மின் வாரியங்கள் நட்டத்தில் விழுவதற்கான காரணமே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் என்ற கருத்தை அரசும், ஊடகங்களும் திட்டமிட்டே உருவாக்கியிருக்கின்றன. 1994-95இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ. 347 கோடி. 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் அதுவல்ல. ஆனால் சாமானிய மக்களின் உபயோகத்திலிருந்து கையாடப்பட்ட மின்சாரமோ பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கட்டற்ற வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும். இப்படிப்பட்ட சூழலுக்கான முக்கால் பங்குப் பயணத்தை இன்று நம் சமூகம் கடந்து விட்டிருக்கிறது.