யாருமற்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் அவளுக்கு ஒரே துணையாக இருக்கும் ஊர் பெரியவரின் இழப்பும் அதற்கு கதாநாயகியையே நாயகன் குற்றவாளியாக்குவதும் தான் கதை. இதிலிருந்து நாயகி வெளியில் வந்தாளா? குற்றவாளி யார் என தெரிந்ததா? என்பதே கதை.
மனம் எனும் வெற்றுப் பக்கத்தில் பல வகையான கிறுக்கலின் மூலம் உள்ளுக்குள்ளே சிதைத்துக் கொண்டு இருப்பவர்கள் பெரும் ஆபத்துக்குரியவர்களே.
கதாநாயகியைக் கொடுமைப்படுத்துவது ஒருவகை ஆளுமை என்று சொல்லப்படும் குரூர வகையில் தான் இந்த கதையும் அடங்குகிறது. இரண்டாம் பாதியில் இருந்து கதாநாயகனின் வடிவமைப்பு ஒருவகை நேர்மையில் அடங்கிவிடுகிறது.
குடும்பத்தில் ஒவ்வொருவராக இறந்துபோகப் பேரனை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைவில் வெளிநாட்டில் அவனைப் பாதுகாத்தாலும் இந்தியாவிற்கு அவன் திரும்பும் போது தாத்தாவின் பூதவுடலே வரவேற்கிறது.
தாத்தாவின் இறப்பிற்குப் பின்னே இருக்கும் மர்மத்தை ஆராயும் பிரணப்பிற்கு ஒரு நுனி கூட கிடைக்காமல் போவது தான் பெரும் குழப்பமாக, நடுவில் அவ்வீட்டில் இருக்கும் பெண்ணான இளாவை கொடுமைப்படுத்துவது பொழுதுபோக்காக வைத்துக் கொள்கிறான். திடீரென அவளை மணந்து கொண்டு அதற்கொரு காரணத்தையும் கர்ப்பித்துகொள்ளுபவனிடமே அவளின் மனம் அலைபாய்கிறது. இருவருக்குள்ளும் அமிழ்ந்திருந்த வெளிப்படா காதல் முடிவில் தடையை உடைக்கிறது.
இறப்புகளுக்கு எல்லாம் காரணம் ஒரு பெண் அதுவும் மனதால் சிதைந்து போனவள் என்று அறியும் போது பேரதிர்ச்சி தான் ஏற்படுகிறது. அந்த பகுதியே இக்கதைக்கு பலம் சேர்க்கிறது.
வரைமுறையே இல்லாத எண்ணங்களை அடக்கத் தெரியாமல் விடும் போது என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதைக் காட்டுவதற்கு இக்கதையில் பல கதாபாத்திரங்கள் இருக்கிறது.