‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. ‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான். ‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது. ‘ஆமா, இல்ல!’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி - இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
நான் என்றும் ஒரு ராஜா ரசிகன். இதில் பெருமை என்பதை விட, அது ஒரு பேரானந்தம் தரும் என் தனிப்பட்ட உணர்வோடு சம்பந்தப்பட்டது என்பதே உண்மை. ஆகவே, சக ரசிகர்களின் கட்டுரைகளை படிப்பது என்பது ஒரு தனி ஆனந்தம் தருவது இயல்பு.. அப்படி, சுகா, கானா பிரபா போன்றோரின் கட்டுரைகள் எனக்கு எப்போதும் ஒரு அலாதியான இன்பம் மட்டுமல்ல, அது ஒரு புது ஆழங்களுக்கு என்னை அழைத்துச்செல்லும். அப்படித் தான் இந்த புத்தகத்தையும் நான் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இருந்து தருமராஜ் ஒரு ராஜா ரசிகர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... துவக்கத்தில் இருந்தே அவர் அதை மறைக்கவும் இல்லை. அதனால் இதை ஒரு ஆய்வுக்கட்டுரை என்ற எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு இல்லை. ராஜாவின் இசை என்பது தனி இன்பம், அதை ஒரு மலரில் வாசம் போல், என்ன காரணம், ஏது காரணி , என்ற ஆராய்ச்சி எதுவுமின்றி அனுபவித்து ஆனந்திப்பதே எனது வழக்கம். அதே போல், அவர் இசையில் நான் இதுவரை கேட்டிராத புதிய சங்கதி ஏதும் சிக்குமா என்ற எதிர்பார்ப்போடு தான் நான் அதை படிக்கத்துவங்கினேன். ஆனால், தருமராஜ் இதை ஒரு ஆய்வுக்கட்டுரை எனும் கோணத்தில் தான் எழுத்தத்துவங்கினார் என்று எண்ணுகிறேன். அதனால் என்ன, இது ஒரு புது கோணம் என்று தான் நான் இதைப் படிக்க ஆரம்பித்தேன்.
சில வரிகளில், அவர் இசையை, சமூக மாற்றத்தின் சட்டங்கள் வழியே காட்சிப்படுத்தி, ஒரு புதிய கோணத்தை காட்டுவது என்னை பிரம்மிக்க வைத்தது. கவிதையை விடவும் இசை முக்கியத்துவம் பெறுவது, இந்த நூற்றாண்டின் வரம். ஓசையை எழுத்தாக மட்டுமல்ல ஓசையாகவும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற தொழில் நுட்பம் நிகழ்த்திய மாறுதல் இது. அதற்கு முன்பு வரை, பாடலில் ஒலி அழியக்கூடியது; சொற்களே நிரந்தரமானவை என்று நம்பிக் கொண்டிருந்தோம். இதனால் சொற்கள் கனமாக இருந்தன. செய்யுள் இந்த வகையைச் சார்ந்தது. செய்யுள்கள் பாடப்படுபவை என்றாலும், அவை கவிதையாக வெற்றி பெற்றவை. செய்யுள்களைப் பாட முடியும் என்பது கூடுதல் தகவல் மட்டுமே. ஆனால், இன்றைக்கு, ஒலி நிரந்தரமானது என்றான பின்பு, ஓசையின் முன் எழுத்து துவண்டு விடுகிறது. அர்த்தங்களை துறந்து, தம்மை ஒலிகளாக மட்டுமே நிறுத்திக் கொண்டன.
ஒரு கலையின் நோக்கம், அதன் மீது இருக்கும் ரசனையின் உள்ளடக்கமான 'வெளிப்பாடு' (expression ) என்பதை அவர் விளக்கும் விதம் ஒரு அலாதியான அனுபவம்.
மனிதனின் ஆகப்பெரிய வேட்கை மெளனத்தை ஞாபகம் வைத்திருப்பது. மெளனம் என்று நான் சொல்வதை ஒலிக்கு எதிரானது என்று நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் மெளனம், ஒரு வகை உணர்வு; விளக்கம் அல்ல, விளங்கிக் கொள்வது; அர்த்தம் அல்ல அர்த்தத்தை அறிவது. இதைச் சில நேரம் கவித்துவம் என்று சொல்லி மிரட்டுகிறவர்களும் உண்டு. என்றைக்காவது எதையாவது சத்தமாய் யோசித்திருக்கிறீர்களா? அப்பொழுது உங்களைச் சுற்றி ஒரு அமைதி இருக்குமே - அந்த மெளனத்தையே நான் ‘மெளனம்’ என்கிறேன்.
அதைப்போலவே சமகால தமிழ் சினிமா ரசனையை அவர் பிரித்துக் காண்பிப்பது அருமை. அதை மெதுவாக மாறும் ரசனைகள் சமூகக் காரணிகளோடு அவர் குறிப்பிடுவது மிக நேர்த்தி.
நன்னூல் எண் வகை மெய்ப்பாடுகளைச் சொல்கிறது என்றாலும், தற்காலத் தமிழர்களுக்கு எல்லாமே அழுகையில் அடங்கி விடுகிறது. காதல் என்றாலும் சரி, தாய்ப்பாசம் என்றாலும் சரி கண்ணீர் இல்லாமல் இங்கே எதுவும் முழுமை இல்லை. திறமையாக அழுது காட்டுவது மட்டுமே திறமையான நடிப்பு என்று திரைப்பட நடிப்பு குறித்து நம்மிடம் ஒரு கருத்து இருக்கிறது. எம்ஜியார், ரஜினி போன்றவர்களுக்கு நடிக்க வராது என்று நாம் முடிவு செய்வதற்கும் இந்த அழுகை சமாச்சாரமே அளவுகோல்.
இப்படி பல வகைகளில், தமிழர்களின் மாறும் ரசனையின் அலகுகளை அவர் விளக்கும் விதம் சிறப்பான, குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த மாறும் ரசனைகள் எப்படி திரையிசையை மாற்றியுள்ளது என்பது புதிய சிந்தனைகளின் கதவுகளைத் திறந்து விடுகிறது.
இப்படி பல வகைகளில் அலசி ஆராய்ந்துவிட்டு, அதன் மையப்புள்ளியாக ராஜாவில் வந்து நிறுத்தும்போதுதான் ஜெர்க் அடிக்கிறது. அடேய், இது நம்ம ஜக்கி, தினகரன் போன்ற இவாஞ்சலிஸ்ட்டுகள் வழக்கமாக வேப்பிலை அடிப்பது ஆயிற்றே என்று பல்பு எரிகிறது...