வா.மு.கோமுவின் வாழ்க்கையும், எழுத்தும் வெவ்வேறானவை கிடையாது. இரண்டுமே கொண்டாட்டமானவை. பொதுவாகவே இன்றைக்கு கதை சொல்லிகள் குறைந்து போயிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக உரையாடல்களின் வாயிலாக கதைசொல்லும் ஆட்கள். கோமு அந்த விஷயத்தில் வித்தகர். நகைச்சுவையாக எழுத கூடியவர், செக்ஸ் கலந்து எழுதிகிற ஆள், நல்ல ரீடபிளிட்டி, செம்ம ஃப்ளோ என பரவலாக அறியப்படுகிற இவர் மனித உணர்வுகளை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டக் கூடியவர். போலியான கலாச்சார பிம்பங்கள், கட்டுப்பாடுகள் முதலிய மாயைகளுக்குள் சிக்காமல் தான் கண்ட வாழ்க்கையை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் எதார்த்த எழுத்துக்கு சொந்தக்காரர். 1989லிருந்து 2018 வரை சிற்றிதழ்களில் வெளிவந்த கோமுவின் சிறு&#
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.
இந்த பின்நவீனத்துவம் என்பது எனக்கு எப்போதும் ஒரு கலவையான ஒவ்வாமையை தருகிறது... ஒரு வேளை சரியான புதினங்களை படிப்பதில்லையோ என்னமோ... ஒரு நீண்ட பயணத்தில் முன்பே முடிவு செய்த படி, kindleல் அடைத்து வைத்திருந்த புத்தகங்களில், எங்கள் கொங்கு வட்டார வழக்கில், சாமானிய கிராமிய மற்றும் மறுக்கப்பட்ட மக்களின் வாழ்வை எழுதுவதில் குறிப்பிடத்தக்கவர் என்று சமீப காலத்தில் அடையாளம் காட்டப்படும் வா. மு.கோமுவின் இந்தச் சிறுகதைத் தொகுப்பை படிக்க நேர்ந்தது.. அவரின் புதினங்கள் சிலவற்றை முன்பே படித்தும் இருக்கிறேன். இந்தத் தொகுப்பில் வழக்கமாக யாரும் தொடாத விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வு தவிப்பு அவரின் களம். குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள் முகத்தில் அறைகின்றன. சாதியம் கொடுக்கும் திமிரில் சிறுமி மேல் நிகழ்த்தும் பாலியல் வன்முறையும் அதன் பாதிப்பையும் அப்பட்டமாய் விளக்கும் 'இனி ஒன்னையும் மறைச்சு..'. மணவாழ்வில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையால் ஏற்படும் மனவியல் விளைவை எடுத்துரைக்கும் 'டெய்ஸி டீச்சர் ', காதலின் பெயரால் பெண்ணிடம் நிகழ்ந்த பாலியல் வன்முறை அவளின் பிற்கால மணவாழ்வில் ஏற்படுத்தும் மனப்பிறழ்வு பற்றி அறைந்து சொல்லும் 'குருவி இங்கே திருமதி '. என்னதான் முற்போக்கு பேசினாலும் கிராமங்களில் போகாத தீண்டாமை மற்றும் சாதியத்தின் தீவிரம் சொல்லும், 'ஏலைசா! ஒரே தள்ளு!'. இப்படி சில குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.
வழமையாக படிக்கும் புத்தகங்கள், குறிப்பாக, சிறுகதைகள், ஆழ்ந்து படிப்பவையாகட்டும், வேகமாய்ப் படிப்பவையாக ஆகட்டும்,படிக்கும் போது ஒரு கோர்வையான சிந்தனைகளை,உணர்வுகளை ஏற்படுத்தும். ஆனால் இதில் மேலே குறிப்பிட்ட கதைகளைத் தவிர மற்ற பெரும்பாலான கதைகளால் வெறும் எரிச்சல் மட்டுமே மிச்சம். காமம் என்பது வயிற்றுப் பசியை போலவே ஒரு அடிப்படை தேவை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் படித்தபின்பு பசி மறந்து வாந்தி வரும் அளவில்?!.... விளிம்பு நிலைச்சமூகத்தில் மனப்பிறழ்வு, அதை ஏற்படுத்தும் குடி போன்றவை உருவாக்கும் விளைவு ஆவணப்படுத்த வேண்டியது; ஒரு கேள்வியும் இல்லை... களம் சரியானது, சாதாரணமாக மற்றவர் தொடாதது. ஆனால், அதற்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் நடையினால் இறுதியில் ஏற்படும் ஒவ்வாமை தவிர்க்கப்பட்டிருக்கலாம்....