அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளுமையின் பல முகங்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இந்நூல். அம்ஷன் குமார்
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
தண்ணீர், கரையாத நிழல்கள் மற்றும் இன்று ஆகிய புதினங்கள் மூலம் அசோகமித்திரன் என் மனதுக்கு நெருக்கமானவர். சில நண்பர்கள் கூறுவது போல் எப்போது எல்லாம் என் வாசிப்பில் சுணக்கம் ஏற்படும் போது அசோகமித்திரனை வாசித்தால் புது உற்சாகம் கிடைக்கும். "எரியாத நினைவுகள்" அம்சன் குமாரால் அசோகமித்திரனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கட்டுரைகளைக் கொண்ட கட்டுரைத்தொகுதி ஆகும்.இவை 1967 முதல் 2008 ஆகிய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை என்றாலும் மற்ற ''கட்டுரைகளில் சில எனக்கு மிகவும் இ ரசித்துப் படித்தேன்.அவை 1.வில்லியம் பாக்னர்:பாக்னர் பற்றியது. 2.ஆண்டன் செகாவ்:செகாவ்வின் சிறுகதைகள் மற்றும் வாழ்க்கைப் பற்றிய அருமையான கட்டுரை. 3.நானும் என் எழுத்தும் 4.பேனாவே ஊண்டுகோலானது:அவரின் சிக்கனமான எழுத்துநடைப் பற்றியது. 5.ராஜாஜி,சினிமாவுக்கு போனார்: "அவ்வையார்" படத்தின் ராஜாஜியின் விமர்சனம் மற்றும் திரைத்துறை பற்றிய அவரது பார்வை. 6.18வது அட்சக்கோட்டில்:செகந்திராப்பாத்தில் சுதந்திரத்திற்கு பிறகாக அசோகமித்திரனுக்கு ஏற்பட்ட இளமைக்கால அனுபவங்கள். 7.கதையின் கதை-பிரயாணம்:கதையின் கதை என்ற சிறுகதை எழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள். 8.எரியாத நினைவுகள்:மூர் மார்க்கெட்டுக்கும் அசோகமித்திரனுக்கும் ஏற்பட்ட ஆத்மார்த்தமான பிணைப்பு. "மூர் மார்க்கெட்டிலிருந்து வாங்கிய எந்த பழையப் புத்தகமும் மவுனமாக வேறோரு கதையைச் சொல்லும்". 9.தமிழ் நாவல் ஒரு கண்ணோட்டம். 10.நானறிந்த பிரகாஷ் 11.க.நா.சு- சில நினைவுகள். 12.மறுவாய்ப்பு நிச்சயமில்லை(குழந்தைகளுக்கு). 13.என் வீட்டைக் காணவில்லை.
ஒரு சில கட்டுரைகள் நம் முகத்தில் மெல்லிய புன்னகையும்,ஒரு சிலவை நம்மை வருத்தம் செய்ய கொள்ளும். அசோகமித்திரனின் ரசிகர்களுக்கு இக்கட்டுரை சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நூலைப் பரிந்துரை செய்த நண்பருக்கு என் அன்புகள். #Must read. #Highly recommended.
1967 முதல் 2008 வரை அசோகமித்திரனால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட நூல் ‘எரியாத நினைவுகள்’. வசீகரமான அட்டை படமே இந்த நூலை வாங்குவதற்கான காரணம். மேலும் அ.மி யின் அபுனைவு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மற்றொரு காரணம். அட்டகாசமான அனுபவமாக இக்கட்டுரைகள் இருந்தது. அவருடைய பெரும்பாலான புனைவுகளை படித்திருக்கிறேன், அந்த அனுபவமே இந்த கட்டுரைகளை புரிந்து கொள்வதற்கு துணையாக இருந்தது.
அசோகமித்திரன் என்றாலே பழைய சைக்கிளும் தி.நகர் நடேச முதலியார் பார்க்கும் தான் ஞாயபகம் வரும் என்று பல எழுத்தாளர்கள் பதிவு செயதிருக்கிறார்கள். ‘பார்க்குக்கு போகலயா?’ என்ற கட்டுரையில் தன்னுடைய சைக்கிள் தன்னுடன் உரையாடுவதைப் போல எழுதியிருப்பார். புன்னகையை வரவைக்கும் கிளாசிக் அ.மி. யின் எழுத்து. ஒரு பக்க அளவே கொண்ட கட்டுரையில், எழுதுவதில் தான் சந்தித்த புற இன்னல்களை பதிவு செய்திருக்கிறார்.
‘பேனாவே ஊன்றுகோளானது’ என்ற கட்டுரையில் தான் ஏன் எழுத்தை தேர்ந்தெடுத்தேன் என விளக்கியுள்ளார். 1953 ல் முதல் சிறுகதையை பத்ரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பித்து, திரும்பி வந்த கதையை தொடர்ந்து பல முறை சுருக்கி மீண்டும் அனுப்பியதில், 1957 ஆம் ஆண்டு முதல் கதை பிரசுரமாகியுள்ளது என்ற தகவல், மினிமலிஸ எழுத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணமாக தோன்றுகிறது.
‘ராஜாஜி சினிமாவுக்கு போனார்’ என்ற கட்டுரை, இத்தொகுப்பிலே மிகவும் சுவாரசியமான கட்டுரை. ஔவையார் படத்தின் தயாரிப்பில் தொடங்கி, அப்படத்தின் விளம்பரப்படுத்திய விதம் அதன் விளைவாக அடைந்த வெற்றி என நீளும் அக்கட்டுரையின் இறுதி வரிகளில் இருக்கிறது புன்னகையை வரவைக்கும் ஆச்சர்யம்.
‘கஃபி-கிரீம்-கமலாதாஸ்’ - அ.மி. யின் குபீர் சிரிப்பு கட்டுரை.
‘கதையின் கதை - ஒரு பிரயாணம்’, அ.மி யின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் பிரயாணம் முக்கியமான ஒன்று, இறுதி வரிகளை படித்து முடித்ததும் என்னுள் எழுந்த ஆச்சர்ய உணர்வு, எத்தனை முறை அந்தக் கதையை படித்தாலும் ஏற்படும். இக்கட்டுரையில் அந்தக் கதை எழுதுவதற்கான காரணத்தையும் அதில் வரும் சீடன் யார் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.
‘18-அ’ - அ.மி செகந்திராபாதில் வாழ்ந்த நினைவுகள், ஹைதிராபாத் நிஜாமின் சமஸ்தானத்தில் மக்களின் நிலை போன்ற அக்கால நிலையை விளக்கும் கட்டுரை. இரண்டாம் உலக யுத்த காலம் அதைத் தொடர்ந்து பெற்ற சுதந்திரம், சுதந்திரத்திற்கு பின் இந்திய நாட்டுடன் இணைய விரும்பாத நிஜாம், தனி நாடாக இருக்க விருப்பம் தெரிவித்த சூழலால் அங்கு வாழ்ந்த மக்களின் நிலை, அதன் பிறகு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
‘சட்ட வலியுறுத்தல் இல்லாமல் நிகழ்ந்த சமூக மாற்றம்’ - இளம் விதைவைகளின் வாழ்க்கையை புனைவுலகம் எப்படி கையாண்டிருக்கிறது என்பதை, எழுதப்பட்ட பல கதைகளின் வாயிலக பதிவு செய்கிறார். இராமலிங்கப் பிள்ளையின் ‘என் கதை’ என்ற சுயசரிதை நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட கதை மிகவும் பாதித்தது.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.
நிகழ்வுகளையும் காட்சிகளையும் உறையவைக்கும் தன்மை புகைப்படங்களுக்கு ஓவியங்களுக்கு உண்டு . எனவே சரித்திரத்தை இதுவரை நாம் அறிந்துகொண்டதற்கு பெரும் உதவியாக பாதுகாக்கப்பட்ட இவ்விரண்டு கலைப்படைப்புகளும் நமக்கு உதவின . இதைக்கடந்து வரலாற்றின் சாட்சியாக நிலத்திற்குள் புதைந்து போன பல ஆயிரம் மௌன சாட்சிகள் இன்று மெல்ல குரலெடுத்து அகழ்வாராய்ச்சியின் மூலம் பேச தொடங்கி வரலாற்றை புனைவுகளின்றி ஆதாரப்பூர்வமாக நாம் அறிந்துகொள்ள ஒரு புதிய திறப்பை உருவாகியிருக்கின்றன . இந்த வரிசையில் காலத்தையும் மனித வாழ்வையும் ஒரு நிலத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நிலையையும் பதிவு செய்து காப்பாற்றி வரும் மற்றுமொரு முக்கிய கலைப்படைப்பு எழுத்து - இலக்கியம் குறிப்பாக அனுபவக்கட்டுரைகளும் - பயணக்கட்டுரைகளும் . 100 ஆண்டுகளுக்கு முன் தான் அன்றாட வாழ்வை ஒரு நாட்குறிப்பாக எழுதி சேமித்து வைத்ததுதான் இன்று மிகப்பெரிய ஒரு சரித்திர சான்று - அனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு என்பதை நாம் அறிவோம் . தான் வாழும் காலகட்டத்தில��� தன்னையும் தன் நிலத்தை சுற்றி நிகழும் நிகழ்வுகளை பதிவு செய்தாலே காலம் அதனை ஒரு வரலாற்று படைப்பாக மாற்றிவிடுகிறது . முன்றைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இதனை பெரும்பான்மையாக நம்மால் பார்க்க முடியும் . எல்லோரும் தன் இலக்கியம் சார்ந்த அனுபவங்களை - இலக்கியம் தாண்டிய அனுபவங்களையும் கட்டுரை வடிவில் பதிவுசெய்துள்ளனர் . அவையனைத்தும் இன்று வரலாற்றை நாம் புரிந்துகொள்ள மிகப்பெரிய ஒரு களஞ்சியமாக திகழ்கின்றன . அப்படி 1940 களில் தொடங்கி 2000 ஆண்டுவரை பலதரப்பட்ட துறைகளில் தனக்கு கிடைத்த அனுபவங்களின் திரட்டை எரியாத நினைவுகள் என்ற இந்த கட்டுரை தொகுப்பில் தனக்கே உரித்தான எழுத்து நடையில் அசோகமித்ரன் அவர்கள் நமக்கு கொடுத்துள்ளார் .
அசோகமித்திரன் அல்புனைவையும் புனைவின் விதிகளுக்குள்ளாகவும் , புனைவின் மொழிநடைக்கொண்டும் , புனைவின் சுவாரஸ்யம் கொண்டும் எழுதக்கூடியவர் . அல்புனைவை புனைவின் வடிவில் எழுதிப்பார்த்து அதில் வெற்றியும் அடைந்துள்ளார் அசோகமித்திரன் . ஒரு கேள்வியுடனோ , ஆச்சர்யத்துடனோ , அசாதாரணமான நிகழ்வுடனோ கட்டுரை தொடங்கி மெல்ல அதன் மையத்தை நோக்கி பயணித்து அதில் அவரும் ஒரு கதாபாத்திரமாக உள்ளே வந்தமர்ந்து , இடையில் நகைச்சுவைக்கான இடத்தையும் கொடுத்து , நம்மை அறிவு சார்ந்த ஒரு தளத்திற்கு உயர்த்தி , எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் கட்டுரையை முடித்துவிடுவார் . இத்தனையையும் அவர் தன்னுடைய எளிய மொழியில் - அளவான சொல் பயன்பாட்டில் மூலம் வாசிக்கும் எவராலும் புரிந்துகொண்டு அதே நேரம் அவரை பாதிக்கும் விதமாகவும் தன் படைப்பை கொடுப்பது மிகவும் கடினமான ஒன்று . தன் மொழிப்புலமையை - தன் இலக்கிய திறனை - முன்னிறுத்தாமல் தான் கூற வந்த கருத்தை எந்தவகையில் கூறினால் வாசகர்களுக்கு எளிதில் அது சென்றடையும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் தன் கட்டுரைகளை கொடுத்துள்ளார் . அசோகமித்திரன் இலக்கியத்தில் எளிமைக்கான ஒரு முன்னுதாரணம் . அதே நேரத்தில் எளிமை எத்தனை கடினமான ஒன்று என்பதும் அவரை போல எழுத எத்தனித்து தோற்று போனவர்க்ளுக்குத்தான் தெரியும் நான் உட்பட . அந்த தோல்வியின் மூலம் எந்த வருத்தமும் இல்லை மாறாக அவர் மீது வியப்பும் மரியாதையும் ஒவ்வொரு தோல்வியிலும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது .
அசோகமித்திரன் ஒரு தனி மனிதராகவும் - ஒரு இலக்கியவாதியாகவும் - ஒரு கலைஞனாகவும் - ஒரு கலாரசிகனாகவும் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் , ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்துள்ளார் . திரைப்படத்துறையில் பணியாற்றி - இலக்கியத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த போதும் அவருடைய கட்டுரைகள் இசை- இலக்கியம் - சினிமா - அரசியல் - வரலாறு - தத்துவம் - நாடகம் - விளையாட்டு என பல்வேறு துறைகளின் மீது ஒரு பறந்து விரிந்த சிறகைப்போல விரிந்துகிடக்கிறது . தொலைத்தொடர்பும் - கருவிகளும்- ஊடகங்களும் பெரிதும் உதவாத ஒரு காலகட்டதில் இத்தனை தளத்தில் இத்தனை தரவுகளை திரட்டி நினைவில் வைத்து எழுதுவது என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு இமாலய பணி . நம்ம ஊரின் சாவித்ரி பத்மினியை பேசிக்கொண்டே ஐரோப்பிய இயக்குனர் ட்ருபோ விடம் சென்றுவிடுவார் , இங்கு க நா சு வை பேசிக்கொண்டே பால்க்னர் - ஹெம்மிங்வே விடம் சென்றுவிடுவார் , S S வாசனின் ஒவ்வையார் படத்தின் எடிட்டிங் திறமையை பேசிக்கொண்டே பாலச்சந்தரின் மாற்று சினிமாவையும் பேசிச்செல்கிறார் , கேரளத்தில் நடந்த இந்திய இலக்கிய சம்மேளத்தை விவரித்துக்கொண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பிராங்பேர்ட் உலக இலக்கிய கூட்டத்திற்குள் சென்று ஒரு பதிப்பாளரின் மேல்கோட்டின் மேல் தான் சிந்திய காபியை பற்றி பேசுவார் . இப்படி அவருடைய கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கு ஒரு எல்லைக்கோடே இல்லாமல் நீண்டு வளர்ந்துகொண்டே செல்கிறது .
எந்த கட்டுரையிலும் ஒரு எழுத்தாளன் தன்னையும் தன் வாழ்வையும் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார் . ஏனெனில் அது கொஞ்சம் தவறினாலும் சுயசரிதைப்போல மாறிவிடும் . இங்கோ அசோகமித்திரன் பெரும்பாலான கட்டுரைகளில் தானும் கதைமாந்தர் போல உலாவந்தும் தன்னை தன் படைப்பிற்குள் மறைத்துக்கொண்டு தான் விவரிக்க விரும்பிய ஆளுமையை முன்னிறுத்தி படைத்ததால்தான் இது இன்றளவும் அனைவராலும் வியந்தது வாசிக்கப்படும் ஒரு படைப்பாக காலம் கடந்து நிற்கிறது . " எங்கள் வீட்டின் தொலைந்து போன பாதி பம்ப்பு செட்டை தேடி அலைந்த மூர் மார்க்கெட் நினைவுகளை எழுதும்பொழுது அதே மாதிரி பாதி பம்ப் ஒரு கடையிலும் அடுத்த கடையில் அதே பாதி பம்ப் கிடைத்து என்று வாசித்தவுடன் நம் முகத்தில் தோன்றும் புன்னகையை பிம்பம் போல பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாய் மாறிவிடுகிறது இந்த புத்தகம் . தனக்கு பிடித்த 5 படங்களை குறிப்பிடுகிறார் - தனக்கு மிகவும் பிடித்த நாவல் THE COUNT OF MONTE CRISTO என்றும் -தனது சொந்த விருப்பங்களையும் எந்த வித தயக்கமுமின்றி விமர்சங்களை கண்டுகொள்ளாமலும் எதார்த்தமாக பதிவிடுகிறார் .
சமகாலத்தில் தமிழ் இலக்கிய உலகில் நிகழும் இரண்டு சிக்கல்களை பற்றி ஒரு தீர்க்கதரிசி போல அன்றே அந்த தலைப்புகளில் விவாதிக்கிறார் . ஒன்று மொழிபெயர்ப்பு சர்ச்சை- இரண்டாவது தமிழ் படைப்பாளிகளும் தமிழ் படைப்புகளும் ஏன் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில்லை . மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள் என்றொரு கட்டுரை உள்ளது . தலைப்பை படித்தவுடன் யாரும் எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டாம் . கட்டுரையை முடிந்தால் முழுதும் வாசித்தபின் உங்களுக்கே புரியும் அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்று . தானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தான் தன்னையும் ஒரு துரோகியாகவே அவர் கருதுவதற்கு ஆணித்தனமான காரணத்தை அவர் இந்த கட்டுரையின் மூலம் முன்வைக்கிறார் . சமீபத்தில் சீனிவாச ராமானுஜம் ஒரு கூட்டத்தில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு வகையில் மூலத்தை அழிக்கும் செயல்பாடு என்று கூறியதற்கும் இந்த கட்டுரைக்கும் காலவெளியில் 50 ஆண்டுகள் இருந்தாலும் சிந்தனை அடிப்படையில் இருவரும் ஒரே தளத்தில்தான் பயணிக்கின்றனர் . இரண்டாவது விமர்சனத்தை எடுத்துக்கொண்டால் தமிழில் நாவல்களின் வரவுகள் குறைந்துவருவதும் - நாவல்களின் பேசு பொருளின் தரம் உலகளாவிய ஒன்றாக இல்லையென்றும் - தமிழ் இலக்கியம் பெரும்பாலும் சிறுகதை பக்கமாக சென்றுவிட்டது என்றும் உலக இலக்கிய சான்றுகளை வைத்து அவர் விவாதிக்கிறார் . அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தன் வாழ்நாளில் 40-50 நாவல்களை எழுதி நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்கள் இருக்கும் நேரத்தில் தமிழ் இலக்கியத்தில் ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் 20 சிறந்த நாவல்களை எழுதுவதே பெரும் சாதனையாக இருக்கும் பட்சத்தில் உலக இலக்கியத்தின் கவனத்திற்கு ஏங்குவது எப்படி ஞாயமாகும் . எழுதுவதற்கான இடமும் காலமும் நேரமும் பொருளாதார நிலைப்பாடும் மற்ற நாடுகளை காட்டிலும் தமிழ் இலக்கிய உலகில் கேள்விக்குரிய ஒன்று . இந்த கட்டுரையையே அசோகமித்திரன் நடேசன் பார்க் பெஞ்சில் அமர்ந்துதான் எழுதியிருப்பாரோ என்று யோசிக்கும்பொழுதும் , தன்னுடைய ஒரு சொந்த படைப்பை கூட பதிப்பிக்க விடாத அளவுக்கு வஞ்சகமும் துரோகமும் நிரைந்துள்ள ஒரு இலக்கிய உலகில் வாழ முடியாமல் தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட க நா சு வை பற்றிய அவருடைய கட்டுரையை வாசிக்கும்பொழுதும் அவர் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு விடையை அவருடைய கட்டுரைகளே சொல்லாமல் சொல்லிவிடுகின்றன .
இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் முன் நான் மூன்று புத்தகங்களை வாங்கிவிட்டேன் - folklore tales (ஏ கே ராமானுஜம் ), நந்தன் கதை (உத்திராபாதி ), SOPHIE'S CHOICE (WILLIAM STYRON ) . உங்களுக்கும் இது நிகழலாம் . கொஞ்சம் உங்களை கட்டுப்படுத்திக்கொண்டு வாசித்தால் எண்ணிக்கை ஒற்றை இலக்குடன் நின்றுவிடும் இல்லையேல் அது எல்லையில்லாமல் நீளும் வாய்ப்புள்ளது . இவையெல்லாம் தாண்டி இந்த புத்தகத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது இரண்டு சிறுகதைகள் போல எழுதப்பட்ட அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவ நிகழ்வுகள் . எதிர்பாராத நேரத்தில் நமக்கே தெரியாமல் நாம் சொல்லும் ஒரு சொல்லோ நம்முடைய ஒரு வெறுப்பின் உடல்மொழியோ மற்றொருவரை மனதளவில் பாதிக்குமாயின் அதற்காக நமக்குள் மனதார வருந்துவதை காட்டிலும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவரிடம் மன்னிப்பு கோரிவிடவேண்டும் . யாருக்கு தெரியும் நீங்கள் மன்னிப்பு கேட்க நினைக்கும்பொழுது அவர் இல்லாமலும் போகலாம் . இந்த புத்தகத்தை வாசித்த பிறகு எனக்குள் நிகழ்ந்த மாற்றமாக சுடுசொல் பேசுவதை குறித்துக்கொண்டேன் முடிந்தவரை பேச நினைப்பவர்களிடம் - மன்னிப்பு கேட்க நினைப்பவர்களிடம் உடனடியாக கேட்டுவிடுகிறேன் . யாருக்கு தெரியும் அசோகமித்திரனை போல மறுவாய்ப்பு நிச்சயமில்லாத தருணம் நமக்கும் வரக்கூடும் , அதுவே பின் எரியும் நினைவாக வாழ்நாள் முழுக்க நம்மை வதைக்க தொடங்கிவிடக்கூடும் .
"நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்து வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்றுதான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக்கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால் அடுத்தடுத்து வரும் இரு வாக்கியங்கள்கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான் எழுத்து உண்மையானது என்று நான் நினைப்பேன்" - அசோகமித்திரன் 🥹❤️