"காயத்ரி" - சுஜாதா
1970களில் தினமணி கதிர்'ல் வெளிவந்த இந்நாவல் தொடர், திரைப்படமாக கருப்பு வெள்ளையில் 1977ல் வெளிவந்தது. கதைக்கரு வில்லங்கமானது என ஒருவாறு அறிந்த அளவில்தான், வாசிக்க தொடங்கினோம். வாசித்து முடித்தபின், சற்றே மலைபோடுதான் எழமுடிகிறது. தற்காலத்துக்கும் பொருந்தி போகும் குற்றச்சம்பவத்தை கொண்ட கதைக்கரு.
ஒரு பணக்கார குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண் தனக்கு ஏற்படும் அமானுஷ்யத்தையும் அருவறுப்புகளையும் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு நபர்களின் மீது உள்ள சந்தேக பார்வையையும், அவளுடைய பார்வையின்வழி காட்டி, அவள் உணர்ந்ததை நமக்கு கடத்துகிற அளவுக்கு திரு சுஜாதா அவர்களின் எழுத்து உள்ளது.
அதாவது,
காயத்ரி எனும் அழகான பெண் திருமணம் நடந்து வாழ்க்கைப்பட்டு போகுமிடத்தில் கணவன் ராஜரத்தினம், ராஜரத்தினத்தின் அக்கா சரசு, சமையல்காரர் ஷாமா ஐயர், அவரின் பேத்தி இந்திரா.... இந்த நான்கு கதைமாந்தர்களை வைத்தே கிட்டத்தட்ட முழு நாவலும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரிக்கு அந்த வீட்டில் என்ன பிரச்சனை? அந்த பிரச்சனைகளிலிருந்து அவள் விடுபட எப்படி முயற்சித்தாள்? யாரால் அவளுக்கு அந்த பிரச்னைகளிருந்து தீர்வு கிடைக்கிறது? என கடைசி சில அத்தியாயங்களில், கதையாசிரியர் சுஜாதாவின் ஆஸ்தான துப்பறிவாளர் இணையர்கள் கணேஷ்-வசந்த் இடம்பெற்று மர்ம புதிர்களை விடுவிக்கிறார்கள்.
அட்டகாசமான எழுத்துநடை. பரவலாக நாம் அனைவரும் இத்திரைப்படத்தை டிவியில் கண்டிருக்கமுடியாது., காரணம் 'அந்த' மாதிரியான கதை என்பதால். ஆக திரைப்படத்தை youtubeல் பார்க்கும் முன், இந்நாவலை வாசிப்பது நமது கற்பனை(காட்சி சிந்தனை) குதிரைக்கு நல்ல களமாக அமையும்.