எல்லா சம்பவங்களும் கற்பனை - பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை. இதில் சம்பந்தப்பட்ட யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ, குறை சொல்வதற்கோ எழுதப்பட்டதல்ல. தங்களைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைப்பவர்கள்கூட என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக இதைக் கூறுகிறேன். தியாகு என்பவன் இருந்ததும், இறந்ததும் பழங்கதையாகப் போய்விட்டது. அது நினைவிலிருப்பவர்கள் - அந்த அல்பாயுசில் போய்விட்ட முழு மனிதனின் நினைவில், அதில் தங்கள் குறைபாடு என்ன என்று கருதிப்பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்கு கூட பூரணமாகத் தெரிவதில்லை இதில் தவறு ஒன்றுமில்லை.
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
நம் சமூகம் ஒரு மனிதனை எப்போது, எதனால் பைத்தியம் என்று முடிவு செய்கிறது?
மனிதர்கள் எதன் காரணமாக பித்தநிலையை அடைகிறார்கள்? உடற்பிணிகள் தரும் அழுத்தத்தாலா, மனக்கவலைகளின் துரத்தல்களாலா?
க.நா.சு தன் வாழ்வில் சந்தித்த சில 'பித்துமனிதர்'களைக் கதைமாந்தர்களாக்கி, அவர்களின் மனப்பிறழ்வை ஆராய்ந்திருக்கும் நாவலே பித்தப்பூ..
இதுதான் இந்த நாவலின் சாரம் என்று தெரிந்திருந்தால், வீடடங்கு காலத்தில் இந்த நாவலை வாசிக்க எடுத்திருக்க மாட்டேன். ஏற்கனவே பித்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகேறிக்கொண்டுதான் இருக்கிறது.
உங்கள் உலகம் சகஜநிலையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது, இந்தப் புத்தகத்தை முயன்றுபாருங்கள். பிடிக்கலாம் :)
"எனக்கு பைத்தியமா சார் பிடித்திருக்கு?" என தொடங்கும் நாவல் இறுதியில், நம்மையும் அந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது, படித்து முடித்தப்பிறகும் அந்த பித்த நிலை தொடர்கிறது. கண்டிப்பாக மீள் வாசிப்பு செய்ய வேண்டும்.
எவன் ஒருவன் சமூகம் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கையான மாத சம்பளம் வீடு வாசல் குடும்பம் என்று ஒரு வரையறைக்குள்ளே இருக்கிறானோ அவனே அறிவாளியான(சாதாரணமான) மனிதன். அதை விட்டு விலகி அவரவர் ஆசைக்கேற்ப வாழ்பவரை இச்சமுகம் பைத்தியக்காரர் எனினும், அதீத புத்தகம் படிப்பவரை புத்தகப் பைத்தியம் எனினும், அதீத சினிமா பார்ப்பவரை சினிமா பைத்தியம் எனினும் கூட கூறுவார்கள்.
இவர்கள் போல அல்லாது வேறு சில பல பைத்தியங்கள் உண்டு மனப்பிறகுகளுக்கு உள்ளாகிறவர்கள், டிப்ரஷன், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றாலும். ஆனால் இவர்கள் பேசும் பேச்சுக்களும், இவர்கள் பைத்தியம் என்பதற்கும் அர்த்தமே இருக்காது. இவை அனைத்தையுமே உள்ளடக்கி ஒரு நாவலாக எழுதி உள்ளார் க.நா.சு.
நாவலை வாசிக்கும் போது செல்வாவின் 'மயக்கம் என்ன' படம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது அதில் வரும் கதாபாத்திரமான யாமினியை போல இங்கும் தியாகுவிற்கு இருந்திருந்தால் அவன் உயிரோடு வாழ்ந்திருப்பான் என்னவோ.
'Though this be madness, yet there is method in't.' - ஹாம்லெட் நாடகத்தில் போலனியஸ் இப்படி கூறுவான். ஒரு பித்த நிலையில் உச்சபட்ச நிலையை அடைவதற்கும் அல்லது பித்து நிலையினை நோக்கியே வாழ்க்கை நகர்வதற்கும் இந்த வாழ்க்கை ஒரு ஒரு தனிப்பட்ட நபர்க்கும் வாழ்வியல் முறையை ஒதுக்கி விடுகிறது.
க.நா.சுவின் நாவலை வாசிப்பது இதுவே முதல் முறை. இதில் எழுத்து நடை எனக்கு மிகவும் கச்சிதமாக இருந்தது. அதே போல், ஆங்காங்கே 1930-40ஒட்டி நடைபெறும் கதை என்பதால் அப்போது இருந்த படிக்கும் இளைஞர்களின் மனநிலையை சுட்டிக்காட்டி கொண்டே வருவது தியாகு என்ற கதாபாத்திரத்தை புரிந்துகொள்ள உதவியாய் இருந்தது. அக்காலத்தை பற்றி க.நா.சு, "ஆங்கிலேயர்களை மிகவும் நெருக்கமாகப் பின்பற்றும் பழக்கம் வியாபிருந்த காலம் அது" என்று குறிப்பிடுகிறார்.
இதனை இன்னும் விரிவாக உணர தியாகு என்பவன் Stephen Spender என்ற ஆங்கில எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறான். அவருடனான சந்திப்பில், குறுகிய காலகட்டத்தில், இவனின் இலக்கிய திறன், இவனின் ஆழ்மன ஆசைகளை உணர முடியும். பயணம், சந்திப்பு முடிந்ததும் Stephen Spender தன்னுடைய நகரத்திற்கு செல்லும் போது, நான் சந்தித்ததில் மூன்று விஷயங்கள் மறக்க முடியாதது என்று கூறுவார். அதில் ஒன்று, தியாகுவை பற்றி;
'ஏன் அப்படி அவனை மறக்க முடியாதவனாய் நினைத்தார்?' என்று மீண்டும் தூண்டிக் கேட்டேன்.
"அந்தப் பையனின் அடக்க முடியாத பல விஷயங்கள் குழப்பிக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் முன்னேற வேண்டுமென்கிற ஆசை, கலையில், இலக்கியத்தில் சாதனைகள் செய்துகாட்ட வேண்டுமென்ற பேராசை - எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அமைதி நாடும் வேகமே அவன் அமைதியைக் கெடுத்துவிடும் என்று எனக்கு தோன்றுகிறது. எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பையனை என்ன செய்யும் - எங்கே போய் விடும் என்று என்னைத் தூண்டுகிறது. "
இத்தனையும் சேர்ந்து ஒருவனை பைத்தியமாக்காதா? என்று கேட்டேன்.
"பைத்தியமும் ஆக்கலாம். மிக மேன்மையான சாதனையாளனாகவும் ஆக்கலாம். இரண்டும் நிகழக்கூடும்" என்றார் ஸ்பெண்டர்.
இந்த எளிய நடையிலான பேச்சிலே அவன் வாழ்க்கையை, அவனுடைய Thought process நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
தியாகு ஒரு sophisticatedஆன மனிதன், நிறைய Dilemmasகளால் பல தொல்லைகள் அனுபவித்திருக்கிறான். அவனுடைய பேச்சு வழக்கே படிக்கட்டு போல அடுக்கப்பட்டதாக தானிருக்கும். நேரே, மறைவின்றி, நினைத்தவற்றை கூறிவிடுபவன்; அனேகமாக அவன் வாழ்க்கையில் அவன் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை பையத்தியமாக தானிருக்கும். இதன் காரணம், க.நா.சு தான் இந்த கதையை first-person omniscient narratorஆக தானே விவரித்து கூறுகிறார். இதை வைத்து ஒரு சோதனை செய்து பார்த்திருக்கிறார். இந்தக் கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், பின்புலத்தையும் Interconnect பன்னி கொண்டு வருகிறார். இறுதியில் க.நா.சுவே நாவலை முடிக்கும் கதாபாத்திரமாக தானே ஒரு விஷயத்தை பேசி முடித்து வைக்கிறார்.
இந்த விஷயம் ஈரானிய இயக்குனர் Abbas Kiarostamiவின் Taste of Cherry என்ற படத்தை நினைவூட்டியது. இப்படத்தில் Ending sequenceக்கு முன்னர் வரை, ஒரு படமாக காட்சிப்படுத்தப்பட்டு நாமும் படத்தினை பார்த்து கொண்டு வருவோம். இறுதியில், முக்கியமான தருணத்தில், படப்பிடிப்பு தளத்தில், படம்பிடிக்கும் Footage அப்படியே காண்பித்து விடுவார்கள். அதற்கு முன் வரை, இந்த படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் முடிவிற்காக நாம் காத்துக்கொண்டிருப்போம். ஆனால், முடிவை எதிர்பார்த்த நமக்கு என்ன இது? என்று தோன்றும்.
இந்நாவலின் கடைசியும் இப்படி, 'அப்புறம் எப்பவாவது நினைவிற்கு வருகிறது அவ்வளவு தானே!' தான் என முடிவது ஏனோ எனக்கு அப்படத்தினை நினைவூட்டியது.
தியாகுவின் குடும்ப பின்புலம் பற்றிய அறிய முடிகிறது. அவனுடைய படைப்பாற்றல் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதப்பட்டிருக்கலாம். தியாகுவின் ஓவியங்கள் பற்றி அறிவதற்காகவே இந்நாவலை் கொஞ்சம் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த சிறந்த படைப்பை அனைவரும் வாசிக்க வேண்டும்.
"எனக்கு பைத்தியமா சார் பிடித்திருக்கு?" // என்ற வரியில் தொடங்குகிறது இந்த நாவல்.
மனிதனின் தோற்றத்தில் இருந்து அவன் இந்த நிலத்தை விட்டு மறையும் வரையில் எத்தனை கதைகள் அவனாலும், அவனை சுற்றியும் உருவாக���றது.
பித்து என்று சொல்லப்படுகிற இந்த நிலைக்கு நம்மால் கட்டமைக்க பட்ட அளவுகோல் என்ன என்பதை மட்டும் சொல்லிவிட்டு இந்த நாவல் ஒதுங்கிக் கொள்ளாமல், இதில் வரும் ஒவ்வொரு மனிதரையும் நாம் வாழ்வில் கடந்திருக்கிறோம் என பக்கத்துக்கு பக்கம் உணரவைக்கிறது. உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை குடுத்ததாலோ ஏனோ தொடர்ந்து இதை வாசிக்க முடியவில்லை. மிக குறைவான பக்கங்கள் இருந்தும் இடைவேளை அவசியமாக பட்டது. ஒரு சில நாவல் மட்டுமே இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு வலியையும், குற்ற உணர்வையும் தூண்டிவிட்டபடி கடக்கிறது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரிகளில் இதுவும் ஒன்று :
//" நடந்தது நடந்து விட்டது. பேசி பயன் என்ன? அழ வேண்டியதுதான்." "அழுது என்ன லாபம்?" "லாபம் இருக்கிறது என்பதற்காகவா எல்லாற்றையும் செய்கிறோம்?"//
க.நா.சு அவர் வாழ்வில் சந்தித்த நிஜ மனிதர்கள் - தியாகு @ தியாகராஜன், தந்திக் குமாஸ்தா கிருஷ்ணமூர்த்தி, ப்ரோஹிதர் ராமச்சந்திர சாஸ்திரிகள் - எவ்வாறு பைத்தியமானார்கள், அவர்கள் என்னென்ன செய்தார்கள், எவ்வாறு அவர்களது வாழ்வு முடிந்தது என்பதைப் பற்றிக் கதையாக எழுதியிருக்கிறார்.
ஒரு எழுத்தளார் கண்டிப்பாகா த அனுபங்களையே பலவாராக பிரிந்து ஒரு சித்திரத்தை வரைந்து காட்டுவார். அதிலும் ஒரு வாசகன் அந்த எழுத்தாளரைப்பற்றி கொஞ்சம் அறிந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கா.நா.சுவின் இந்த நாவலும் அவரின் மற்ற நாவல்போல ஒரு தன்வரலாற்று தன்மை இருக்கிறது.
இந்த நாவலின் தொழில் நுட்பமாக சாட்சி பாவத்தை முன்வைக்கிறார். கதாப்பாத்திரத்தின் சிறு குழந்தை பருவம் முதல் இறப்புவரை சொல்கிறது நாவல். அருமையான முயற்சி. வெட்டி வெட்டி சொல்லபடுவதால் மிக சுவாரிசியமாக இருந்தது.