேல் ஆட்டோகிராஃப் கிடைக்குமா?" என்று ஸிரோ டிகிரீ அரங்கில் அமர்ந்த எழுத்தாளர் அராத்துவை நான் கேட்டபோது : "கிடைக்குமே " என்று உற்சாகமாக எழுந்தார். என்னைப்பற்றி விசாரித்துவிட்டு , "இதுக்கு முன்னாடி என்னோட புக்ஸ் வாசிச்சிருக்கீங்களா? " என்று கேட்டதற்கு "இல்லை, இதுதான் முதல் புக் " என்றவுடன் "எடுத்தவுடனே ஷாக்குக்கு போறீங்களே!" என்றார். உங்க ஃபேஸ்புக் போஸ்ட் எல்லாம் வாசிச்சிருக்கேன் என்றேன். அது வேற, கதை எழுதும் போது வேற மாதிரி எழுதுவேன் என்று சொல்லிவிட்டு அக்கறையோடு "நான் முதல்ல எழுதுன நள்ளிரவின் நடனங்கள் வாசிங்க ", அப்பறம் புஸ்ஸி வாசிங்க என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது நூலகத்த்தில் இந்த புத்தகம் வந்து சேர்ந்தது. இச்சிறுகதைத் தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள் இளம் தலைமுறை ஆண் பெண் உறவுகள் பற்றிய கதைகள். ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஒரு விதமான விகாரமான இன்பத்தை கடப்பாளரின் காட்சிகளின் ஊடாக செலுத்துவது போல் இருந்தது. ஒவ்வொரு கதையிலும் கதை சொல்லும் வடிவம் வேறுபடுகிறது. கதை சொல்லும் பொழுது இது புனைக் கதைதான் என்பதை உடைத்து விடுகிறார். (திரைப்படங்களில் நான்காம் சுவரை உடைப்பது போன்ற உத்தி ) கதை தொடங்கியவுடன் சற்று அந்நியமாக தோன்றினாலும் சிறிது நேரங்களில் நம்மை தொடர்புபடுத்திக்கொள்ளும் அளவுக்கு பாத்திர படைப்பும் இருப்பது மேலும் ஒரு தனி சிறப்பு. முதல் கதையான நள்ளிரவின் நடனங்கள் நம்மை சற்று அலைக்கழிக்கச் செய்து முடிவில் கதாநாயகனுக்கு சுகமான முடிவாகவும், நமக்கு சற்று ஏமாற்றத்தை தருவது போன்ற ஒரு உணர்வைத் தரும். ஆனால் சற்று நடந்ததை பின்னோக்கி பார்த்தால் இந்த முடிவின் உன்னதம் புரியும். ஆனால் நான் கணவன் மனைவியின் உன்னதத்தைச் சொல்கிறேன் பார் என்ற உணர்வு எங்கேயும் வராதவாறு பார்த்துக்கொண்டதே இடையூறு இல்லாத அதிநுட்பத்தின் வெளிப்பாடாக அராத்துவின் எழுத்தை உணர்கிறேன். சிக்னல் சிறுகதை ஏனோ இந்த தொகுப்புக்கு ஒவ்வாத கதையாக தோன்றியது. அட்டக்கத்தி கதாநாயகனை நினைவுபடுத்திய வெடுக் ராஜா ரசிக்கும் படியாக புனையப்பட்ட கதை. என் தனிப்பட்ட விருப்பத் தேர்வில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை இந்த தொகுப்பின் மூன்றாவது கதையான காதலினால் காதல் செய்வீர் . பெயரளவில் வித்தியாசம் என்றில்லாமல் இதுவரை நான் வாசித்த கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் கதை. காதலில் வயப்படுவது ஒரு அழகியலுக்காகவோ, துணையை கண்டெடுப்படுத்தற்காகவோ இல்லாமல் ஒரு சுகமான அனுபவத்திற்காக இருக்கலாம் என்றும் அந்த சுகமான அனுபவங்கள் ஒரு நல்ல கடந்த கால நினைவாக மனதின் எங்கோ ஒரு நினைவு கூட்டில் இருக்கலாமே என்ற உணர்வைத் தந்தது இந்த கதை. ஒருபோதும் காதலிக்காமல் இருப்பதை விட காதலித்து இழப்பதே சிறந்தது என்று ஒரு ஆங்கில கவியின் கவிதையின் அடிநாதம்தான் இந்த கதையின் மையம். அந்த கூற்றுக்கு காரணம், ஒருவர் உணர்ந்து கொள்ளாத ஆசைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு இது அழைத்துச் செல்லும். கைகூடாத காதலின் வருத்தத்தை கையாள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு முக்கியமான நோக்கத்திற்கும் உதவுகிறது. எதிர்கால உறவுகளை கையாளும் விதத்தை இது வடிவமைக்கிறது. உறவின் முடிவை தன்னோடு இணைக்க விரும்பாத அல்லது அதன் விளைவுகளைப் பற்றிய உறுதிப்பாடின்மையைப் பற்றி கவலைப்படாத மனநிலை கொண்ட பெண் பாதுகாப்பு மண்டலத்தில் இருக்க முனையும் ஒரு சக ஆண் நண்பரிடமிருந்து ஒரு காதலுக்கான சில முன்னிகர்வுகளை ஏக்கம் கொள்வது மிகுந்த அழகுணர்ச்சியோடு வெளிப்பட்டது. உள்முக சிந்தனையாளர்கள் பொதுவெளியிலும் தனிமையிலும் அவர்களை வெளிப்படுத்திக்கொள்ளும் போதும் உள்ள ஆழமான அவதானிப்புகளை நேரில் பார்த்த தேர்ந்த ஆய்வாளர் போல் இமயா கதையை எழுதியிருக்கிறார். கதை ஒரு புள்ளியில் தொடங்கி அடுத்த நகர்வுக்கான சரடுகளை தன்னுள் அடுக்குகளாக மெல்ல மெல்ல அவிழ்த்து ஒரு அழகிய உறவின் ஏக்கத்தை நாம் தரிசனம் கொள்ளச் செய்திருக்கிறார். மிக அருமையான கதை. நீண்ட கதையான ப்லே கேர்ள் ப்லே பாய் மேற்தட்டு நவநாகரீக மரபுகளைச் சார்ந்தது என்ற ஒரு அனுமானம் எனக்கு உண்டு. இந்த கதை குறும்படமாக உருமாறத்தக்க எல்லா குணங்களையும் தன்னுள் கொண்டது. உடமைப்பொருளாக தன இணையரை கருதும் ஆண் மற்றும் வெளிப்படைத்தன்மை நிறைந்த உறவில் இருக்க வேண்டும் என்பதில் திண்ணமாக இருக்கும் பரந்த மனப்பாண்மை மிக்க பெண்ணும் ஒரு ஒப்பந்த உறவுக்குள் வரும்போது இருதுருவங்களாக இருப்பதன் சிக்கல்களை அழகியலோடு பேசும் கதை. இருவரின் முதல் சந்திப்பு, அவர்களின் உல்லாச பயணம் ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. பரந்த மனப்பான்மை கதை எழுதுவதற்கே ஒரு நெஞ்சுரம் வேண்டும். எதிர்பாலினத்தினரிடம் வரும் ஆண்களின் கருணையின் ஊற்று எங்கிருந்து பொங்குகிறது என்ற சாராம்சத்தை நான் வெகுவாக ரசித்தேன். ஆண்டான் அடிமை மனப்பான்மையும் சபலமும் நிறைந்த இந்த கதையின் கவனம் கோரும் நாயகன் தன் பிம்பத்தை கட்டமைக்க கூறும் வார்த்தை பரந்த மனப்பான்மை என்று புலப்படாத உள்ளகத்தை திறம்பட நமக்கு சொல்கிறார் அராத்து. பீச் வியூ ரிசார்ட் கதை இன்றைய நவநாகரீக இளைஞர்களின் கண்ணோட்டத்தில் நகர்கின்ற மாநகர வாழ்க்கை. பொருளீட்டலை சுற்றி சுழலும் வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் இவர்கள் நினைத்த அனைத்தையுமே உடனுக்குடன் பணத்தைக் கொண்டு பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தோடு இவர்கள் அனுபவிக்கும் அழுத்தம் நிறைந்த தருணங்கள் அர்ப்பணிப்பு இல்லாமை மற்றும் உறுதியற்ற உறவுமுறையின் வெளிப்பாடுதான் என்றவாறு அவதானித்தேன். டீசண்ட் குட்டி கதையை பற்றிச் சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. ஃபாமிலி கேர்ள் மற்றும் புக்கட் என்ற கதைகளில் இவரின் கதை சொல்லும் உத்தி என்னை கவர்ந்தது. கதை சொல்லும் கட்டமைப்பை புதிய உத்திகளை கொண்டு மீட்டுருவாக்கம் செய்து ஒரு எழுத்தாளர் வடிவமைத்து நமக்கு படைக்கும் போது அதன் ஊடாக அந்த கதையை வாசிக்கும் அனுபவம் ஒரு இனிய அனுபவமாக இருக்கிறது. முக்கியமாக புக்கட் கதையில் யார் யாரைப் பற்றி நினைக்கிறார்கள், யார் இந்த உரையாடலை நிகழ்த்துவது என்ற கேள்விகள் முதலில் எனக்கு எழுந்தது, பின்பு இந்த கதையின் போக்கு புலப்பட்டவுடன் இயல்பு நிலைக்குத் திரும்பி கவனத்திரட்சியோடு வாசிக்கும் போது ஆத்மார்த்தமான வாசிப்பனுபவமாக இருந்தது. ஒரு காட்சி ஒருவரின் கண்ணோட்டத்தின் வழியில் நகர்ந்ததும் மற்றொருவரின் கண்ணோட்டத்தில் இதே காட்சியை நகர்த்துவது என்று கதைசொல்லல் முறையை தொய்வில்லாமால் கடைபிடித்திருக்கிறார். இந்த தொகுப்பின் கடைசிக் கதையின் முதல் பக்கத்தை வாசிக்கும்போதே என் மனைவியிடம் இதை வாசித்து கேட்பிக்க வேண்டும் என்ற அவா தொற்றிக் கொண்டது. காரணம் துள்ளலும் எள்ளலும் நிறைந்த அராத்துவின் முகநூல் பதிவுகளை நான் வாசிக்கும் போது மிகுந்த புன்னகையுடன் கேட்டு மகிழ்வார். அபாயம் என்ற இந்த இறுதிச் சிறுகதை அவ்வண்ணமே. உத்தம வில்லனில் கடைசியாக இயக்குனர் மார்க்கதரிசி தன் சீடனுக்கு ஒரு திரைப்படத்தை இயக்க சம்மதம் தெரிவித்து மனோவிடம் "என்ன மாறி படம் பண்ணலாம் " என்று கேட்பார். அதற்கு "ஒரு நல்ல காமெடி படம் பண்ணலாம், தியேட்டரில் இருந்து வெளிய போகும் போது மக்கள் சிரிச்சிட்டே போகணும்" என்று பதிலளிப்பார். அராத்து அப்படி நினைத்தாரா என்று எனக்கு தெரியாது, ஆனால் இந்த கடைசிக் கதையின் ஒவ்வொரு காட்சியிலும் என் மனைவி விழுந்து விழுந்து சிரித்தார். அவரது சிரிப்பில் நானும் மகிழ்ந்தேன். அப்படி என்ன நகைச்சுவை இருக்க முடியும் என்று ஐயப்பாடு வந்தால் பின்வரும் துணுக்கு உதவும். "பொங்கலும் அதுவுமாக மின்சார கம்பியை பிய்த்து எடுத்து கீழே விழுந்துவிட்டான் என்ற தகவல் வந்தததும் அபாயத்தின் அப்பாவுக்கு ஒர் ஏகார்ந்த உணர்வு பரவியது. வீட்டில் வெளியே இருந்த திண்ணையில் பசித்த சிங்கம் போல அமைதியாக அமர்ந்து இருந்தார். அபாயம் வீட்டுக்குள் நுழைந்ததும் விசாரணை ஏதுமின்றி , நன்கு அனுபவித்து, ரசித்து, அடி வெளுக்க ஆரம்பித்தார்." ஏதோ பொழுதை போக்குவதற்காக இலகுவான எழுத்துக்கள் எழுதியிருப்பது போன்ற ஒரு தோற்ற மயக்கம் இருந்தாலும், எளிமையாகவும் பூடகமாகமில்லாத பூடகத்தோடு ஆழ் மனது எண்ணங்களை சித்திரமாக கதையின் வழி ஒரு இனிமையான தரிசினத்தையே தருகிறது. சில கதாபாத்திரங்கள் உச்ச கணங்களை அடைகின்றன, சில ஒரு ஏக்கத்தோடு நிலைகொள்கின்றன, சில கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளையும் எதிர்ப்பார்புகளையும் தோற்ற மயக்கம் கொண்டு உற்பத்திச் செய்து அதை அடைய முனைகின்றன. எந்த ஒரு வார்ப்புருக்குள்ளும் அடங்க மறுக்கிறது இந்த கதைத்தொகுப்பு. தீவிர இலக்கியத்தை நுகரும் பொருட்டு இவரது புத்தகங்களை ஏனோ இத்தனை நாட்கள் வாங்காமலே இருந்தேன். தற்போது அந்த எண்ணம் இனிதே களையப்பட்டது. அன்புடன் அன்புக்குமரன் எத்தியரசன்
இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் நன்றாக இருந்தன. நள்ளிரவின் நடனங்கள் கதையில் கடைசியில் காலை 3 மணிக்கு "Happy New Year" மெசேஜ் அனுப்பினவுடன் பதில் மெசேஜ் வரும். ஒரு கதையில நாம அடுத்த ஜென்மத்தில காதலிக்கலாமன்னு சொல்ற தருணத்தில அந்த ஜென்மம் தான் இப்ப நடந்திட்டிருக்கு சொல்ற விதம் நல்லாயிருந்தது. பரந்த மனப்பான்மை என்னடா மறுபடியும் ஆரம்பிச்சாச்சு அப்பிடிங்கிற மாதிரி இருக்கு. எல்லா கதைகளையும் படிக்க சுவாரஸ்யமா இருந்தது. அராத்தின் மற்ற புத்தகங்களையும் படிக்க ஆவல் உண்டு பண்ணுது.