#357 Book 28 of 2025- நீ இன்றியமையா நான் Author- யாத்திரி
தமிழில் நான் மிகவும் ரசித்து வாசிக்கும் கவிஞர்களுள் யாத்திரிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. காதல் கவிதைகளைப் பொருத்தவரை ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே உணர்வை வெவ்வேறு வரிகளில் எழுதுவது போல தோன்றி ஒரு சலிப்பு தட்டும். ஆனால் இவரது கவிதைகளை பல புத்தகங்களில் வாசித்த பிறகும் இன்னும் புதுமையாகவே இருக்கிறது. எல்லாருக்கும் இவரது கவிதைகள் ஏதோ ஒரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.
காதல் வெறும் சந்தோஷம் மட்டும் இல்லை. அது ஒரு குழப்பம்,ஒரு கோபம்,ஒரு ஆசை,ஒரு ஏக்கம்,ஒரு தவிப்பு,எல்லாமும் தான். காதலின் மெளனமான தருணங்களை அனுபவித்தவர்கள்,காயங்களை வார்த்தைகளால் தேற்றிக்கொள்ள விரும்புபவர்கள்,ஒருபோதும் முழுமையாகச் சொல்ல முடியாத உணர்வுகளை உணர்ந்தவர்கள்-இவைகளின் பிரதிபலிப்பாகத்தான் நான் இந்தப் புத்தகத்தை பார்க்கிறேன்.
ஒருவரை நேசிக்கத் தொடங்கிய பிறகு நம் உலகம் மிகச் சிறியதாகி விடுகிறது. அந்த இருவரே ஒரு முழு உலகமென அவர்களின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக அழுத்தமாக தெளிவாக..கவிதையை விட வேறெது சொல்ல முடியும்?! காதலுக்காகவே,காதலால்..காதலால் ஆன ஒரு படைப்பு இது.