சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்து தமிழின் முதன்மையான இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.
90-களின் மதுரையை, மாந்தர்களை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
அய்யனார் கம்மா (2010), ஒரு வெய்யில் நேரம் (2012), பைத்தியக்காலம் (2017), மதுரைக் கதைகள் (2017) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் தீக்கடல் (2010), தற்கொலைக்கு முயன்று தோற்றவன் (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் அலப்பறை (2017) என்கிற நாவலும் இதுவரை வெளிவந்துள்ளன.
உயிருதிர்காலம் என்ற சிறுகதை, நவீன விருட்சத்தால் வெளியிடப்பட்ட சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றது.
‘அய்யனார் கம்மா’ என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு, அது ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.
தலைப்பாலீர்க்கும் தன்மையன இவர் நூல்கள். அவ்வாறே அமைந்த Kavidhai தொகுப்பான இந்நூலின் கைக்கு அடக்கமான ஆசையாய் வாங்கிய பொம்மையை அன்றிரவு மார்போடனைத்துறங்கும் மழலை போலச் சிக்கெனப் பிடிக்கும் அளவிலான இரண்டாம் பதிப்பிது
தீக்கடல் தொகுப்பிற்குச் செய்ததுபோல இந்நூலிலுள்ள kavidhai ஒவ்வொன்றையும் ஆசிரியரின் Twitter கணக்கில் தேடி எடுத்தபொழுது பத்தாண்டின் முன் இவர் படைப்பு ஒவ்வொன்றும் முதலில் அங்கு பதியப்பட்டுப் பின் நூலாக்கப்பெறும்பொழுது எத்தகு வடிவமாற்றம் பெற்றுள்ளன என்றறிய முடிந்தது
சிறுசிறுமாற்றமே எனினும் ஒப்புநோக்கையில் அட! என எண்ணவைக்கும் மாற்றங்கள். மடக்கி மடக்கி எழுதினால் மட்டுமே Kavidhai ஆகிவிடாது என்று Kavignar Narsim கூறும் கருத்தை அவர் படைப்பிலேயே கண்டநொடி தாம் சொல்வதைத் தம் படைப்பிலும் கடைபிடிக்கிறார் என்பதை மீண்டுமொருமுறை உணர்ந்தநொடி
உள்ளங்கைச்சூட்டில் உடல் சூட்டையே அதாவது காய்ச்சலையே அறியும் என்னை உள்ளச் சூட்டைக் காணச் சொல்கிறது இந்நூலில் ஒரு Kavidhai
நிறப்பிரிகை குற்றநாள் தேநீரின் மேற்பரப்புச் சுருக்கம் குழிபறித்தமரும் நாய் சுழலும் வானம் முதலியவை இவருக்கே உரிய சொல்லாடல்கள் கவனிப்புக்கள் & படிமங்கள்
2013ல் வெளிவந்த இந்நூலில் அங்குதான் நிற்கிறேன் இன்னமும் என்ற சொற்கள் 2018ல் வெளிவந்த 96 திரைப்படத்தை எனக்கு நினைவுபடுத்தியதில் வியப்பில்லை மகிழ்வே!
கூட்டுப் பனைமரங்களின் அழகைக் காட்டி நாம் நயக்கும் அடுத்த நொடி தனித்துநிற்கும் ஒற்றைப் பனைமரத்தின் பேரழகைக் காட்டுகிறார் Kavignar
இனி ஒவ்வொருமுறையும் எனக்குப் பிடித்தவாறு பச்சைப் பனை ஓலையில் பதநீர் அருந்தும்பொழுது முதல் முத்தத்தின் பசும் மணத்தை முகர்வேன்
நின்று சுடரும் தீயின் மீச்சிறு அசங்கலில் அவளின் கண்சிமிட்டல் காண்பேன் இனி
வேடனுக்கஞ்சா விசைகணிப்பறிந்த பறவையாக இருக்க விழைகிறேன்
சிரிகை விரித்தபடியே சில பறவை இறக்கலாம். ஆனால் படைப்பாளன் படிப்பாளியின் உள்ளமெனும் வானத்தில் என்றும் சிரிகை விரித்துப் பறந்தபடியே இருக்கிறான். சமகாலத்தில் கொண்டாடுவதன்றி ஒரு படைப்பாளனுக்கு நாம் தரக்கூடிய சிறகு வேறென்ன இருக்க முடியும்?
இதோ என்னால் இயன்ற எழுத்துச்சிறகை அளிக்கிறேன் இன்னும் பன்னூல் படைக்க!