இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்... இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது.
இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்... ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது எது?' - சுனில் கில்னானி
பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம்.
நம்முடைய வரலாற்று நூல்கள், குறிப்பாகப் பாட நூல்கள் என்ன செய்கிறது என்றால் அதற்கான பெருமையைச் சீர்திருத்தவாதிகள் இடம் ஒப்படைக்கிறது. ஆண்கள் பெண்களை மீட்ட மீட்பர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட பெண்களுக்குப் பாவம் ஒன்றுமே தெரியாது. அவர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். ஒளி விளக்காய் ஆண்கள் வந்தார்கள் என்றே இந்தத் தேவதைக் கதைகள் அமைகின்றன. ஆண்கள் பெண் விடுதலைக்காகப் பாடுபடவில்லை என்று முற்றாக மறுக்கவில்லை. ஆனால், பெண்களின் இத்தகைய வளர்ச்சிக்கும், பாய்ச்சலுக்கும் ஆண்கள் மட்டும்தான் காரணமா என்று கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தான் இந்த நிவேதிதா லூயிஸ் அவர்களுடைய தென்னாட்டு முதல் பெண்கள் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
பெண்களைப் பற்றிய வரலாற்றை எழுதுவது அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கான ஆவணங்கள், கோப்புகள், படைப்புகள் அரிதானவை. அப்படியே கிடைப்பதும் துண்டு துண்டாகவே இருக்கும். நிவேதிதாவின் முன்னுரை அந்த வலியை, இடைவெளிகளைச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. கமலா சத்தியநாதன் எனும் முதல் பெண் இதழாசிரியையின் எழுத்துகளின் வழியே அவருக்குப் பல வெளிச்சங்கள் கிடைக்கின்றன. அந்த முதல் பெண்களோடு வாழ்ந்தவர்களின் நினைவலைகள் ஓரளவிற்கு உதவுகின்றன. அதே வேளையில், அவர்களை வானத்தில் இருந்து குதித்தவர்களாக இந்நூல் கட்டமைக்கவில்லை. இதில் ஆண்வெறுப்பு இல்லை. அதே போல, கடினமான மொழி நடையோ, தேவையில்லாத ஒரு வரி கூட இல்லவே இல்லை. நாடகப்பாங்கான melodrama இல்லை. இததனைக்குப் பிறகும் இந்த நூல் அத்தனை கவர்ச்சி மிக்கதாக, பிரமிக்க வைப்பதாக, பெருமித கொள்ள வைப்பதாக, நம் வரலாற்றை நாமே அறிய வைப்பதாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இந்த நூலில் எத்தனை எத்தனை பெண்கள் அணிவகுக்கிறார்கள். மருத்துவர், தொல்லியல் ஆய்வாளர், பத்திரிகை ஆசிரியர், தாவரவியல் அறிஞர், வானியல் விஞ்ஞானி நகைச்சுவை நடிகர், அரசியல் ஆளுமைகள் என்று பிரமிக்க வைக்கிறார்கள்.
இதில் வருகிற எந்தப் பெண்களின் வாழ்க்கையும் எளிதானதாக இருக்கவில்லை. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதில் பங்களித்து இருக்கிறார்கள் - அம்மு சுவாமிநாதன் அவர்களைப் போல. அவரைப்பற்றிய கட்டுரையில் வருகிற அந்தக் குறிப்பு - அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியதில் முப்பது பெண்கள் பங்களித்து இருக்கிறார்கள் என்பது நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களைத் தொடர்ந்து 'founding fathers' என்று குறிப்பதை விட்டுவிட்டு 'founding parents' என்று குறிக்க வேண்டும் என்கிற தெளிவை உண்டு செய்கிறது.
சமூகச் சீர்திருத்தத்தில் பெண்கள் எவ்வளவு பரந்துபட்ட பார்வையும், வேகமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அக்கம்மா, வை.மு.கோதைநாயகி அம்மாள், முத்துலட்சுமி ரெட்டி என்று பலரின் வாழ்க்கையும் இயல்பாக உணர வைக்கிறது. மிக இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் எழுத்தில் சில கணங்கள் அப்படியே உறைய வைக்கின்றன. சத்தியவாணி முத்து நிறைமாத கர்ப்பிணியாக எத்தனையோ அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றதும், சமீபத்தில் பிறந்திருந்த குழந்தையைச் சிறைக்கம்பிகளுக்கு இடையே கட்டிக்கொண்டே உறங்கியபடியே சிறைவாசம் அனுபவித்ததும் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என வியக்க வைக்கிறது.
அறுவை சிகிச்சை கத்தியை கூடத் தொட விடாதவர்கள், பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்காதவர்கள், கல்விக் கூடங்களில் ஒதுக்கி வைத்தவர்கள், ஆறு முறை தொடர்ந்து தேர்வில் தோல்வியடைய வைக்க முயன்றவர்கள் என்று அத்தனையும் மீறி ஜெயித்திருக்கும் டி.எஸ். கனகாவின் வாழ்க்கையை எப்படித் துளி கூட அலட்டல் இல்லாமல் நிவேதிதாவால் எழுத முடிந்ததோ.
குடிமைப்பணி உனக்கு ஒத்து வராது என்று அதிகார பீடங்களையு,, பெண்ணால் சட்டம் ஒழுங்கை பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய ராஜாஜியையும் தன்னுடைய செயல்திறத்தால், நிர்வாகத் திறமையால், அறிவால் அசத்திய அன்னா...
புத்தகத்தின் அட்டை படம் Vincent van goghன் “Starry Night” ஓவியத்தை பிரதிபலிப்பது போல் இருக்கிறது, அந்த ஓவியத்தை பார்க்கும் போது ஏற்படும் வியப்பு இந்நூலை வாசிக்கும்போது ஏற்பட்டது. 45 “முதல் பெண்களும்” இச்சமூகத்தின் மீது ஏதோ இரு வகை தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள், எங்கோ தொலைவில் மினுக்கும் நட்சத்திரங்கள், நெருங்கி சென்று பார்த்தல் சூரியனை போல் சுட்டெரிப்பவர்கள். இந்தியா போன்ற சாதி-மத-பாலின பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக செயல்படவே அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் அத்தகைய பிற்போக்கு தனங்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்து ஆளுமைகளாக உருப்பெற்றிருக்கும் இவர்கள் அனைவரும் நமக்கான Inspirationகள் தான்.
இந்தியாவில் நடந்த கொடூரங்களில் முக்கியமானதென்றால் பிரிவினையை சொல்லலாம், அத்தகைய பிரிவினையினால் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் Urvashi Butaliaவின் “The Other Side of Silence” நூலை வாசிக்கும்போது உணரமுடிந்தது. அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்" என்கிற ஆய்வு நூலிலும் சாதியை உயிர்ப்புடன் வைக்கும் சதி, குழந்தை திருமணம், போன்றவை எல்லாம் பெண்களின் கற்போடும் /உடலோடும் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்பதை விளக்கி இருப்பார். பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" புத்தகம் பெண் விடுதலை அரசியலை பிரகடனம் செய்யும். ஊடகர் P. Sainath அவர்களின் கள ஆய்வின் வெளிப்பாடான “Everybody Loves a Good Drought” புத்தகம் பெண்கள் படும் துயர்களை ஆழமாக பேசும். இப்படி பெண்கள் படும் துயர்களையும் அவலங்களையும் வாசித்து விட்டு "முதல் பெண்கள்" போன்றதொரு புத்தகத்தை படிப்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்நூலில் இருந்து எடுத்துக்கொள்ள ஏகப்பட்ட ஊக்கம் நிறைந்த வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளது. ஆழமான ஆய்வுக்கு பின் வெளிவந்த நூலாகவே தெரிகிறது. S.Anandhi அவர்கள் எழுதியுள்ள ஆழமான ஆணிந்துரையில் தொடங்கி கிட்டத்தட்ட 45 பெண் ஆளுமைகளின் சுருக்கமான வரலாறை படிக்கும்போது துளி கூட சலிப்பே இல்லை. எம்.எஸ் சுப்புலட்சுமி, ராஜம் கிருஷ்ணன் போன்றோர் பற்றிய கட்டுரையை வாசிக்கும்போது கண் கலங்கியது. அங்கீகரிக்கப்படாத எத்தனையோ ஆளுமைகள் நூல் முழுக்க இடம்பெற்றுள்ளார்கள். இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருந்த வீ.எஸ். ராம தேவி ஆளுநர் என்கிற பதவியே ஒரு மாநிலத்திற்கு தேவை இல்லை என்கிறார். பெரியாரை பெரியாராகிய “மீனாம்பாள் சிவராஜ்” அவர்களின் அரசியல் வாழ்க்கை வியப்பு மிகுந்த ஒன்று. இந்தியாவில் சமூக விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார், ரங்கூனில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து தமிழக அரசியலில் கோலோச்சிய அன்னை மீனாம்பாள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு எல்லாம் திரைப்படமாக எடுக்கபட வேண்டிய ஒன்று. திராவிட இயக்கத்தை சேர்ந்த சத்யவானி முத்து அம்மையார் பற்றிய செய்தியும் சுவாரசியமானவை. இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பெண்கள் கல்வியின் மீது தீர பற்றும் வாசிப்பில் ஆர்வமும் சமூகத்தின் மீது பேரன்பும் கொண்டவர்கள். ஏற்றுக்கொண்ட கடமைக்காகவும் லட்சியத்துக்காகவும் திருமணம் கூட செய்து கொள்ளாத அளவிற்கு அவர்களின் கொள்கை பிடிப்பு இருந்தது. தங்களது சுயத்தை(Self) பெரிதும் நேசித்தவர்களாகவே அனைவரும் இருந்துள்ளார்கள். இக்கட்டான சூழலிலும் விடாமுயற்சியை கைவிடாத பண்பு தான் அனைவரையும் ஆளுமைகளாக ஆக்கியுள்ளது. இதில் பெரும்பாலான ஆளுமைகள் காந்திய கொள்கை மீதும் இந்திய விடுதலை மீதும் அக்கறை கொண்ட தென் இந்தியாவை சேர்ந்த பெண்கள். உலக அளவிலும் இந்திய அளவிலும் தீரமிக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். “இந்திய அரசாங்கமே ஒரு ஆணாதிக்க அமைப்பு தான்” என்று அவர்கள் கூறும் வார்த்தையில் உண்மையும் நியாயமும் இருக்கவே செய்கிறது. அறியப்படாத ஆளுமைகளின் வரலாறையும், அறியப்பட்ட ஆளுமைகளின் மறுபக்கங்களையும் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் பதிவுசெய்துள்ளார் நூல் ஆசிரியர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இந்நூல் நிச்சயம் இடம்பெறும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வந்தால் கூடுதல் மகிழ்ச்சி. BOOK: முதல் பெண்கள் AUTHOR: Nivedita Louis #BOOK_REVIEW
நவீன இந்திய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு துறையிலும் சாதனை புரிந்த பெண்கள் அவர்கள் சந்தித்த சவால்கள் ,குடும்பத்தில் அரசியலில், பொதுவெளியில், கல்விப்புலத்தில், பெண் என்பதால் எதிர்கொண்ட சோதனைகள், தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வியல், அரசியல் ,சமூகம் ,மூலமாக தங்கள் சுயத்தை அவர்கள் வெளிப்படுத்திய விதம். தாம் கற்ற கல்வி ,பெற்ற அனுபவங்கள் மூலம் பெண்கள் வரலாற்றை அவர்கள் கட்டமைத்த விதம், முதலானவற்றை 'முதல் பெண்களின்' வரலாற்றினை சொல்வதன் மூலம் இந்நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது். சிறுவயது திருமணம் ,இளவயதில் விதவை கோலம், இரண்டாம் தாரமாக மணமுடித்து வயது முதிர்ந்த கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டிய சூழல் ,குழந்தைகளின் கல்வி, உடல்நலம் பேணுதல் ,கணவனின் வேலைவாய்ப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டிய நிலைமை ,கூட்டுக் குடும்பங்களில் உற்றார் உறவினருக்கு பணிவிடை செய்ய வேண்டிய கடமை, சாதி சமய கட்டுப்பாடுகள் தடைகள், மணமுறிவுகள், கலப்புமணம், குடும்பத்தில் ஆதரவின்மை போன்ற எண்ணற்ற இடையூறுகளுக்கு மத்தியில் இப்பெண்கள் செயல்பட்டனர். தாம் செயல்பட்ட துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத் செய்வதன்மூலம் இந்திய தேசியத்தை இவர்கள் கொண்டாடினர் .இச் செய்திகளை இந்நூல் கவனமாக பதிவு செய்கிறது.. இவை ஆனந்தி இந்த நூலுக்கு அளித்த அணிந்துரை. பூ.கோ சரவணன் அவர்களின் அறிமுகத்தால் இந்த நூலை வாங்கி படிக்க தொடங்கினேன் இந்த நூல் நம் தமிழகத்தில் கவனப்படுத்த படாத பெண் ஆளுமைகளை பற்றி பேசுகிறது. இந்த நூலில் வரும் பெண்கள் அசாத்தியமான மனோதிடம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்வி ஒன்றே தங்களை உயர்த்துவதற்கான வழி என்று நம்பிக்கையோடு காலம் முழுவதும் அதை கையில் வைத் திருக்கிறார்கள். கோதை நாயகியும் அம்முவும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்தும் அந்தக் காலத்து சமூக நிலையை மற்றும் பெண்களின் நிலையை நமக்கு விளக்குகிறது ..இதில் குறிப்பிட்ட அனைத்து பெண்களின் வாழ்விலும் போராட்டத்திலும் பல விஷயங்கள் பொதுவானதாக இருக்கின்றன ..அவர்களின் தன்னம்பிக்கை ,போராட்ட குணம், தான் கற்றதை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் பாங்கு ,மனிதம், நேர்மை அவர்கள் வாழ்வு எங்கும் பிணைந்து இருக்கிறது .இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான பெண்கள் காந்தியின் மீது அளவற்ற பற்று உடையவர்களாக இருக்கிறார்கள் .இது நான் இதுவரை நம்பிக்கொண்டிருந்த காந்தியின் பிம்பத்தை முழுவதும் மாற்றுகிறது .நம் பள்ளியில் அறிந்திருந்த காந்தி வெறும் சுதந்திரம் வாங்கித் தந்தவர் ஆகவே இருக்கிறார் .நாம் அவரின் வாழ்வை இன்னும் இன்னும் மீள்வாசிப்பு செய்ய வேண்டும். அந்தாகால ஆளுமை பெண்கள் அனைவரின் நாயகனா இருக்க காந்தி எப்படிபட்ட கொள்கை உடையவராக இருந்திருப்பார்?
இன்றுவரை பெரியார் மேல் வைக்கப்படும் விமர்சனம் அவர் மகள் வயதுடைய (35 வயது) பெண்ணை மணந்தார் என்பதாகும்.ஆனால் இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான ஆளுமைகள் 10-15 வயதில் திருமணம் ஆனவர்கள். அதில் கனவர்கள் பலதார மனம் புரிந்தவர்கள். அந்தகால எதார்த நிலை இப்படி இருக்க பெரியாரை மட்டும் விமர்சிக்கும் இந்த கால நிகழ்வை புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த புத்தகம் முதல் பெண்களின் அறிமுபடுத்தல் மட்டுமே என்பதாலும்,வரலாற்று தரவுகல் என்பதாலும் சுவாரசியமான நாவல் போன்று படிக்க இயலாது.. பெண்களின் அரசியல் பங்களிப்பு சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் புத்தகம். ஆசிரியரின் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள்.. கோதைநாயகி, ராஜம் கிருஷ்ணன், வீல்சேர் டாக்டர் என்னை கவர்தார்கள்.