அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் அகிலாண்ட பாரதி தன் மருத்துவப் பணியில் சந்தித்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் தன் கற்பனையுடன் இணைத்து எழுதிய நாவல் நிலமென்னும் நல்லாள். கிண்டிலில் அவர் வெளியிடும் நான்காவது புத்தகம் இது. கிராமத்தை பின்புலமாகக் கொண்ட கதை. அவரது ஆற்றுவெள்ளம் என்ற நாவல் கண்மணி பெண்மணி நாவல் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது.
‘ஆனைகுளம்’ என்னும் கிராமத்து மக்களின் பிற்போக்கு குணமும், அதனால் அக்கிராமத்து மக்களின் பின் தங்கிய நிலை, அக்கிராமத்திற்கு வரும் சுகாதார ஆரோக்கிய செவிலியர் ‘மகாலட்சுமி’யின் பார்வையில் ‘ஆனைகுள’ மக்கள் பெறும் தெளிவும் என பயணிக்கும் கதை. கிராம மக்களின் குணமும், முரட்டு பிடிவாதமும் என 20 வருடத்திற்கு மேலான மாற்றத்தை தெளிவாகவே கூறியிருக்கிறார் எழுத்தாளர். அவர்கள் பின்பற்றும் வழிமுறைகள், அவர்களின் நிலத்திற்காக படும் துன்பங்கள், படிப்பறிவு இருந்தாலும் சில முரட்டு பிடிவாதமுள்ள இளைஞர்கள், எதற்கும் தற்கொலையை நாடும் மனமுடைந்த சூழ்நிலை என இயல்பான எழுத்துநடை. வேலுசாமி, சந்தனராசா அவர்களின் நிலத்திற்கு தீங்கு நினைத்து அவர்கள் பற்ற வைத்த நெருப்பிலேயே புகைந்து போகும் பொழுது ‘நாம் இந்த மண்ணிற்கு எது தருகின்றோமோ அதுவே நம் மண் நமக்கும் தரும்’ என்ற சொல்லை மெய்பிக்க வைத்த கதாபாத்திரங்கள். மகாலட்சுமியின் அனுபவம், தன்னை அவமானப்படுத்திய ஊரே என்றாலும் அவளது இயல்பை மாற்றாமல் அவள் பேசும் வசனத்தில் “எல்லா ஊரும் நல்ல ஊரு தான். அவங்க வளர்ந்த விதம் என்னமோ, வாழ்ந்த விதம் என்னமோ, இப்படி ஆயிட்டாங்க" என மக்களை அவளது கடமையுடன் பிணைப்பது ரசிக்கும் படி இருந்தது. கிராம மக்களின் தெளிவை மகாலட்சுமியின் தாய் கூறும் ஒரு வசனத்தில் கதையும் அழகாக நிறைவு பெறுகின்றது. "மணிகண்டனுக்கு எதுக்குடி அம்மாவும் அப்பாவும்? அதான் ஊரே இருக்கே?"