சிவனடியார்கள் பலர் இருந்தாலும் மாணிக்கவாசகர் சிவனுக்கு மிக நெருக்கமானவர். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். இவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான்.